“மற்றவர்களுடன் போட்டியாக நடிக்க வேண்டும் என நடிப்பதில்லை” மெய்யழகன் படத்தின் வெற்றி விழாவில் அர்விந்த்சாமி!

“மற்றவர்களுடன் போட்டியாக நடிக்க வேண்டும் என நடிப்பதில்லை” மெய்யழகன் படத்தின் வெற்றி விழாவில் அர்விந்த்சாமி!

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது.. கதாநாயகனாக கார்த்தி, முக்கிய வேடத்தில் அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில். நடித்துள்ளார்.

படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியும் கூட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையடுத்து ‘மெய்யழகன்’ படக்குழுவினர் இதன் வெற்றி விழாவை நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக கொண்டாடினார்.

இந்த நிகழ்வில்,

நடிகர் அர்விந்த்சாமி பேசும்போது,

“நான் பணியாற்றிய படங்களிலேயே மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று. அதற்கு படக்குழுவினருக்கு நன்றி. இந்த படம் வெளியாகும்போது நான் இங்கே இல்லை. புரமோசன்களை முடித்துவிட்டு வெளிநாட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது. நேற்று தான் வந்தேன். இந்த படத்தின் ரிலீஸை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் அழகாக செய்து கொடுத்தார். வெளிநாட்டில் இருந்தாலும் கார்த்தி, இயக்குனர் பிரேம்குமார், ராஜசேகர் ஆகியோருடன் தொலைபேசியில் அவ்வப்போது படம் குறித்து பேசிக் கொள்வேன். பத்திரிகையாளர்கள் எனது நடிப்பை பாராட்டியதை விட கார்த்திக்கின் நடிப்பை பாராட்டியதுதான் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது. இயக்குனர் என்ன விரும்பினாரோ அதை சிறிதும் மாற்றாமல் அந்தக் கதாபாத்திரங்களை அப்படியே வெளிப்படுத்த நானும் கார்த்தியும் மற்றவர்களும் முயற்சித்தோம். படப்பிடிப்பில் நடிக்க செல்வதற்கு முன் இந்த கதாபாத்திரம் இப்படித்தான் என மனதில் நினைத்துக் கொண்டு செல்வேன். ஆனால் அங்கே உடன் நடிக்கும் மற்றவர்களின் நடிப்பை பார்த்து அதிலிருந்து சில விஷயங்களை கற்றுக்கொண்டு நடிப்பேன். நான் மற்றவர்களுடன் போட்டியாக நடிக்க வேண்டும் என நடிப்பதில்லை. நான் அவ்வளவு படம் எல்லாம் நடிப்பதும் இல்லை. எந்த போட்டியிலும் இல்லை.. உங்களுக்கே தெரியும். செய்யும் வேலையை ரசித்து செய்ய வேண்டும். இது போன்ற ஒரு அழகான சூழலில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் எண்ணம்” என்றார்.

நடிகர் கார்த்தி பேசும்போது,

“இந்த படத்தை புரிந்து கொண்டு இதனை பாராட்டி விதவிதமான வரிகளில் விமர்சனங்களை எழுதிய ஊடகங்களுக்கு மிகப்பெரிய நன்றி. இன்னொரு பக்கம் உலகத்தில் சின்ன சின்ன மூலைகளில் இருந்தும் கூட இந்த படம் ஒவ்வொருவரிடமும் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று எழுத்து பதிவுகளாகவும் மீம்ஸ் ஆகவும் ரீல்ஸ்களாகவும் வெளியிட்டு வரும் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இதற்கு முன்பு தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்றவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் குடும்ப உறவுகளை மையப்படுத்தி அவ்வளவு அழகான கதைகளை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். அப்படி ஒரு படம் நமக்கு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அப்படி ஒரு கதை என்னிடம் வரும்போது அதை எப்படி மிஸ் பண்ணுவேன். மெட்ராஸ் படம் வெளியான சமயத்தில் பொழுதுபோக்கு படம் பண்ணினாலும் பருத்திவீரன், மெட்ராஸ் போன்ற படங்களையும் பண்ண வேண்டும் என நீங்கள் ( பத்திரிக்கையாளர்கள் ) சொல்லியிருந்தீர்கள். அதை நான் மறக்க மாட்டேன், நன்றி.

இயக்குநர் பிரேம்குமார் பேசும்போது,

”இந்த படத்தின் வெற்றிக்கு என்னுடன் துணை நின்ற பட குழுவினர் அத்தனை பேருக்கும் நன்றி. நானும் ஒளிப்பதிவாளர் மகேந்திரனும் ஒன்றாகவே படித்தவர்கள். ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள். நடிகர் சிவகுமார் சார் பேசும்போது கூட ஏண்டா ஒண்ணா படிச்சீங்கன்னா கூட ஒரே மாதிரியா இருப்பீங்க என்று நகைச்சுவையாக கேட்பார். 96 படத்தை விட இந்த படத்தில் மகேந்திரனின் வேலைகள் எனக்கு சற்று புரியபடவில்லை. ஆனாலும் படம் வெளியானபோது அதற்கு குவியும் பாராட்டுகளை பார்த்தபோது தான் நான் 8 வருடம் டச் விட்டுப் போனதால் ஒளிப்பதிவில் இன்னும் எவ்வளவு பின்தங்கி இருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் இவ்வளவு ஒழுங்கு, இவ்வளவு சுதந்திரம் என இதற்கு முன் நான் பார்த்ததில்லை. அதற்கு தயாரிப்பாளர் ராஜசேகர் சாருக்கு நன்றி. பொதுவாக நான் ஒருவருடன் அதிகம் சண்டை போட்டால் அவர்களை என் வாழ்க்கையில் இருந்து தூக்கி ஓரமாக வைத்து விடுவேன். அதற்கு பிறகு அவர்களிடம் பேச மாட்டேன். ஆனால் இப்பொழுது நான் அதிகம் சண்டை போட்டது ராஜசேகர் சாருடன் தான். அவரை என்னால் விட முடியவில்லை. மனசு விட மாட்டேன் என்கிறது. 2டி இந்த படத்தை தயாரிக்கவில்லை என்றால் இந்த படம் இந்த அளவிற்கு வந்திருக்குமா, இந்த படத்தை இயக்கி இருப்பேனா என்பது சந்தேகம்தான். அந்த விதத்தில் சூர்யா சார், ஜோதிகா மேம் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி. மெய்யழகன் மெய்யழகனாகவே வந்ததற்கு முக்கிய காரணம் அவர்கள் தான். படத்தின் கண்களாக இருக்கும் கார்த்தி, அர்விந்த்சாமி இருவருக்கும் நன்றி” என்று கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *