என்னுடைய வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம்! ‘தங்கலான்’ திரைப்படத்தின் இசை வெளியீடு விழாவில் நடிகர் சீயான் விகரம்!
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் & நீலம் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது படக்குழுவினருடன் நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நடன கலைஞர்களின் பிரம்மாண்டமான நடனம் – நாட்டுப்புற கலைஞர்களின் கிராமிய இசை- என பல்வேறு நிகழ்வுகளால் இந்த விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்த நிக்ழ்வில்,
இசையமைப்பாளர் ஜீ. வி பிரகாஷ் பேசியதாவது,
” இந்தத் திரைப்படத்தில் அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள். அவர்களுடன் நானும் இணைந்து ஒரு சிறிய அளவில் உழைத்திருக்கிறேன். பழங்குடி இன மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் இசையையும் நேர்மையாக பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறேன். என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறேன். ரசிகர்களாகிய நீங்கள் பாருங்கள். கேளுங்கள்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா- இயக்குநர் பா. ரஞ்சித் -நடிகர் விக்ரம் ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏனெனில் அவர்கள் கொடுத்த இந்த வாய்ப்பினை நான் சிறப்பாக பயன்படுத்தி முயற்சி செய்திருக்கிறேன். விக்ரமுடன் ‘தெய்வத்திருமகள்’, ‘தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து, ‘தங்கலான்’ படத்தில் இணைந்திருக்கிறேன். இயக்குநர் பா. ரஞ்சித்தின் மிகப்பெரிய கனவு படைப்பு இது. இதில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு அவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ஞானவேல் ராஜா- அவருடன் இணைந்து ஏராளமான படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இந்த படம் அவருக்கு சிறந்த தங்கமாக அமையும். இந்தத் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். ” என்றார்.
இயக்குநர் பா. ரஞ்சித் பேசியதாவது,
” மகிழ்ச்சியான தருணம் இது. ‘அட்டகத்தி’ படத்தில் ஞானவேல் ராஜாவுடன் தொடங்கிய இந்தப் பயணம். எனக்கு ஆதரவு கொடுத்து இந்த படத்தினை இயக்குவதற்கான வாய்ப்பளித்து, என் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ஞானவேல் ராஜா. அவரை மறக்க கூடாது என்பதற்காக உருவாக்கியது தான் ‘தங்கலான்’ என நான் நினைக்கிறேன். சர்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. அந்தத் தருணத்தில் ஞானவேல் ராஜாவுடன் தான் இணைந்து பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன். அப்போது என்னிடத்தில் ‘அவருக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. ஏன் அவருடன் இணைந்து இருக்கிறீர்கள்?’ என கேள்வி கேட்டனர். அந்தத் தருணத்தில் என் மனதில் இவருடன் இணைய வேண்டும் என்று தோன்றியது அவ்வளவுதான்.
விக்ரமை பல வடிவங்களில் எனக்கு பிடிக்கும். அவர் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் எனக்கு பிடிக்கும். ஏனைய வணிக ரீதியான நட்சத்திரங்களை போல் நான் விக்ரமை பார்த்ததில்லை. ஏனெனில் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்காக தன்னை வருத்திக் கொள்பவர். ‘ஐ’ படத்தில் ஒரு சிறிய பகுதிக்காக தன்னை மாற்றிக்கொண்ட விதம் எனக்கு பிடித்திருந்தது. அதில் அவருடைய கலை மீதான தீவிர நேசிப்பு எனக்குத் தெரிந்தது. இதுபோன்றது ஒரு மகா கலைஞருடன் இணைந்து பணியாற்றுவதில் விருப்பம் கொண்டேன்.முதலில் அவருடன் இணைந்து பணியாற்றும்போது எனக்குள் பயம் இருந்தது. இயக்குநராக ஒரு கதையை எழுதி விட்டேன். இந்த கதையை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் விக்ரமுக்கு என சில தேவைகள் உண்டு. இதையெல்லாம் அவரை சந்திக்கும் போதே விவரித்தேன்.அவரும் முழுமையாக புரிந்து கொண்டு அற்புதமான ஒத்துழைப்பை வழங்கினார்.
