எனக்குப் பிடித்த இயக்குநர் விஷ்ணு! ‘நேசிப்பாயா’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர்யா!
XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில்,
தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது,
“பிஸி ஷெட்யூலில் நேரம் ஒதுக்கி வந்த நயன்தாரா மேம்க்கு நன்றி. ஆர்யா சாருக்கும் நன்றி. எங்கள் குடும்பத்திற்கே எமோஷனலான நாள் இது. ‘மாஸ்டர்’ படம் தயாரிக்கும்போது நிறைய சவால்கள் இருந்தது. ஆனால், விஜய் சார் கரியரில் அது சிறந்த படம் எனும்போது நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றும் இல்லை என்று நினைத்தோம். அதற்கடுத்த பெரிய படம் என்னுடைய மருமகன் ஆகாஷூக்கு அமையும் என்று நினைக்கவில்லை. என் மகள் சிநேகா, ஆகாஷை விரும்புகிறேன் என்று சொன்னதும் நாங்கள் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சவால்களை வாய்ப்பாக மாற்றி கடின உழைப்பை நாம் விரும்பும் ஒன்றுக்கு தர வேண்டும். நடிப்பில் அதெல்லாம் தாக்குப் பிடிப்பீர்களா என்று ஆகாஷிடம் கேட்டேன். அந்த நம்பிக்கை ஆகாஷிடம் இருந்தது. ஆகாஷை பெரிய அளவில் அறிமுகம் செய்ய வேண்டும், அவரிடம் இருக்கும் ப்ளஸை திரையில் சரியாக கொண்டு வர வேண்டும். இதற்கெல்லாம் சரியான இயக்குநர் விஷ்ணு வர்தன் தான் என என்னுடைய மகள் முடிவெடுத்து மும்பை போய் அவரைப் பார்த்து பேசி சம்மதிக்க வைத்தாள். விஷ்ணு வர்தனும் கதையை சிறப்பாக செய்து கொடுத்துள்ளார். அதிதியும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். யுவன் இசையில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. தொழில்நுட்ப குழுவினர் சிறந்த பணி கொடுத்துள்ளனர். படம் நன்றாக வர வாழ்த்துக்கள்”.
நடிகை நயன்தாரா பேசியதாவது,
“‘நேசிப்பாயா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஆகாஷ் முரளிக்கு வாழ்த்துகள்! எனக்கு அதிதி ஷங்கரை ரொம்பவே பிடிக்கும். மிகத் திறமையானவர். நான் பொதுவாக எந்த விழாவுக்கும் போக மாட்டேன். ஆனால், இது ரொம்பவே ஸ்பெஷல். இயக்குநர் விஷ்ணு வர்தன், அனுவுடைய படம் இது. பதினைந்து வருடமாக எனக்கு இருவரும் நல்ல பழக்கம். என்னுடைய குடும்பம் போலதான் இவர்கள். அதனால், இந்த நிகழ்வுக்கு என்னால் நோ சொல்ல முடியவில்லை. இவர்கள் ஆகாஷை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. ரொம்ப நாள் கழித்து ஒரு ஸ்வீட்டான லவ் ஸ்டோரி பார்க்க இருக்கிறீர்கள்” என்று வாழ்த்திவிட்டு படத்தில் ஆகாஷ் முரளியின் ஃப்ர்ஸ்ட் லுக்கை லான்ச் செய்தார்.
நடிகர் ஆர்யா பேசியதாவது,
“எனக்குப் பிடித்த இயக்குநர் விஷ்ணு இயக்கத்தில் ஆகாஷ் அறிமுகம் ஆவதில் மகிழ்ச்சி. கொடுத்த காசில் ஸ்டைலிஷ்ஷாக படம் எடுப்பார் விஷ்ணு. அனுவுடைய காஸ்ட்யூமும் சிறப்பாக இருக்கும். இது எங்களுக்கு குடும்ப நிகழ்வு போலதான். படக்குழுவுக்கு வாழ்த்துகள்” எனச் சொல்லி ’நேசிப்பாயா’ படத்தில் அதிதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அறிமுகப்படுத்தினார்.
இயக்குநர் விஷ்ணு வர்தன் பேசியதாவது,
“விழாவிற்கு வந்துள்ள நயன், ஆர்யா, தயாரிப்பாளர்கள் பிரிட்டோ சார், சிநேகா எல்லோருக்கும் நன்றி. இந்தப் படம் ஒரு லவ் டிராமா. கதையில் ஆக்ஷனும் உள்ளது. ஆகாஷூக்கு இது முதல் படம் போல இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார். அதிதி பயங்கர எனர்ஜியாக உள்ளார். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்”. என்றார்.