படப்பிடிப்புக்கு தயாராகும் பொன்னியின் செல்வன் பாகம் 2!
‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று’ வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. பொன்னியன் செல்வன் திரைப்படத்தை லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் உடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளது. அமரர் கல்கியின் எழுத்திற்கு இயக்குநர் மணிரத்னம் உயிரோட்டம் கொடுத்தார். ஏ ஆர் ரகுமான் இசை, ரவி வர்மன் ஒளிப்பதிவு, தோட்டா தரணி கலை இயக்கம் என முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்துள்ளனர். படத்தில் நடிகர்கள் சீயான் விக்ரம், இரா. பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி என பலர் நடித்துள்ளனர். மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்கு அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்காக ஒரு சில காட்சிகள் படமாக்கி சேர்க்கப்பட வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்காக ஒரு வாரம் முதல் அதிகபட்சமாக 10 நாட்கள் வரையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த காட்சிகளை இயக்குனர் மணிரத்னம் படமாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் இரண்டாம் பாகத்திற்கான கிராஃபிக்ஸ் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.