“பறந்து போ” திரைப்பட முதல் பாடல் வெளியீடு

“பறந்து போ” திரைப்பட முதல் பாடல் வெளியீடு

வணக்கம்.

நான் இயக்குநர் ராம்.
எங்களுடைய “பறந்து போ” திரைப்படம் வரும் ஜூலை 4-ஆம் தேதி வெளிவர இருக்கிறது. அதனுடைய முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. அதற்கு ‘Sunflower – not a single not a teaser’ என்று பெயரிட்டு இருக்கிறோம்.

பாடலோடு சில காட்சித் துண்டுகளும் இடம் பெறுவதால் இவ்வாறு பெயரிட்டு இருக்கிறோம்.
எல்லோரையும் போல் எனக்கும் சூரியகாந்தியை மிகவும் பிடிக்கும். ஒரு நல்ல சூரியோதயத்தில் சூரியகாந்தி தோட்டத்தில் படம் பிடிக்கிற ஒரு அரும் வாய்ப்பு என்னுடைய முதல் படத்தில் எனக்குக் கிடைத்தது. கற்றது தமிழின் இன்னும் ஓர் இரவு பாடலை ஆந்திர மாநிலத்து கடப்பாவின் சூரியகாந்தி தோட்டத்தில் படம் பிடித்தோம். தங்கமீன்களின், ஆனந்த யாழைப் பாடலை சூரியகாந்தி தோட்டத்தில் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்காததால் கேரளாவில் உள்ள அச்சன்கோவிலின் பனிபெய்யும் மலைகள் மீது அப்பாடலுக்காக ஏறினோம். பேரன்பு திரைப்படத்திற்கும் சூரியகாந்தி தோட்டத்திற்கு நடுவில் ஒரு வீடு வேண்டும் என்று தேடினோம்.

அப்போதும் சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்கவில்லை. எனவே அந்த வீட்டை கொடைக்கானல் மன்னவனூர் ஏரிக்கரைக்கு மாற்றினோம்.
அதற்குப் பின் “பறந்து போ”வில் தான் சூரியகாந்தி கதைக்குள் வந்தது. சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்கவில்லை என்றாலும், கர்நாடகத்தில் உள்ள மைசூரில் ஒரு சிறு தோட்டமும், அன்னூரில் ஒரு ஒற்றை சூரியகாந்தி மலரும் கிடைக்கப் பெற்றோம். சூரியகாந்தியை படம்பிடிக்கும் வேட்கை ஒவ்வொரு படத்திலும் கூடிக்கொண்டே இருக்கிறது. ஏனெனில் அது சூர்யகாந்தி.
சூரியகாந்தியை ஒற்றையாகப் பார்த்தாலும் சரி, கூட்டமாகப் பார்த்தாலும் சரி. அதை குறித்து நினைத்தாலும் சரி அது தரும் உற்சாகமும் பரவசமும் ஒன்றே. அதன் நிறத்தில் ஒளிரும் கட்டுக்கடங்காத இளம்பிரியத்தை நாம் நம் காலத்தில் பால்யகாலப் பிரியம் என்றும் puppy love என்றும் வெவ்வேறு பெயர்களில் அழைத்திருந்தோம். இன்று நம்முடைய மகள்களும் மகன்களும் அதே பிரியத்தை crush என்று அழைக்கிறார்கள்.

சூரியகாந்தி, crush-ற்கான மலர், கட்டுக்கடங்காத இளம் பிரியத்தின் மலர் என்று எனக்குத் தோன்றியது.
ஒரு அப்பாவின் பால்யமும் மகனின் பால்யமும் ஒன்று சேருகிற பாடல்தான் Sunflower. மதன் கார்க்கியின் வரிகளில், விஜய் யேசுதாஸ் பாட, சந்தோஷ் தயாநிதி இசை அமைத்திருக்கிறார். ஜூலை 4 “பறந்து போ” திரையரங்குகளில் வெளியாகும் சமயத்தில் ஊரெல்லாம் சூரியகாந்தி பூத்திருக்கும்.

சூரியகாந்தி பூக்கும் காலம் அது. சூரியகாந்தி பூக்களோடு “பறந்து போ” திரைப்படம் பார்க்க வாருங்கள். சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்க்கீஸ், விஜய் யேசுதாஸ், மற்றும் சில குட்டிபிசாசுகளும் உங்களுக்காக காத்துக்கொண்டிருப்பார்கள்.

இளம்பிரியமும் உற்சாகமும் அமைதியும் உங்களை சூழட்டுமாக.

பிரியங்களுடன்,
ராம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *