இது தான் என் முதல் படம்! ‘ஹரா’ படத்தின் டீசர் நேற்று வெளியிட்டு விழாவில் நடிகர் மோகன்!

இது தான் என் முதல் படம்! ‘ஹரா’ படத்தின் டீசர் நேற்று வெளியிட்டு விழாவில் நடிகர் மோகன்!

 

தமிழ் திரையுலகில் அதிக எண்ணிகையில் வெள்ளிவிழா படங்கள் தந்த, நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் ‘ஹரா’. கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். மாறுபட்ட களத்தில், ஆக்ஷன் அதிரடிப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள நடைபெற்றது.

இந்நிகழ்வில்…

 

நாயகி அனுமோல் பேசியதாவது…

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள், எனக்கு நீங்கள் தந்து வரும் ஆதரவிற்கு நன்றி. இந்த வாய்ப்பு தந்த விஜய் ஶ்ரீ சாருக்கு நன்றி. நான் மோகன் சார் ஆக்டிங் பார்த்து தான் நடிக்க கற்றேன். அவர் பாடல்கள் எல்லாம் எனக்கு அவ்வளவு பிடிக்கும். எல்லாப் படத்திற்கும் கதை கேட்டால் தான் எக்ஸைட் ஆவார்கள், ஆனால் இந்தப்படத்தில் மோகன் சார் நடிக்கிறார் என்றவுடனே நான் எக்ஸைட் ஆகிவிட்டேன். அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படத்தில் அசத்தியுள்ளார். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். இயக்குநர் மிகக் கடினமாக உழைத்துள்ளார். ஆக்சிடெண்ட்டில் அவர் உடம்பில் 12 பிளேட் வைத்திருக்கிறார்கள், ஆனாலும் எப்போதும் படம், படம் என்றே இருப்பார். அவர் மனதிற்கு கடவுள் பெரிய வெற்றியைத் தருவார். எப்போதும் தமிழில் எனக்கு ஆதரவு தந்து வருகிறீர்கள், இப்படத்திற்கும் அதே ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன், நன்றி.

இயக்குநர் விஜய் ஶ்ரீ ஜி பேசியதாவது…

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த மேடை ஏறி நிற்பேன் என நினைத்து பார்க்கவில்லை. காரில் போகும் போது ஒரு ஆக்ஸிடெண்ட், மூன்று நாள் கழித்து தான் எனக்கு நினைவே வந்தது. மோகன் சார் குடும்பத்தோடு என்னைப் பார்க்க வந்துவிட்டார். எல்லோருக்கும் குடும்பம் தான் முக்கியம். 16 லட்சம் செலவானது. மோகன் சார், மோகன் ராஜ் சார் தான் பார்த்துக் கொண்டார்கள். மோகன் சார் மிகப்பெரிய ஆளுமை, ஆனால் ஒரு துளி கர்வம் கூட அவரிடம் இருக்காது. இந்தப்படத்திற்காக பேசும்போது, அவருக்கு என்ன மார்க்கெட் இருக்கிறது, அவரை வைத்து ஏன் படமெடுக்கிறீர்கள் என்று கேட்டார்கள், ஆனால் கோயம்புத்தூரில் ஷூட் செய்யும்போது எங்கு போனாலும் 500 பேர் அவரைப் பார்க்க கூடி விடுவார்கள். அவர் வந்தால் தெரியும் அவர் மார்க்கெட் என்னவென்று. எல்லாவற்றையும் கடந்து அவரின் மனிதம் என்னை பிரமிக்க வைத்தது. அவர் தான் என்னை உயிர்ப்பித்தார். நாம் பல இடங்களில் சீட் பெல்ட் போடுவதில்லை, கவனம் இல்லாமல் இருக்கிறோம், அதற்காகத் தான் இதைச் சொல்கிறேன். மோகன் சார் நடிப்பில் கலக்கியுள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியுள்ளார். அவருக்கு இந்த ‘ஹரா’ மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும், நன்றி.

நடிகர் மோகன் பேசியதாவது…

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். எத்தனையோ படம் நடித்திருக்கலாம், ஆனால் நான் பெருமையாக சொல்லிக்கொள்கிறேன், நான் நடித்த படங்கள் எல்லாம் லிஸ்ட் வைத்துக் கொண்டதே இல்லை. ‘ஹரா’ தான் என் முதல் படம். நான் நடிக்க ஆரம்பித்த போது, எனக்கு என மார்க்கெட் வாய்ப்பு வந்த பிறகு, எப்போதும் என்னால் முடிந்த அளவு புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளேன். அவர்களுக்கு வாய்ப்பு தந்தால் பசியோடு வெறியோடு படம் செய்வார்கள் என்று தான் நினைத்துள்ளேன். என்னுடைய பாட்டுகள் பற்றி எல்லோரும் சொல்கிறார்கள் ஆனால் அதற்கு காரணம் இசைஞானி, அவர் யாருக்கும் வஞ்சனை இல்லாமல் பாட்டு தந்துள்ளார். எல்லா நடிகர்களுக்கும் ஒரே மாதிரி பாடல் தந்துள்ளார். ஆனால் அந்தப் பாடல்களில் என்னை ரசிக்கிறார்கள் என்றால் அதை ஆர் சுந்தர்ராஜன் மாதிரி இயக்குநர்கள் இயக்கியது தான் காரணம். அவர்கள் மக்கள் உணர்ந்து ஃபீல் செய்வது மாதிரி படம் எடுத்து வெற்றிப்பெறச் செய்தார்கள். அதனால் தான் மக்கள் என்னை தங்கள் பிள்ளை போல் கொண்டாடினார்கள். இந்தப்படத்தில் முதலில் பாடல்கள் இல்லை ஆனால் மூன்று பாடல்கள் வைத்துவிட்டார், மூன்று பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். மணிவண்ணன் மாதிரியான அறிவு கொண்டவர், மணிவண்ணன் தான் பேப்பரில் கதை இல்லாமல் எடுப்பார். ராஜிவ் மேனன் சாரை கேமராமேனாக பார்த்திருக்கிறேன் அவருடன் இணைந்து நடித்துள்ளேன். சிங்கம்புலி, அனுமோல் முதலாக இணைந்து நடித்த அனைவருக்கும் என் நன்றிகள். படம் பாருங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள், நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *