நடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் இல்லை! “இனிமேல்” ஆல்பம்  பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

நடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் இல்லை! “இனிமேல்” ஆல்பம்  பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

 

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் வரிகளில்,  ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் “இனிமேல்” ஆல்பம்  பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  பாடல் வெளியீட்டைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் பதிலளித்தனர்.  இந்நிகழ்வில்

இசையமைப்பாளர் மற்றும் நடிகை  ஸ்ருதிஹாசன் பேசியதாவது,

எல்லோருக்கும் வணக்கம். முதலில் நான் “இனிமேல்” என்கின்ற இந்தப் பாடலை ஆங்கிலத்தில் தான் எழுதத் துவங்கினேன். எழுதத் துவங்கும் போதே ரிலேஷன்ஷிப் தொடர்பாக எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. ரிலேஷன்ஷிப் என்பது எப்படி ஒரு Loop ஆக செயல்படுகிறது. அந்த உறவுகளுக்குள் நிகழும் Ups And Downs இவைகளைப் பற்றியும் சொல்ல முற்பட்டேன். பின்னர் எனக்கு ஒரு கட்டத்தில் அந்த ‘இனிமேல்” என்கின்ற வார்த்தையைப் பின் தொடர்ந்து தமிழில் இதை எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் மேலெழுந்தது. பின்னர் என் அப்பா இதற்குள் வந்தார். அவரே ‘இனிமேல்’ பாடலின் முழு தமிழ் வரிகளையும் எழுதினார். இவ்வாறு தான் “இனிமேல்’ உருவாகி இன்று இந்த மேடையில் இருக்கிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களை எப்படி தேர்ந்தெடுத்தேன் என்று கேட்டால், விக்ரம் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் என்று நினைக்கிறேன்.  ஒரு முறை இவரை கேமராவில் பார்க்கும் போது இவரது தோற்றம் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அதிலிருந்து தான் இந்த எண்ணம் உதயமானது.

”இனிமேல்” பாடல் ஆல்பத்தின் மூலம் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இது நான்கு நிமிடத்திற்குள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஆழத்தை சொல்வதற்கான ஒரு சிறு முயற்சி தான்.  ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்  நிறை குறைகளை கூறுவதன் மூலம், இதைப் பார்க்கும் பார்வையாளர்கள் அவர்களின் ரிலேஷன்ஷிப்பை இதன் மூலம் சீர் தூக்கிப் பார்ப்பார்கள் என்கின்ற ஒரு சிறு நம்பிக்கை தான். எங்கள் இருவரின் காம்போ அப்பாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் எப்போதும் மிக நேர்மையாக கருத்து சொல்லுவார். அவருக்கு எங்கள் இணை பிடித்திருந்தது என்றே கூறினார். இவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் இயக்குநர் இதில் நடித்திருப்பது என் அதிர்ஷ்டம் தான். நான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்-க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  காதல் என்பது ஒரு டெலூஷன் என்பார்கள்.  அது நிறைவடையவில்லை என்றால் அது ஒரு மாயாவாகவே எஞ்சிவிடும். ஆனால் அது நிறைவடைந்துவிட்டால் அந்த மொமண்ட் Dreams Comes true” மொமண்ட்.  இது Delution-ல் இருந்து Solution நோக்கி காதல் நகரும் இடம் என்று கூறுவேன்” என்று பேசினார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும் போது,

எல்லோருக்கும் வணக்கம். நான் ஏற்கனவே பல இன்டர்வியூக்களில் சொல்லி இருக்கிறேன். எப்படியாவது நடித்தே ஆக வேண்டும் என்கின்ற எண்ணம் எல்லாம் எனக்குக் கிடையாது. முதலில் இனிமேல் ஆல்பம் பாடல் தொடர்பாக நடிக்க வேண்டும் என்று ஸ்ருதிஹாசன் என்னை அணுகிய போது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருந்தது, மேலும் நாம் ஏன் நடிக்க வேண்டும் என்கின்ற கேள்வியும் என்னுள் எழுந்தது. அந்த கேள்வியுடன் தான் அவர்களுடனான சந்திப்பு நிகழ்ந்தது.

