LGBT யை கருவாகக் கொண்டு உருவாகியுள்ள ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

LGBT யை கருவாகக் கொண்டு உருவாகியுள்ள ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

 

நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகிறது. இதைத் தொடர்ந்து படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தின் நிறுவனர்கள் பரணிதரன் மற்றும் செந்தில்குமார், நடிகர் அர்ஷத், நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், படத்தின் இயக்குநர் ஜெயராஜ் பழனி, பாடலாசிரியர்கள் ஜி கே பி மற்றும் சிவா சங்கர், இசையமைப்பாளர் தர்ஷன் குமார், தயாரிப்பாளர் நீலிமா இசை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில்

படத்தின் இசையமைப்பாளர் தர்ஷன் குமார் பேசுகையில், ” தற்போதுள்ள சூழலில் ஒரு திரைப்படம் வெளியாவது என்பதே கடினம். இந்நிலையில் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ திரைப்படம் வெளியாகிறது. இதற்கு இசையமைக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் நீலிமா இசைக்கு நன்றி. இந்தத் திரைப்படத்திற்கு பாடல் அமைப்பதும், பின்னணி இசை அமைப்பதும் கடும் சவாலானதாக இருந்தது. இப்படத்தின் பின்னணி இசைக்காக பல சர்வதேச கலை இசை கலைஞர்களை பயன்படுத்தி இருக்கிறோம். படத்தின் பாடல்களும், பின்னணியிசையும் அனைவரையும் கவரும் என உறுதியாக நம்புகிறோம் ”என்றார்.

இயக்குநர் ஜெயராஜ் பழனி பேசுகையில், ” இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். முதலில் ‘சூல்’ எனும் பெயரில் திருநங்கைகளை முதன்மைப்படுத்திய படைப்பை உருவாக்கினேன். இந்தப் படைப்பை ஷார்ட் ஃபிளிக்ஸ் வாங்கி என்னுடைய வாழ்க்கையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லி போதுமான பொருட்செலவில் உருவாக்கி, பரிசாக அளித்திருக்கிறார்கள். நான் பாண்டிச்சேரியில் நாடக துறையில் பணியாற்றிருக்கிறேன். என்னுடைய உதவியாளர் ஒருவர் தன் பாலின சேர்க்கையாளர். அவரின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இந்த படைப்பு உருவாகி இருக்கிறது. ஆண், பெண்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை போல் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கும் அவர்களின் உணர்வுகளை மதித்து, சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது தான் இந்த படைப்பு.” என்றார்.

நடிகை நிரஞ்சனா நெய்தியார் பேசுகையில், ” இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஷகிரா மற்றும் வினோதா கதாபாத்திரங்களை இயக்குநர் ஜெயராஜ் பழனி நேர்த்தியாக கையாண்டிருந்தார். ‌இதில் ஷகிரா கதாபாத்திரத்தில் நான் பொருத்தமாக இருப்பேன் என்று தேர்வு செய்து நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்று மேலும் இது போன்ற திரைப்படங்கள் வருவதற்கு உந்துதலாக இருக்க வேண்டும். மேலும் வழக்கமான சமுதாய நடைமுறையில் இருந்து வித்தியாசமாக இயங்கும் இந்த சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன். ” என்றார்.

தயாரிப்பாளரும், நடிகையுமான நீலிமா இசை பேசுகையில்,

” இந்தத் திரைப்படம் மைக்ரோ பட்ஜெட்டில் உருவானது. ‘அரண்மனைக்கிளி’ எனும் தொலைக்காட்சி தொடரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் மூலமாக ஷார்ட் ஃபிளிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பரணிதரன் மற்றும் செந்தில்குமார் அறிமுகமானார்கள். ஷார்ட் ஃபிலிக்ஸ் எனும் ஆப்ஸை ஏன் அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால், இந்த செயலியில் புது முகங்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். புது இயக்குநர்கள், புதிய நடிகர்கள், புதிய தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமானவருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். இந்த மேடையில் அமைந்திருக்கும் பெரும்பாலானவர்கள் புது முகங்களே. இந்த செயலியை நாம் எப்போது வேண்டுமானாலும்… எங்கு வேண்டுமானாலும்.. பதிவிறக்கம் செய்து நாம் விரும்பக்கூடிய கால அளவுகளில் படைப்புகளை காணலாம். நாம் எந்த மனநிலையில் இருக்கிறோமோ…! அதற்கு ஏற்ற வகையிலான உள்ளடக்கங்கள் இந்த செயலியில் இருக்கிறது.

ஷார்ட் ஃபிளிக்ஸில் வெளியான லேட்டஸ்ட் ஹிட் என்றால் அது ‘பாணி பூரி’ தான். அனைத்து ஜானரிலும் படங்களை உருவாக்க வேண்டும் என அவர்கள் விரும்பிய போது, ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ தொடங்கியது. இந்த கதையை படமாக உருவாக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த போது, என்னுடைய கணவர் இசை, ‘அவசியம் உருவாக்க வேண்டும். ஏனெனில் தற்போது இந்த சமூகம் மற்றும் சமுதாயம் செல்லும் பாதையில் இது போன்ற உள்ளடக்கங்கள் அவசியம் ‘ என்றார். இது போன்ற நல்ல படைப்பிற்கு ரசிகர்களும் பேராதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *