ஜல்லிகட்டு இயக்குனரை குற்றம் சாட்டிய சில்லுகருப்பட்டி இயக்குனர்

ஜல்லிகட்டு இயக்குனரை குற்றம் சாட்டிய சில்லுகருப்பட்டி இயக்குனர்

மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படம் ஏலே படத்தின் அழகியலை திருடி உருவாக்கப்பட்டிருப்பதாக அந்தப்படத்தின் இயக்குநர் ஹலீதா ஷமீம் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் சமூகவலைப் பகத்தில் பதிவிட்டிருப்பதாவது,

“ ‘ஏலே’ படத்திற்காக ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்காக தயார் செய்து முதன் முதலில் அக்கிராமத்தில் அவர்களையும் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அதே கிராமத்தில் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே; இருப்பினும், நான் பார்த்து பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இந்த படம் நெடுக களவாடப்பட்டிருப்பது, சற்றே அயற்சியை தருகிறது.

ஐஸ்காரர் இங்கே பால்க்காரர். செம்புலி இங்கே செவலை. Mortuary van பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுகிறது.

நான் அறிமுகப்படுத்திய ‘சித்திரை சேனன்’ நடிகர்-பாடகர், ஏலே- வில் தான் ஏற்ற கலைக்குழு பாடகர் கதாபாத்திரம் போலவே, இங்கு மம்மூட்டி அவர்களுடன் பாடிக்கொண்டிருக்கிறார்.

படமாக்கப்பட்ட வீடுகள்,பல முறை பார்த்து பின் படமாக்கப்படவேண்டாம் என்று நிராகரித்த வீடுகள் – இவை யாவும் படத்தில் பார்த்தேன்.

நடக்கும் நிகழ்வுகள், பின்னே ஓடும் ஜாக்கி சான் பட வசனத்தோடு ஒத்துப்போவது போல், ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன!

எனக்காக நான் தான் பேச வேண்டும், ஆதங்கபட வேண்டும் என்ற சூழலில் தவிர்க்க முடியாமல் இதை பதிவிடுகிறேன்.

Image

நீங்கள் என்னுடைய ஏலே படத்தை நிராகரிக்கலாம். ஆனால் அதிலிருக்கும் யோசனைகள் மற்றும் அழகியலை இரக்கமின்றி பிடுங்கப்படுவதை பார்த்து நான் அமைதியாக இருக்க மாட்டேன்.” என்று அவர் அதில் பதிவிட்டு இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *