இந்த படம் நன்றாக ஓடும் என நம்புகிறேன்! ‘அந்தகன் – தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் பிரசாந்த்!

இந்த படம் நன்றாக ஓடும் என நம்புகிறேன்! ‘அந்தகன் – தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் பிரசாந்த்!

‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன் – தி பியானிஸ்ட்’ திரைப்படத்தினை ரசிகர்களிடத்தில் பிரபலப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான அனிருத் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஆகியோர் பின்னணி பாட, ‘அந்தகன் ஆந்தம்’ எனும் ப்ரமோ பாடல் தயாராகி இருக்கிறது. இந்த பாடலின் உள்ளடக்கத்தை உருவாக்கி, காட்சிப்படுத்தியிருக்கிறார் ‘நடன புயல்’ பிரபுதேவா. இந்த பாடலை தளபதி விஜய் வெளியிட்டு, பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து இந்தப் பாடலை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன்போது இயக்குநர் தியாகராஜன், நடிகர் பிரசாந்த், இயக்குநர் – நடிகர் கே .எஸ். ரவிக்குமார், நடிகை ஊர்வசி, நடிகை பிரியா ஆனந்த், நடிகை வனிதா விஜயகுமார், நடிகர்கள் பூவையார், பெசன்ட் ரவி, ஆதேஷ் பாலா, மோகன் வைத்யா, ஒளிப்பதிவாளர் ரவி யாதவ், சோனி மியூசிக் நிறுவனத்தின் தென் மண்டல தலைவர் அசோக் பர்வானி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில்,

இயக்குநரான தியாகராஜன் பேசியதாவது,

”2019ம் ஆண்டில் பலத்த போட்டிகளுக்கு இடையே இந்தியில் வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் உரிமையை வாங்கினேன். தமிழ் திரையுலகில் பெரிய பெரிய நட்சத்திர நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் இப்படத்தின் தமிழ் உரிமையை வாங்குவதற்கு போட்டியிட்டார்கள்.இந்தப் படத்தை ஏன் வாங்க வேண்டும் என தோன்றியது என்றால், அதில் ஒரு பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளி தான் கதையின் நாயகன். அவன் ஒரு பியானோ வாசிக்கும் இசை கலைஞன். பிரசாந்த் சிறிய வயதிலிருந்து பியானோ வாசிப்பான், லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் பியானோ இசையில் நான்காவது கிரேடில் தேர்ச்சி பெற்றிருக்கிறான். அவனுக்கு இந்த கதை மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து தான் இதன் தமிழ் உரிமையை வாங்கினேன்.

இந்த படம் பிரம்மாண்டமாக இருக்கும். நன்றாகவும் இருக்கும். இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள்..‌ படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்ற பிறகும் அவர்களில் மனதில் நிற்கும் படமாக இது இருக்கும், இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். ‘அத்தகன் ஆந்தம்’ பாடலை ஒரு முறை கேட்கும்போதே மனதில் பதிந்து விடுகிறது. இந்த ப்ரமோ பாடல் மட்டுமல்லாமல், படமும் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடிகை பிரியா ஆனந்த் பேசியதாவது,

”இங்கு வந்த பிறகுதான் தமிழில் பணியாற்றி நீண்ட நாள் ஆகிவிட்டது என்ற உணர்வு எழுகிறது. இந்த ஒட்டுமொத்த படக்குழுவில் இயக்குநர் தியாகராஜன் என்னுடைய நண்பர் என்று தான் சொல்வேன். இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தியாகராஜன் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகத்தான் நடிக்க ஒப்புக் கொண்டார்கள். அனைவரும் பிரசாந்த் மீதும் அளவற்ற அன்பு வைத்திருந்தார்கள்.‌ ஏராளமான சக கலைஞர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் அனைவரை காட்டிலும் பிரசாந்த் தனித்துவமிக்கவர். அவருக்கு சினிமா மீதான பற்றும், தேடலும் அதிகம். இந்த திரைப்படத்திற்கு வி எஃப் எக்ஸ் காட்சிகளை மேற்பார்வையிட்டது பிரசாந்த் தான். சினிமாவில் அறிமுகமாகும் அனைத்து நவீன தொழில்நுட்பங்களை பற்றியும் அவர் அறிந்து வைத்திருக்கிறார். இந்தப் படத்தில் பணியாற்றி இங்கு வந்து நிற்கும் போது தான் தாய் வீட்டிற்கு வந்த மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது,” என்றார்.

நடிகர் பிரசாந்த் பேசியதாவது,

”இந்த அந்தகன் ஆந்தம் பாடலை வெளியிட்ட தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கேட்டதும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு, இதற்காக நேரம் ஒதுக்கி, இந்த பாடலை வெளியிட்டதற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாட்டை உருவாக்கிய பிரபு தேவாவிற்கும், நடனம் அமைத்த சாண்டி மாஸ்டருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாடலில் பங்களிப்பு செய்த அனிருத் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ஒரு படத்திற்கான ப்ரோமோ பாடலை இந்த அளவு பிரம்மாண்டமாக உருவாக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதிலும் நட்சத்திர கலைஞர்களை இடம்பெறவைத்து, அனைவரும் ரசிக்கும் வகையிலும், அனைவருக்கும் பிடிக்கும் வகையிலும் கடினமாக உழைத்து உருவாக்கியிருக்கிறோம்.

இந்தப் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு சிறிய கதாபாத்திரங்களுக்கும் நட்சத்திர கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு நடித்திருக்கிறார்கள். இயக்குநர் தியாகராஜன் இந்த விஷயத்தில் நுட்பமாக கவனித்து திறம்பட செயல்பட்டு இருக்கிறார்.‌ கார்த்திக் சார், கே எஸ். ரவிக்குமார் சார், ஊர்வசி மேடம், சமுத்திரகனி சார், மனோபாலா சார், யோகி பாபு சார், பூவையார், ஆதேஷ் பாலா, வனிதா விஜயகுமார், செம்மலர் அன்னம் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். அனைவரும் அப்பா அழைத்தவுடன் அவர் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். அப்பா மீது இன்றளவும் குறையாத மதிப்பு மரியாதை வைத்திருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்தகன் நல்ல படம். நம்முடைய மண்ணிற்கு என்ன தேவையோ அந்த மாற்றங்களை செய்துதான் இந்த படத்தை தியாகராஜன் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அமைந்திருக்கும் நட்சத்திர கூட்டணி போல் வேறு எந்த படத்திலும் அமைந்திருக்காது., அமைந்ததும் இல்லை. இந்த படம் நன்றாக ஓட வேண்டும், ஓடும் என நம்புகிறேன் அனைவரும் வாழ்த்துங்கள்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *