என்னிடம் பாரதிராஜா கோபித்துக் கொண்டார் !‘கள்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் வெற்றிமாறன்!

என்னிடம் பாரதிராஜா கோபித்துக் கொண்டார் !‘கள்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் வெற்றிமாறன்!

 

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு தயாரிப்பில்  இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில் இசையமப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாரதிராஜா இணைந்து நடித்துள்ள ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் வெற்றிமாறன், லிங்குசாமி பேரரசு போன்ற இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில்,

இயக்குநர் லிங்குசாமி, “இதேபோல ஒரு ஆடியோ ஃபங்கனில் ஜிவி பிரகாஷைப் பார்த்துவிட்டு ஹீரோ போல இருக்கிறார் என்று சொன்னேன். ரூட்டை மாற்றி விட்டேன் போல. இப்போது பார்த்த இந்தப் பாடலில் அவ்வளவு அருமையாக நடித்துள்ளார். ’பொல்லாதான்’ படத்தில் தனுஷ் நடித்த அளவிற்கு ஜிவி நடிப்பில் மிரட்டியுள்ளார். ஜிவி பிரகாஷ்- இவானா ஜோடி நன்றாக உள்ளது. இந்த விழாவிற்கு நான் வர முக்கியக் காரணம் பாரதிராஜா. அவரைப் பார்த்துதான் நாங்கள் சினிமாவுக்கு வந்துள்ளோம். அவருக்கு சீக்கிரம் விழா எடுக்கவுள்ளோம். பாரதிராஜா சாரும் பாதுகாக்கப்பட வேண்டிய அதிசயம். உங்கள் பயோபிக்கும் சீக்கிரம் யாராவது எடுப்பார்கள். பாரதிராஜா அருகில் உட்கார தகுதியானவர் வெற்றிமாறன். எனக்குப் பிடித்த இயக்குநர் அவர். ஷங்கர் என்ற பெயர் யானை மாதிரியான பிரம்மாண்டம் கொண்டது. அந்தப் பெயர் கொண்ட இயக்குநர், படக்குழுவுக்கு வாழ்த்துகள்!”

இயக்குநர் வெற்றிமாறன், “’கள்வன்’ படத்துக்கும் எனக்கும் சில தொடர்புகள் உள்ளது. நான் விடுதலை படத்தில் பாரதிராஜா சார் தான் நடிக்க வேண்டும் என முடியெல்லாம் வெட்டி லுக் டெஸ்ட் பண்ணேன். நான் லொகேஷன் பார்க்க சென்ற பிறகு அவர் வேண்டாம் என நினைத்தேன். அதற்கு என்னிடம் பாரதிராஜா செல்லமாக கோபித்துக் கொண்டார். அதன்பிறகு கொஞ்ச நாள் கழித்து, இதே முடியோடு என்னை வைத்து ஒருத்தர் படம் எடுக்கப் போறாருன்னு சொன்னாரு. அது தான் ‘கள்வன்’ படம். நாங்க ‘விடுதலை’ படம் ஷூட் பண்ண இடத்தில் தான் ‘கள்வன்’ படமும் ஷூட் பண்ணினார்கள். காட்டில் படப்பிடிப்பு என்பது ரொம்ப கஷ்டம். ஒளிப்பதிவாளருக்கு எவ்வளவு சவால் இருந்திருக்கும் என்பது தெரியும். ஒரு படத்துக்காக காத்திருப்பது என்பது மற்றவர்களை விட இயக்குநருக்கு ரொம்ப சவாலாக இருந்திருக்கும். 6 மாதம் வரை ஒரு நம்பிக்கை வரும். பின் போகும், திரும்ப நம்பிக்கை வரும் என பல விஷயங்கள் உள்ளது.
நம்ம யானையை வைத்தோ, டைனோசரை வைத்தோ படம் எடுத்தாலும் திரைக்கதையும், கதையும் நல்லா இருந்தா மட்டும் தான் படம் ஓடும். ஜிவி நடிகராக சிறப்பாக பரிணமித்து வருகிறார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.

இயக்குநர் பாரதிராஜா, “இயக்குநர் ஷங்கர் பிடிவாதக்காரன். நிச்சயம் அந்த பிடிவாதம் ஜெயிக்கும். சினிமாவில் அவனுக்குப் பெரிய இடம் காத்திருக்கிறது. இவானாவை ஒருநாள் திட்டிவிட்டேன். திறமையான நடிகை அவர். ஜிவி நல்ல இசையமைப்பாளர், நடிகர் அதைத்தாண்டி நல்ல மனிதர். வேறொரு டைமன்ஷனில் ஜிவியைப் பார்க்கலாம். இவானா சிறப்பாக நடித்துள்ளார். வெற்றிமாறன் போன்ற சிறந்த இயக்குநர் இங்கு இருப்பது சந்தோஷமான விஷயம்”.

நடிகர் ஜிவி பிரகாஷ், ” இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ பாரதிராஜா சார்தான். அவருக்கு நானும் தீனாவும் வில்லனாக நடித்துள்ளோம். இந்தப் படத்தில் அவர் நடிப்புக்காக நிச்சயம் தேசிய விருது வாங்குவார். அவருடன் நாங்கள் இருந்த நேரத்தை பொக்கிஷமாக வைத்திருப்போம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். அவரும் ராஜா சாரும் தமிழ் சினிமாவின் கிராமர் புக், என்சைக்ளோபீடியா. இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அதை நீங்கள் படம் வரும்போது புரிந்து கொள்வீர்கள். இவானா, தீனா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் டில்லி பாபு சார், சக்திவேலன் சாருக்கு நன்றி. ஏப்ரல் 4 ரிலீஸ் தேதியும் சிறப்பாக அமைந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *