‘(மான் கி பாத் 100)’ மாநாட்டில் உரையாற்றிய பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன்
2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று, `மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலமாக உரையாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.இந்த நிகழ்ச்சி இந்த மாதத்துடன் 100வது அத்தியாயத்தை நிறைவு செய்கிறது. இதையொட்டி ‘Mann Ki Baat @100 (மான் கி பாத் 100)’ என்ற மாநாடு இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஆமிர் கான், ரவீனா டாண்டன், தீபா மாலிக் போன்ற திரைப் பிரபலங்கள், நிகத் ஜரீன் போன்ற விளையாட்டுப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் ரேடியோ ஜாக்கிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன், இந்தித் திரையுலகில் பெண்கள் சந்திக்கும் ஊதிய ஏற்றத் தாழ்வு குறித்துப் பேசியிருந்தார். இதுபற்றி பேசிய அவர், “இந்தித் திரையுலகில் கேமராவிற்கு முன்னாலும் பின்னாலும் பணியாற்றும் பெண்கள், இன்று தங்களின் முன்னிருக்கும் தடைகளை உடைத்து, ஆண் கட்டமைத்த ஒவ்வொரு கோட்டையிலும் நுழைந்துள்ளனர்.
இன்று தொலைக்காட்சி துறையில், ஆண்களை விடவும் பெண்கள் அதிகமாகச் சம்பளம் பெறுகிறார்கள். OTT தளங்களிலும் முன்னணி கதாபாத்திரங்களில் பெரும்பாலும் பெண்களே இருக்கிறார்கள். பெண்கள் பிரச்னைகள் குறித்து திரைப்படங்களில் விவாதிக்கப்படுகின்றன. திரையுலகிலும் இந்த மாற்றம் மெதுவாக நடந்து வருகிறது. நிச்சயம் ஒரு நாள் எல்லாத் தடைகளையும், ஆணாதிக்கத்தையும் உடைத்து பெண்கள் திரையுலகில் மிளிர்வார்கள்” என்று உரையாற்றினார்.