அழியும் சென்னையின் அடையாளம்!!!
வடசென்னையின் அடையாளமாக விளங்கிய ‘அகஸ்தியா தியேட்டர்’, 1967-ம் ஆண்டு தண்டையார்பேட்டை-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மணிக்கூண்டு அருகே திறக்கப்பட்டது. கே.நஞ்சப்ப செட்டியார் என்பவர் யோசனையால் இந்தத் திரையரங்கம் தொடங்கப்பட்டது. சேலத்தில் வழக்கறிஞராக இருந்த அவர் பொறியாளராகவும் இருந்தார்.
மேலும் தேவி பிலிம்ஸ் என்கிற பெயரில் திரைப்படத் தயாரிப்பும் அவர்கள் குடும்பம் செய்தது. தமிழில் முதல் டெக்னிகலர் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்ற ஜெமினி கணேசன் நடிப்பில் வந்த ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்தை இவர்கள் தான் தயாரித்தது. மேலும் இயக்குநர் பாலுமகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’, நடிகை சுஹாசினி அறிமுகமான இயக்குநர் மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ ஆகிய படங்களையும் தயாரித்தார்கள்.
திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் இருந்ததால், திரையரங்கம் ஆரம்பிக்கலாம் என்று நினைததன் விளைவாக திருவெற்றியூர் நெடுஞ்சாலையில், 1967-ம் வருடம் அகஸ்தியா திரையரங்கம் கட்டப்பட்டது. அந்த நிலம் இவர்கள் குடும்பத்துக்குச் சொந்தமானது. சில வருடங்கள் கழித்து இவர்கள் குடும்பம் அண்ணாசாலையில் இன்னொரு பிரம்மாண்ட திரையரங்கைக் கட்டினார்கள். அதுதான் தேவி சினிப்ளக்ஸ். இந்த அரங்கம் கட்டப்பட்டு 50 வருடங்கள் ஆனது. இன்னும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.
ஆனாலும் இந்த முதன் முதலில் இந்த அகஸ்தியா தியேட்டரில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘பாமா விஜயம்’ படம் திரையிடப்பட்டது. அப்போது ஒரு டிக்கெட்டின் விலை 85 பைசா. அப்போது தனது திரைப்பயணத்தை தொடங்கிய அகஸ்தியா தியேட்டர், வடசென்னை பகுதி மக்களின் பொழுதுபோக்கு தலமாக விளங்கியது. வடசென்னை பகுதியில் முதல் முதலில் 70 எம்.எம். திரையுடன் அமைக்கப்பட்ட தியேட்டர் இதுதான். ஒரு நாளைக்கு 4 காட்சிகள் திரையிடப்பட்டது. அப்பகுதியில் கூலித்தொழிலாளர்கள் அதிகம் என்பதால் அங்குள்ள பெண்கள், வீட்டில் வேலை முடிந்தவுடன் பொழுதுபோக்குக்காக தியேட்டரில் சினிமா பார்க்க காலை 10 மணி காட்சிகளுக்கு சலுகை விலையில் டிக்கெட் வழங்கப்பட்டது. \
இந்த திரையரங்கில் தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களும், ரஜினி, கமலஹாசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் நடித்த படங்களும் அதிகளவில் திரையிடப்பட்டு உள்ளது. விஜய், அஜித், சூர்யா மற்றும் தற்போதைய இளம் நடிகர்களான சிலம்பரசன், கார்த்தி, சிவகார்த்திகேயன் என 4 தலைமுறை நடிகர்கள் நடித்த படங்கள் திரையிடப்பட்டு உள்ளது.
அந்த கால ரசிகர்கள் முதல் தற்போதை இளம் ரசிகர்கள் வரை அனைவரையும் கவர்ந்த தியேட்டராக அகஸ்தியா தியேட்டர் விளங்கியது. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் திரையிட்டபோது எம்.ஜி.ஆர். இந்த தியேட்டருக்கு வந்து சென்றுள்ளார்.
2015-ம் ஆண்டு மெட்ரோ ரயில் பணிக்காக தண்டையார்பேட்டை-திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. அப்போது ரோடு அருகே இருந்த அகஸ்தியா தியேட்டரின் முன்பகுதி மெட்ரோ ரயில் பணிக்காக இடம் எடுக்கப்பட்டதால் சுருங்கியது. வாகன நிறுத்த வசதி குறைவு, குறுகலாக பாதை உள்ளிட்ட அசவுகரியங்களால் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்தது. அதன்பிறகு கொரோனா ஊரடங்களால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஊழியர்கள் வேறு வேலை தேடி சென்றுவிட்டனர். இதனால் சரியான வருமானம் இன்றி கடந்த சில ஆண்டுகளாக கடும் நஷ்டத்தை சந்தித்து வந்ததால் தியேட்டரை நிரந்தரமாக மூட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக காட்சிகள் நிறுத்தப்பட்டு தியேட்டர் மூடியே கிடந்தது.
அகஸ்தியா தியேட்டரில் கடைசியாக டிக்கெட் விலை முதல் வகுப்பு சுமார் 30 ரூபாயும், கடைசி வகுப்பு 3 ரூபாய் எனவும் இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா ரசிர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய இந்த தியேட்டர், சினிமா ரசிகர்களிடம் இருந்து தற்போது விடைபெற்று உள்ளது. தற்போது இந்த தியேட்டர் இடிக்கப்பட்டு வருது. விஷயம் கேள்வி பட்டு பலரும் அந்த இடத்திற்கு சென்று செல்ஃபி எடுத்து வருகிறார்கள்