அறிமுக இயக்குனர் விவேக் ராஜாராம் இயக்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!
மில்லியன் ஸ்டுடியோஸின் எம்.எஸ்.மன்சூர், திரைப்பட ஆர்வலர்களுக்கு இதுவரை இல்லாத சினிமா அனுபவத்தை அளிக்கும் வகையில் ’வெப்பன்’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். தற்போது அவரின் தயாரிப்பில் ‘சிரோ’ திரைப்படம் அடுத்ததாக உருவாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் பேண்டசி ஜானரில் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடன் உருவாக இருக்கிறது. மலையாளத்தில் ’பதினெட்டாம் பாடி’, ’வாலாட்டி’, ’பிரார்த்தனா சாப்ரியா’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட்கள் மூலம் பிரபலமான அக்ஷய் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கமர்ஷியல் பைலட்டான பிரார்த்தனா சப்ரியா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ரோகிணி, ’போர்தொழில்’ படப்புகழ் லிஷா சின்னு, ’சூப்பர் டீலக்ஸ்’ புகழ் நோபல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 27 – காலை எளிய பூஜையுடன் தொடங்கியது. இந்தப் பூஜையில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். விவேக் ராஜாராம் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு விளம்பரப்படங்கள் இயக்குவது மற்றும் டிசைனராகவும் பணிபுரிந்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.
படம் குறித்து தயாரிப்பாளர் எம்.எஸ்.மன்சூர் கூறும்போது, “எங்கள் ‘சிரோ’ படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஒரே ஷெட்யூலில் முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மில்லியன் ஸ்டுடியோவில் உள்ள நாங்கள் எப்போதும் உயர்தர தொழில்நுட்ப அம்சத்துடன் நல்ல கதையம்சம் சார்ந்த திரைப்படங்களையே உருவாக்க விரும்புகிறோம். எங்களின் முதல் தயாரிப்பான ’வெப்பன்’ படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் புரோமோ ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதுபோலவே, ‘சிரோ’ திரைப்படமும் மூலம் சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுப்பதற்காக சிறந்த சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ்/அனிமேஷன் கலைஞர்களை இந்தப் படத்தில் பணிபுரிய வைத்துள்ளோம்” என்றார்.