இது என்னுடைய முதல் படம்! ‘சித்தா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகர் சித்தார்த் உனர்ச்சிவசம் !

இது என்னுடைய முதல் படம்! ‘சித்தா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகர் சித்தார்த் உனர்ச்சிவசம் !

 

S.U. அருண் குமார் இயக்கத்தில் எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சித்தா’. செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.

ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம் பேசியதாவது,

“இதுதான் எனக்கு முதல் படம். இயக்குநர் அருண் தந்த வாய்ப்பு இது. என்னை நம்பிய தயாரிப்பாளர் சித்தார்த்துக்கும் நன்றி”

இயக்குநர் அருண் பேசியதாவது,

“நானும் சித்தார்த்தும் சேர்ந்துதான் இந்தப் படத்தை ஆரம்பித்தோம். படம் ஆரம்பிக்கும் போது என்ன நம்பிக்கை இருந்ததோ அதே நம்பிக்கைதான் இப்போது வரை இருக்கிறது. என்னைவிட ஒரு நடிகராக தயாரிப்பாளராக இந்தப் படத்தைத் தூக்கி சுமந்தது சித்தார்த்தான். எந்த தடங்கலும் இல்லாமல் என்னை முழு சுதந்திரத்தோடு படம் செய்ய வைத்தார்கள். இந்தப் படம் இந்தளவு நன்றாக வர துணையிருந்த தொழில்நுட்பக்குழுவினர், நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரும் முதல் படம் போல நினைத்து நிறைய கற்றுக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகர் சித்தார்த் பேசியதாவது,

“இது என்னுடைய முதல் படம். முதல் படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராக நான் ஒரு படம் தயாரிக்கும் பொழுது எந்தவித சமரசமும் இல்லாமல் உண்மையை மட்டுமே படமாக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அப்படியான ஒரு உணர்வை ‘சித்தா’ கொடுத்திருக்கிறது. படத்தை நம்பிய அருணுக்கும் நன்றி. இந்த படத்தை ஏன் என்னுடைய அறிமுகப்படம் என்று சொல்கிறேன் என்றால், மக்களுடைய உண்மையான வாழ்க்கையை அப்படியே எடுத்துள்ளோம். இதன் ப்ரீ- புரொடக்ஷன் வேலைகளுக்கு மட்டும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் எடுத்தோம். படம் எனக்கு திருப்தியாக வந்துள்ளது. நான், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உட்பட சில பேரைத் தவிர படத்திலுள்ள அனைவருமே புதுமுகம். இந்த முடிவையும் முன்கூட்டியே எடுத்தோம். படத்தில் குழந்தைகளும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படம் ஒரு எமோஷனல் திரில்லர். படத்தின் டைட்டில் பாடல் கொடுத்த சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி.

இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் தான் வெளியிடுகிறது. படத்தை முதலில் பார்த்தவர் உதய் தான். இந்தப் படம் திரையரங்குகளில் பார்ப்பதற்காகவே உருவாக்கினேன். உங்கள் குடும்பத்துடன் நிச்சயம் இதைப் பார்க்கலாம். ஒரு குழந்தை காணாமல் போகும்போது குடும்பம், காவல் நிலையம், பள்ளி என இந்த சுற்று வட்டாரங்கள் எப்படி ரியாக்ட் செய்கிறது என்பதை நாம் எல்லோரும் கனெக்ட் செய்து கொள்ள முடியும். அன்போடும் அக்கறையோடும் இந்த படத்தை எடுத்துள்ளோம். என் குரு மணிரத்தினம், கமல் சாரிடம் படத்தை போட்டு காண்பித்தேன். மிகவும் பாசிட்டிவாக சொன்னார்கள். அதுவே எனக்கு பெரிய விருது கிடைத்தது போல தான்! அடுத்து ஷங்கர் சாரிடமும் ரஹ்மான் சாரிடமும் படத்தை காண்பிப்பேன். நீங்களும் படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *