விடுதலை படத்தின் அனுபவம் குறித்து விவரிக்கும் பவானி ஸ்ரீ!

விடுதலை படத்தின் அனுபவம் குறித்து விவரிக்கும் பவானி ஸ்ரீ!

 

வெற்றிமாறன் இயக்கத்தில், RS Infotainment Elred குமார் வழங்கும் ‘விடுதலை பாகம் 1’ படத்தில் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியராகவும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மார்ச் 31, 2023 தமிழ்நாடு முழுவதும் வெளியாகிறது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை பவானி ஸ்ரீ உற்சாகமாகப் பகிர்ந்துள்ளார்.

நடிகை பவானி ஸ்ரீ கூறும்போது, ​​“கிராமத்திற்கு கடமைக்காக வரும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளுடன் அழகான பிணைப்பை உருவாக்கும் பழங்குடியின பெண்ணாக நான் நடிக்கிறேன். வெற்றிமாறன் சாருடன் பணிபுரிவது என்பது எந்த நடிகருக்கும் நீண்ட நாள் கனவு, அதற்கு நானும் விதிவிலக்கல்ல. என்னுடைய இரண்டாவது படத்திலும் அது நடந்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்தப் படத்தில் கமிட்டானபோது இருந்த அதே உற்சாகத்தை இப்போதும் உணர்கிறேன். வெற்றிமாறன் சார் சிறந்த இயக்குனர். தனித்துவமான கதைகளை உருவாக்கியவர். மேலும் கதையில் வரும் கதாபாத்திரங்களை அவர் உருவாக்கும் விதமும் தனித்தன்மை வாய்ந்தது. சிறந்த இயக்குனராக மட்டுமில்லாமல் நல்ல மனிதர். அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பின் போது, ஒரு செடி அல்லது பூச்சி கூட தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்ள விரும்பினார். இது எனக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. உணர்வுப்பூர்வமாக தன் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் அவர் சிறந்த இயக்குனர். இந்தப் படத்தில் சூரி சார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகராக இருந்து சீரியஸான கதையின் ஹீரோவாக அவர் மாறியிருப்பது அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தரும்”.

அடர்ந்த காடுகளுக்கு இடையே படப்பிடிப்பில் தனது மறக்க முடியாத அனுபவத்தைப் பற்றி நடிகை பவானி மேலும் கூறுகையில், “ஒட்டுமொத்த படப்பிடிப்பே மறக்க முடியாதது. காடுகளின் இந்த சூழலுக்கு நான் புதியவள். அந்த சூழல் எனக்கு ஒரு தியான அனுபவத்தை கொடுத்தது. இது எனக்கு ஒரு நிதானமான மற்றும் இனிமையான அனுபவத்தை பரிசளித்து என்றுமே எனக்கு மறக்க முடியாததாக அமைந்தது”.

தனக்கான ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது பற்றி நடிகை பவானி கூறும்போது, “இது உண்மையா என்பது எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் இரண்டு பாடல்களிலும் நான் இருக்கிறேன். இதற்கான பாராட்டுகளைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அற்புதமான பாடல்களால் படத்தை அழகுபடுத்தியிருக்கும் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா சாருக்கு எல்லாப் புகழும் சேரும்” என்றார்.

இசை மேதைகளின் குடும்பத்தைச் சேர்ந்த பவானிக்கு ‘விடுதலை’யில் ஒரு பாடலைப் பாட வேண்டும் என்ற ஆசை இருந்ததா? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் புன்னகையுடன் மறுத்தார். “இல்லை! என் குடும்பத்தில் நான்தான் ‘ODD ONE’. எனது குடும்பத்தினர் என்னிடம் வற்புறுத்திய போதிலும், நான் இசைப் பயிற்சியை சரியாக மேற்கொள்ளவில்லை.

May be an image of 3 people, beard, people standing and outdoors

படம் குறித்தான அனுபவத்தை பகிர்ந்த பவானி, “நான் இன்னும் படத்தை முழுதாக பார்க்கவில்லை. ஆனாலும், படக்குழுவில் படம் பார்த்த அனைவரும் ‘விடுதலை’ நன்றாக வந்திருப்பதாகத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். பார்வையாளர்களுடன் படத்தைத் திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளேன். நல்ல கதைகளை நிச்சயம் பார்வையாளர்கள் மதிப்பார்கள். எண்டர்டெயின்மெண்ட் என்பதையும் தாண்டி, நல்ல படங்கள் வரும்போது அதை வரவேற்றுக் கொண்டாடுவார்கள். நிச்சயம் அது ‘விடுதலை’ படத்திற்கும் நடக்கும்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *