‘பொன்னியின் செல்வன்’ அனுபவத்தை பற்றி சரத்குமார் பேட்டி
‘கண் சிமிட்டும் நேரங்கள்’ல ஆரம்பிச்சு, இப்ப வரை 145 படங்கள் பண்ணிட்டேன். இப்ப 150வது படம் ‘The Smile Man’ல நடிச்சிட்டிருக்கேன். மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு பல மொழிகள்ல நடிக்கறேன். ‘ருத்ரன்’ல லாரன்ஸ் சார் என்னை நெகட்டிவ் ரோல்ல நடிக்கக் கேட்கவும், தயங்கினேன். அதன்பின் ஒரு விஷயம் புரிந்தது. இப்ப உள்ள ஆடியன்ஸ், நடிப்பை நடிப்பா மட்டும் பார்க்குறாங்கன்னு.பிரமாண்ட படங்களை உருவாக்குவதே கடினம். இந்த ‘பி.எஸ் – 2’ஐ மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ என்றுதான் எடுத்துக்கணும். இந்த முயற்சியில் அவர் வெற்றியடைஞ்சிருக்கார். உலகளவில் சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கொண்டு சேர்த்திருக்கார். என்னைப் போன்ற கதையைப் படித்த சிலர் ‘கொஞ்சம் வித்தியாசமா எடுத்திருக்காங்களே’ன்னு சொல்றாங்க. ஆனாலும் அவர் பிரமிப்பா எடுத்திருக்கார்னுதான் சொல்வேன்.
இறுதிக் காட்சியில் நந்தினி என்னைப் பார்த்து, ‘இவர் அழகுக்கு மயங்குபவர் மட்டுமல்ல, உண்மையாக என்னை நேசித்த ஒருவர்’னு சொல்வாங்க. அதைப் போல, வந்தியதேவனும் ‘இவரிடம் நேரிடையா போரிட்டு வெற்றி பெற முடியாது’ என்று சொல்வார். இப்படி என் கதாபாத்திரத்தை ஹைலைட் பண்ணியிருக்கறது இன்னும் பெருமையா இருக்கு!’பொன்னியின் செல்வன்’ படத்தையடுத்து நல்ல படங்களில் தொடர்ந்து நடிக்கிறேன். அது சின்ன கதாபாத்திரமோ, பெரிய கதாபாத்திரமோ… நான் நடிப்பதற்குக் காரணம், இந்தத் தலைமுறையினரில் சிலர் என் படமே பார்க்காமல் இருந்திருக்கலாம். அவங்களுக்கு என்னை நினைவூட்டவும், அடுத்தடுத்த தலைமுறையினரைச் சென்றடையவும்தான்.
‘பொன்னியின் செல்வன் 2’ புரொமோஷனுக்கு நான் போகவில்லை. முன்பே திட்டமிட்ட எனது நிகழ்ச்சிகளால் நான் ஊரில் இல்லை. கடந்த 21-ம் தேதி அன்றுதான் நான் சென்னை வந்தேன். ஆனால் மற்றவர்கள் அதற்கு முன்பே கிளம்பியதால், நான் பங்கேற முடியாமல்போனது. படத்தைப் பார்த்து ரசித்த இயக்குநர் பாரதிராஜா சார், ‘பெரிய பழுவேட்டரையரா அசத்திட்டே… கண்கள்ல பேசுறய்யா… எக்ஸ்ட்ராடுனரி பர்ஃபாமென்ஸ்’னு பாராட்டினார். மகிழ்ச்சியா இருந்தது. இதுக்கு முன்னாடி படங்கள்ல இதே கண்கள்தான் நடிச்சிட்டிருந்தது. அவர் பாராட்டினது சந்தோஷமா இருந்தது” என்கிறார் சரத்குமார்.