‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் முதல் பாடலை வெளியிட்ட படக்குழுவினர்!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இன்னும் சரியாக ஒரு மாதத்தில் தீபாவளி வெளியீடாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் முதல் பாடல் வெளியீடும் பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னை சத்யம் சினிமாசில் இன்று நடைபெற்றது. ‘ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மாமதுர’-யை இன்று மதியம் 12.12 மணிக்கு இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் இணையத்தில் வெளியிட்டார். எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது.
அனைவருக்கும் வணக்கம், திகட்டாத பாடல் என்று இன்று வெளியிடப்பட்ட பாடலை சொன்னார்கள். அப்படிப்பட்ட ஒரு ஆல்பமே பண்ணியிருக்கிறோம். இந்த திரைப்படத்தை கண்டிப்பாக தியேட்டரில் வந்து பாருங்கள். கார்த்திக் சுப்பராஜ் உடன் படம் பண்ணும் போது எனக்கு தனி ஸ்பேஸ் கிடைக்கிறது. கார்த்திக் சார் எனக்கு மிகப்பெரிய ஆதரவை அளிப்பவர். நல்ல இசை கொடுத்திருக்கிறேன் என்று நம்புகிறேன். நான் பணியாற்றிய படங்களில் மிகவும் பிடித்தவற்றில் இதற்கு தனி இடம் உண்டு. இந்த படம் வேறு மாதிரி இருக்கும். எஸ் ஜே சூர்யா மற்றும் லாரன்ஸ் இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இது உங்களுக்கு கண்டிப்பாக கனெக்ட் ஆகும், நன்றி.
நடிகர் மற்றும் இயக்குநர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் உங்களிடம் ஒப்படைக்கிறோம். எல்லைகளை தாண்டி ரசிகர்களை சென்றடையும் விஷயம் இப்படத்தில் உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் படம் எந்த அளவு எதிர்பார்ப்புகளை உருவாக்கும் என்று நான் பார்த்துள்ளேன். அதிகம் பேசாத சந்தோஷ் நாராயணன் அவர்களே இந்த மேடையில் நிறைய பேசியுள்ளார். இந்த படம் அவ்வளவு பேச வைத்துள்ளது. லாரன்ஸ் சார் நல்ல மனிதர். இந்த படத்தில் அவருடன் பணியாற்றியது ரொம்ப சந்தோஷம். கார்த்திக் சுப்பராஜ் சார் படைப்பும் காட்சிகளும் அப்படி இருக்கும். இறைவன் நல்ல நல்ல படைப்புகளை என்னை நோக்கி அனுப்பி வைக்கிறார். நான் இங்கு ஒரு நல்ல நடிகனா இருப்பதற்கு ‘இறைவி’ படம் மிகப்பெரிய காரணம். அதற்காக கார்த்திக் சுப்பராஜ் சார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நிறைய பேச வேண்டியது இருக்கிறது. கண்டிப்பாக பேசுவோம். இந்த படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது…
வந்திருக்கும் பத்திரிக்கையாளர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மேல் அன்பு செலுத்தும் என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. ‘ஜிகர்தண்டா 1’ நான் பண்ணவேண்டியது. கதிரேசன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் கதை சொன்னார்கள். தெலுங்கு படத்தில் நான் பணியாற்றிக் கொண்டு இருந்ததால் அந்தப்படத்தை என்னால் செய்ய முடியவில்லை. நான் ரொம்ப மிஸ் பண்ணிவிட்டேன் என்று கவலைப்பட்டேன். அதற்கு கடவுள் கொடுத்த வாய்ப்பு தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. எனக்கு வாழ்க்கையில யாரெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்களோ அவர்களை நான் குரு என்று தான் சொல்லுவேன். பாலசந்தர் சார் கூட ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறேன். ரஜினி சாரை நான் குரு என்று தான் சொல்லுவேன். கார்த்திக் சுப்பராஜும் இப்போது குரு தான். அவர் என்ன சொன்னாரோ அது தான் இந்தப்படம். கார்த்திக் சுப்பராஜ் இந்தப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கி உள்ளார். படப்பிடிப்பு நடைபெற்ற இடம் ஒன்றில் மக்களுக்காக சாலை அமைத்து தந்துள்ளார்கள். அடுத்தவர்களுக்கு உதவிய காரணத்திற்காகவே இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும். சந்தோஷ் நாராயணன் சாரோட பெரிய ரசிகன் நான். நிறைய மேடைகள் இருக்கிறது. இந்தப்படத்தை பற்றி நிறைய பேச வேண்டும். எஸ் ஜே சூர்யா சாருடன் நடித்தது மகிழ்ச்சி.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம், நான் இந்த மேடையில் நிற்பதற்கு ரொம்ப சந்தோஷப்படுகிறேன். ‘பேட்டை’ படத்திற்கு பிறகு இந்த படம் எனக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்று நினைக்கிறேன். ‘பீட்சா’ இசை வெளியீட்டுக்கு சத்யம் தியேட்டருக்கு வந்தேன். அந்த மாதிரி உணர்வை இப்போது எனக்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தருகிறது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தை பற்றி நான் அதிகம் பேசமாட்டேன். இந்த கதையை பற்றி நீங்கள் பேசுவீர்கள் என்று நம்புகிறேன். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் கதிரேசன் சார் அவர்களுக்கு நன்றி. சந்தோஷ் நாராயணன் சொன்ன மாதிரி இந்தப்படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது. பத்திரிகையாளர் நண்பர்களுக்கு நன்றி. உங்கள் ஆதரவு கட்டாயம் வேண்டும். அனைவருக்கும் நன்றி.