வதந்தி தொடர் எப்படி இருக்கு?
வதந்தி
பொட்டல் மைதானத்தின் நடுவே இருக்கும் ஒரு பெண்ணின் சடலம், அது யாரென தேடி கண்டுபிடித்து, அது வெலொனி என்ற கல்லூரி பெண்ணின் சடலம் என்று காவல் துறை கண்டு பிடிக்கிறார்கள். வெலோனியை கொன்றது யார்? ஏன் கொன்றார்கள்? அதை விசாரிக்கும் போது விரியும் மர்ம முடிச்சுகள், அதை அவிழ்க்கும் காவல்துறை இது தான் வதந்தி தொடரின் கதை.
இந்த தொடரின் முக்கிய அம்சமே திரைக்கதை தான். 8 எபிசோடுகள் கொண்ட இந்த கதையின் ஒவ்வொரு எபிசோடும் பார்வையாளர்களை கதையோடு ஒன்றிபோகும் வகையில் தான் அமைக்கப்பட்டு இருக்கிறது. சின்ன சைக்கிளில் ஆரம்பித்து, போர் விமானத்தில் போவது போல, சின்ன விசாரணையில் ஆரம்பித்து திருப்பங்கள், திருப்பங்கள் என கொலைகாரனை கண்டுபிடிப்பதற்கு பல சிக்கல்களை தாண்டி கதை போய் கொண்டுஇருக்கிறது. இது இந்த திரைக்கதையை சுவாரஷ்யமானதாக மாற்றி இருக்கிறது.
கதையை சிறப்பாக மாற்ற நடிகர்களின் தேர்வும் , கதாபாத்திர வடிவமைப்பும் மிக முக்கியம். அந்த வகையில் ரகசியம் அதிகம் பொதிந்து இருக்கும் வெலோனி கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கபட்ட சஞ்சனா, புதுமுகமாய் இருந்தது தொடருக்கு ஒரு கூடுதல் பலம், நாமும் அந்த வெலோனியை ரகசியம் நிறைந்த ஆளாய் பார்த்து கொண்டு இருக்கிறோம். அடுத்து வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி விவேக் ஆக எஸ் ஜே சூர்யா. நடிப்பின் அரக்கனாக அவர் இந்த தொடர் முழுக்க ஜொலித்து இருக்கிறார். அடக்கி வாசிப்பது என்ற ஆயுதத்தை தான் சூர்யா இந்த தொடரில் பயன்படுத்தி இருக்கிறார். அவரது அமைதியான அணுகுமுறை அந்த கதாபாத்திரத்தின் நம்பகதன்மையை அதிகரித்து இருக்கிறது.
அதுபோக அவர் ஒரு சிங்கிள் ஷாட் காட்சியை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். அது தான் கதையின் அடுத்தகட்டத்திற்கு விவேக் என்ற கதாபாத்திரம் சென்றாக வேண்டிய அவசியத்தை கொடுக்கிறது.
அடுத்ததாக தொழில் நுட்க கலைஞர்கள் ஒரு நேர்த்தியான தொடரை பார்க்கும் அனுபவத்தை நமக்கு கொடுக்க உழைத்து இருக்கின்றனர். ஒளிப்பதிவாக இருக்கட்டும், படதொகுப்பாக இருக்கட்டும் இசையாக இருக்கட்டும், மூன்றும் கதையின் போக்கும் ஒன்றி போகிறது.
இறுதியாக பாராட்டபட வேண்டிய மற்றொரு ஆள் எழுத்தாளர் மீரான். நாகர்கோவில் வட்டார வழக்கை கதை போக்கு மீறாமல் உள் நுழைத்து இருக்கிறார். நடிகராகவும் அறிமுகமாகி இருக்கும் அவர், கொடுத்த கதாபாத்திரத்திற்கும் சிறப்பான பங்களிப்பு கொடுத்துள்ளார்.
மொத்தத்தில் அடுத்த ஒரு சிறப்பான தமிழ் தொடர் தான் இந்த வதந்தி.