அங்கு எனக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்தது, அந்தக் கதையை மிகவும் இயல்பாக அவர்கள் விவரித்த விதம் தான்.  அப்பொழுது எனக்கு ஏன் நடிக்கக்கூடாது என்கின்ற எண்ணமும் எழுந்தது. எனக்கு கமல் சார் அவர்களை எவ்வளவு பிடிக்கும் என்பதை பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறேன். தமிழ் சினிமாத் துறையில் இருந்து வரும் கடந்த 9 ஆண்டுகாலத்தில் நான் அவரைப் பற்றித் தான் அதிகம் பேசியிருப்பேன் என்று நினைக்கிறேன்.  நான் நடித்து என்னுடைய உருவம் திரையில் தோன்றப் போகும் ஓரிரு கணங்களில் திரையின் பின்னால் அவரின் குரல் ஒலிக்கப் போகிறது என்கின்ற எண்ணமே என்னை சிலிர்க்கச் செய்தது. மேலும் என் திரைப்பயணத்தில் அது ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பாக இருக்கும் என்றும் தோன்றியது. அதன் பிறகு தான் நடிக்க சம்மதித்தேன்.

இருப்பினும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற முதல் நாளே ஸ்ருதிஹாசன் அவர்களிடம், நீங்கள் உங்கள் முடிவை இன்று மாலையே மாற்றிக் கொள்ள நேர்ந்தாலும் நேரலாம். எனக்கு அதுகுறித்து ஒரு வருத்தமும் இருக்கப் போவதில்லை. எனவே எதற்கும் ஒரு பேக்-அப் நடிகர் ஒருவரை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்றும் கூறி இருந்தேன்.  படப்பிடிப்பு தளத்தில் படத்தின் இயக்குநர் துவாரகேஷ், மற்றும் அவரின் குழுவினர் என அனைவருமே மிகவும் நட்பாக பழகினார்கள்.  அதனால் நடிப்பது என்பது மிகவும் சவால் நிறைந்த விஷயமாக தோன்றவில்லை.

உண்மையாகவே நடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் அந்த அளவிற்கெல்லாம் இல்லை.  உண்மையாகவே எனக்கு நடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் இருந்திருந்தால் எனக்கு மிகவும் பிடித்த தமிழ்ப்படம் பொல்லாதவன். அப்படத்தின் கதையைப் போல் ஒரு கதையினை ரெடி செய்து, என் அசோசியேட் இயக்குநரைக் கொண்டு அதை இயக்க வைத்து அதில் நானே நடித்திருப்பேன். ஆனால் எனக்கு அப்படி எல்லாம் எந்த ஆசையும் இல்லை.

ஆக நடிக்க சம்மதித்ததற்கு 3 காரணங்கள் தான். மூன்று நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருந்தது முதற் காரணம். கமல்ஹாசன் சார் இரண்டாம் காரணம், ஸ்ருதிஹாசன் மற்றும் அவரின் குழுவினர் 3வது காரணம்.

நான் சோசியல் மீடியாவில் இல்லை என்பதால், பர்ஸ்ட் லுக் வெளியானதை கவனிக்கவில்லை. ஆனால் சற்று பதட்டமாகத்தான் இருந்தது.  மாநகரம் படம் வெளியாகும் போது எனக்கு இந்த பதட்டம் இல்லை. ஏனென்றால் அது எனக்குத் தெரிந்த துறை. எனக்குப் பிடித்த வேலை என்பதால் மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்பினேன். ஆனால் நடிப்பு என்பது ஸ்ருதி மற்றும் அவரின் குழுவினர் என் மீது வைத்த நம்பிக்கை. அதனால் ஒரு பதட்டம் இருந்தது. என் உதவி இயக்குநர்களிடம் கேட்டேன்.  சில மீம்ஸ் காட்டினார்கள்” என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *