சமூகநீதி பேசிய அசுரன் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது!
அசுரன் திரைப்படம் வெளியாகி 3 வருஷங்கள் நிறைவு பெற்றுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் அசுரன் ஹேஷ்டேக்கை தனுஷ் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வாருகிறார்கள்.
தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான அசுரன் திரைப்படம் கடந்த 2019-ல் இதே நாளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் சிவசாமி என்ற கிராமத்து நபராக தனுஷ் தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதற்காக தேசிய விருதையும் தட்டி சென்றார். அவரோடு இயக்குனர் வெற்றிமாறனும் தேசிய விருதை தட்டி சென்றார். பச்சையம்மாள் என்ற தனுஷின் மனைவி கேரக்டரில் மஞ்சுவாரியரும், அவரது அண்ணன் முருகேசன் கேரக்டரில் நடிகர் பசுபதியும் நடித்து இருந்தார்கள்.
தனுஷின் மகன்களாக கென் கருணாஸ், டீஜே அருணாசலம் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திருந்தனர். பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல், சுப்ரமணியம் சிவா, ஆடுகளம் நரேன், ஏ. வெங்கடேஷ், வேல்ராஜ் உளிட்டோர் இடம்பெற்றிருந்த இந்தப் படம் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணிக்கு மிகப்பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது. ஜி.வி. பிரகாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தன.
1960 – 80 களில் நடக்கும் பீரியட் படமாக, எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி அசுரன் உருவாக்கப்பட்டிருந்தது. சாதி கொடுமைகள், அப்பா – மகன் இடையே நடக்கும் பாசப்போராட்டம், மகனை இழந்த பெற்றோரின் வலி உள்ளிட்டவற்றை எமோஷனல் காட்சிகளாக இயக்குனர் வெற்றிமாறன் பதிவு செய்திருப்பார். இந்த படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த படம் என்ற 2 பிரிவில் தேசிய விருது அளிக்கப்பட்டது.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு கூறியது, “ அசுரன் படத்துக்கு தனுஷும், வெற்றிமாறனும் கொடுத்த உழைப்பு அசாதாரணமானது. அதிலும் இயக்குனர் உடல்நல குறைவை சந்தித்து இருந்த போதிலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தானே முன் வந்து வேகமாக செய்தார். அதற்கான கௌரவம் அவர்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி. ”