சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறுவது இல்லை ! தங்கலான் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகர் விக்ரம்!
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து, இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரைகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம்… வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் தங்கலான் படத்திற்கு, ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் வழங்கிய ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக் குழுவினர் விழா ஒன்றினை ஒருங்கிணைத்திருந்தனர்.
சென்னையில் நடைபெற்ற இந்த நன்றி தெரிவிக்கும் விழாவில் தயாரிப்பாளர் நேகா ஞானவேல் ராஜா, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனஞ்ஜெயன், நடிகர் விக்ரம், இயக்குநர் பா. ரஞ்சித், விநியோகஸ்தர் சக்திவேலன் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில்
தயாரிப்பாளர் நேகா ஞானவேல் ராஜா பேசுகையில், ” ‘தங்கலான்’ கோல்டன் வெற்றி. இதை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா. ரஞ்சித் – விக்ரம்- ஜி வி பிரகாஷ் குமார்- உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடித்த நடிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. தங்கலான் திரைப்படம் தெலுங்கிலும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. அங்கு தற்போது அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. ” என்றார்.
இயக்குநர் பா. ரஞ்சித் பேசியதாவது, ” ‘தங்கலான்’ படத்தின் வெற்றி விழாவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த வெற்றி சாதாரணமானதல்ல. பழக்கப்பட்ட மொழியில் ஒரு படைப்பை வழங்குவது எவ்வளவு கடினமோ… அதைவிட பழக்கமே இல்லாத ஒரு மொழியில் ஒரு படைப்பை வழங்கி அதனை வெற்றி பெற வைப்பது என்பது கடினமானது. மக்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கடத்த வேண்டும். எனக்குள் இருக்கும் அகத்தை இந்த படைப்பிற்குள் வெளிப்படுத்த வேண்டும். நான் மக்களிடம் பேச வேண்டும் என்று நினைத்த விசயத்தை இதில் சொல்லி இருக்கிறேன்.
இந்தத் திரைப்படம் காலத்தைக் கடந்து பொக்கிஷமாக இருக்கும். அதற்கான அனைத்து விசயங்களும் இதனுள் இருப்பதாக நான் கருதுகிறேன். இது போன்ற திறமை வாய்ந்த நடிகருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சியான விசயம். அவருடன் இணைந்து பணியாற்றியதை ஒரு அனுபவமாகவும், பாடமாகவும் நினைக்கிறேன். அவருடனான பயணம் எனக்கு நல்ல படங்களை உருவாக்குவதற்கு உதவும் என நம்புகிறேன். அவர் எனக்கு செய்த பெரிய விசயத்தை அவருக்கு நான் எப்படி திருப்பி செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. இருந்தாலும் அவருக்கும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
நடிகர் விக்ரம் பேசியதாவது, ” அனைவரும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த படத்தை தொடங்கும் போது.. இது போன்ற ஒரு கதை. இது போன்றதொரு மக்கள். இது போன்றதொரு வாழ்க்கை. அந்த காலகட்டத்தில் மக்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு .. இன்னல்கள்.. சவால்கள்.. என பல விசயங்களை எதிர்கொண்டு தங்கத்தை தேடுகிறார்கள். எல்லாத்தையும் மீறி அவர்களுக்கு தங்கம் கிடைக்கிறது. எட்டாத ஒரு விசயத்தை…சுலபமாக கிடைக்காத ஒரு விசயத்தை … கஷ்டப்பட்டு வாங்க வேண்டியதாக இருந்தது. இந்தப் படத்திற்கான எங்களின் பயணமும் இப்படி தான் இருந்தது. படத்தில் நாங்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தோம். இந்த படத்தில் யாரும் நடிக்கவில்லை. அந்த கதாபாத்திரமாகவே வந்திருக்கிறார்கள்.
சில படங்கள் சில நேரத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெறுவது இல்லை. அது ஏன் என்பது நமக்கு தெரிவதில்லை. ஆனால் அந்தப் படங்களில் இடம்பெறும் சில காட்சிகளில் நன்றாக நடித்திருந்தேன். அந்தப் படம் வெற்றி பெறாததால் மக்களை சென்றடையவில்லை. அதனால் இந்த படம் வெற்றியைப் பெற்ற போது அதற்காக நாங்கள் பட்ட கஷ்டத்தை ரசிகர்கள் உணர்கிறார்கள். பாராட்டுகிறார்கள். ‘மகான்’ திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியானது. ஆந்திராவில் அதற்கான ரசிகர்கள் கூட்டம் இருந்ததை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். தங்கலான் படத்தின் வெற்றி, ரசிகர்கள் எனக்கு கொடுத்த ஊக்கம். இந்த வெற்றியை ரசிகர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். ” என்றார்.