ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
கோலிவுட்டையும் தாண்டி முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடந்த 2019 ஆம் வருடம் ஜி.எஸ்.டி கவுன்சில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் தான் இசையமைத்த தனது படைப்புகளின் காப்புரிமையை முழுவதுமாக தயாரிப்பாளர்களிடம் கொடுக்காததற்காக ரூ.6.79 கோடி சேவை வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி ஏ.ஆர். ரஹ்மான் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதில் இசை படைப்புகளை தயாரிப்பாளர்களுக்கு வழங்கிய பின், நிரந்தரமான உரிமையாளர்கள் அவர்கள் தான். அதனால் தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதமானது. தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த நோட்டீஸை ஜிஎஸ்டி ஆணையர் அனுப்பியுள்ளதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி, ஜிஎஸ்டி கவுன்சில் அளித்த நோட்டீஸூக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்த ஜிஎஸ்டி ஆணையர், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று கூறினார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் எந்த நோக்கமும் இல்லை என்றும் விளக்கமளித்தார். அதனால் ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வாதங்களை கேட்டறிந்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் வழக்கு ஒன்றையும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதி, இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ்குமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார்.
அதன்படி வரி விதிப்பை எதிர்த்து ஜிஎஸ்டி மேல்முறையீட்டு அதிகாரியிடம் முறையீடு செய்ய ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், வரி விதிப்பது தொடர்பான நோட்டீஸ்க்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விளக்கம் அளிக்க ஜிவி பிரகாஷ்குமாருக்கும் நீதிபதி அறிவுறுத்தி இருக்கிறது.