இந்த சினிமா சில விவாதங்களை ஏற்படுத்தும். சில கேள்விகளை எழுப்பும். அந்த கேள்விகளுக்கான பதிலை தேடுவதன் மூலமாக வரலாற்றில் நாம் மறந்த.. மறைத்த.. பல விசயங்களுக்கான பதிலை பெற முடியும் என நம்புகிறேன். இதுதான் என்னுடைய வலிமை என நம்புகிறேன். இதுதான் என்னுடைய அரசியல். இந்த அரசியல் இல்லையென்றால் நான் இல்லை. இதற்காக அண்ணன் பாபா சாகிப் அம்பேத்கருக்கு நான் மிகப்பெரிய நன்றியை சொல்கிறேன். அவர்தான் ‘நீ உன் சமூகத்திற்காக.. உன் மக்களுக்காக.. பேசியாக வேண்டும்’ என்ற உத்வேகத்தை வழங்கியவர். அவருடைய குரலாக.. அவருடைய மாணவராக.. அவருடைய சீடராக. தொடர்ந்து நான் இயங்குவேன். ” என்றார்.
சீயான் விக்ரம் பேசியதாவது,
” இந்த படத்தின் பிள்ளையார் சுழி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான். இது போன்றதொரு படைப்பை உருவாக்குவதற்கு தனித்துவமான துணிச்சல் தேவை. அதனை செய்து சாதித்ததற்காக உங்களுக்கு இந்த தருணத்தில் ஒரு ‘ஓ’ போட்டு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கலானுக்கு வாழ்வு கொடுத்த உங்களுக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன். என்னுடைய வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம்.இது போன்றதொரு படத்திற்கு வாய்ப்பளித்ததற்காக ரஞ்சித்திற்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.மெட்ராஸ் படம் வெளியானதில் இருந்து அவர் மீது எனக்கு ஒரு மரியாதை. அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு தொடர்ந்து விருப்பமாக இருக்கிறேன். அவருடைய அடுத்த படத்தில் தினேஷ் ஹீரோ. அதற்கு அடுத்த படத்தின் ஆர்யா ஹீரோ. அதற்கடுத்து நாம் இருவரும் மீண்டும் சேரலாமா? எனக் கேட்டிருக்கிறேன்.
இந்தப் படத்தில் அவர் எனக்கு ஒரு சவாலை கொடுத்தார். இந்த கதாபாத்திரத்தில் தனித்துவமாக நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அந்த சவாலை கொடுத்ததற்காக அவரை நான் என்றென்றும் மறக்க மாட்டேன். நான் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தால் அதற்கான அங்கீகாரம் அனைத்தும் இயக்குநர் பா ரஞ்சித் -விஜய் -மணிரத்னம் -ஷங்கர் -ஹரி போன்ற இயக்குநர்களுக்கு தான் சேரும். ஏனெனில் இவர்கள் கொடுத்த ஊக்கம். வடிவமைத்த கதாபாத்திரம். கொடுத்த உத்வேகம் தான் காரணம். இவர்களைப் போன்ற இயக்குநர்கள் இருப்பதால்தான் என்னைப் போன்ற நடிகர்கள் உருவாக முடிகிறது. ரஞ்சித்திற்கு என தனித்துவமான ஆற்றல் வாய்ந்த குரல் இருக்கிறது. அதனை பின்பற்றுவதற்கு ஒரு கூட்டமும் இருக்கிறது. அதனை பொறுப்புணர்வுடன் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறார். இதில் என்னுடைய ஆரோக்கியமான ஆதரவு உண்டு. அவருக்குள் ஒரு மென்மையான இதயம் இருக்கிறது. அதனையும் நான் கண்டிருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு காத்திருக்கிறேன். ” என்றார்