மதன் கார்கி மனைவி நந்தினியின் இணையவழி கல்வி வகுப்புகள் அறிமுகம்
சுபமி எனும் துணைமொழியிடல் நிறுவனத்தை நிறுவி கடந்த சில ஆண்டுகளாய் நடத்திக்கொண்டிருப்பவர் நந்தினி கார்க்கி. இந்நிறுவனத்தின் மூலமாக துணைமொழியியலை அனைவரும் கற்பதற்காக இணையவழி வகுப்புகளை நந்தினி கார்க்கி அறிமுகப்படுத்தியுள்ளார். துணைமொழியியல் கலையையும் தொழில்நுட்பத்தையும் சான்றிதழோடு கற்றுத்தரும் இந்த வகுப்பு, துணைமொழியியலின் மொழியாக்கம், நேரமிடல், அறம், தொழில் போன்ற தலைப்புகளைக் கற்றுத் தருகிறது. மொழியாக்கத்திலும் திரைத்துறையிலும் ஆர்வம் கொண்ட அனைவரும் இந்த வகுப்பில் இணையலாம். https://courses.subemy.com என்ற தளத்தில் இந்த வகுப்புகள் நிகழும்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக துணைமொழியியல் துறையில் பணியாற்றும் நந்தினி கார்க்கி, இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் துணைமொழியாளர்களுள் ஒருவர். சூரரைப் போற்று, ஐ, கைதி, பிசாசு, ஜெய் பீம், சர்க்கார், என்னை அறிந்தால், தங்க மீன்கள், ரேடியோ பெட்டி, சுழல், வதந்தி போன்ற முன்னணித் திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்ககளை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு தன் சுபமி குழுவுடன் இணைந்து துணைமொழியிட்டுள்ளார் நந்தினி கார்க்கி. “துணைமொழியிடல் என்பது இருவேறு பண்பாடுகளை இணைக்கவல்ல ஆற்றல்மிகுந்த கருவி” என்று சொல்கிறார். “இந்த இணையவழி வகுப்புகள், துணைமொழியியல் கற்போருக்கு தொழில்நுட்பம், மொழியியல் மற்றும் தொழில்சார் அறிவை வழங்குகிறது.” என்கிறார். நெதர்லாந்து நாட்டில் உருவாக்கிய ஸ்பாட் எனும் மென்பொருளை எப்படி துணைமொழியிடலுக்குப் பயன்படுத்தவேண்டும் என்றும் இந்த இணையவழி வகுப்பு கற்றுத்தருகிறது. இந்த இணையவழி வகுப்புகள் டிசம்பர் 18 2022 அன்று தொடங்கப்பட்டது.