மதிய நேர தூக்கத்தை மையமாக வைத்து மம்முட்டியின் புதிய படம்!
மோலிவுட் சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில், லிஜோ ஜோஸ் பெளிச்சேரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது.
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஏற்கெனவே ‘ஆமென்’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘இ.ம.யோ’, ‘ஜல்லிக்கட்டு’, ‘சுருளி’ ஆகிய படங்களை இயக்கி இருந்தார். இதில், ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் இந்தியா சார்பில், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடதக்கது. மேலும் கொரோனா சமயத்தில் வெறும் 19 நாட்களில் சுருளி என்ற படத்தை எடுத்து முடித்தார். இப்படம் கடந்த ஆண்டு சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது மம்மூட்டி நடிப்பில் இந்த ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்ற படத்தை உருவாக்கி இருக்கிறார். இது தமிழ், மலையாளம் என்று இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி இருக்குது. இந்தப் படத்தை நடிகர் மம்முட்டியே தனது மம்மூட்டி கம்பெனி என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இருக்கிறார்.
இந்த ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தின் திரைக்கதையை எஸ்.ஹரிஷ் எழுத, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் ‘கர்ணன்’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘பேரன்பு’, ‘புழு’ ஆகிய உள்ளிட்ட பல முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படத்தில் பெரும்பாலும் நிறைய தமிழ் நடிகர்களே நடித்துள்ளனர். அதுபோக தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் நடைபெறுவது போல் தான் கதை சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் அண்மையில் கேரள திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் மதிய நேர தூக்கத்தை மையமாக வைத்து உருவான இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.