ஆதிபுருஷ் படத்திற்கு தடைவிதிக்க வேண்டும்! பாஜக நிர்வாகி கோரிக்கை.
நடிகர் பிரபாஸ், சைஃப் அலி கான் நடிச்ச ஆதிபுருஷ் திரைப்படம் ரூ.500 கோடியில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இப்படம் வரும் ஜனவரி 12ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படம் திரைக்கு வரும் முன்பே கடும் எதிர்ப்பை சந்திக்கத் தொடங்கி இருக்கிறது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியது. அதற்கு சமூக வலைதளங்களில் எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தது.
இதில் சைஃப் அலி கான் இலங்கை மன்னன் ராவணன் வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபாஸ் ராமனாகவும், கீர்த்தி சனான் சீதையாகவும், சன்னி சிங் லட்சுமணாகவும் நடித்துள்ளனர். இப்படம் சர்ச்சையைக் கிளப்பி இருப்பதால் அதனை மகாராஷ்டிராவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக எம்.எல்.ஏ. ராம் கதம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “விளம்பரத்திற்காக இந்துக் கடவுள்களை அவமதித்ததன் மூலம் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கை மற்றும் மத உணர்வுகளை பட தயாரிப்பாளர்கள் புண்படுத்திவிட்டனர். மன்னிப்பு கேட்பதாலோ அல்லது காட்சிகளை வெட்டினாலோ மட்டும் விட்டுவிடமாட்டோம். இது போன்ற மனநிலைக்கு தக்க பாடம் கற்பிப்பதோடு, இது போன்ற படங்களை முற்றிலும் தடை செய்யவேண்டும். இப்படத்தை மகாராஷ்டிராவில் வெளியிட அனுமதிக்கமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இப்படத்தில் வரும் ராவணன் கதாபாத்திரத்திற்குத்தான் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. டீசரில் வரும் ராவணன் கதாபாத்திரம் மொகலாய மன்னன் தைமூரை ஞாபகப்படுத்துவது போன்று இருப்பதாக டீசரை பார்த்த நெட்டிசன்கள் கருத்து தெரிவிச்சிருத்து வருகிறார்கள். படத்தை ஓம் ராவத் இயக்கி இருக்கிறார். சமீப காலமாக இந்திப்படத்தை புறக்கணிக்கவேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுப்பது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.