இதுபோன்றதொரு மேடை கிடைப்பது கடினம்! ‘கருடன்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகர் சூரி!
லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் படக்குழுவினர் சென்னையில் பிரத்யேக நன்றி அறிவிப்பு விழாவை ஒருங்கிணைத்தனர். இதில் படத்தின் தயாரிப்பாளர் கே. குமார், படத்தை வழங்கிய ஃபைவ் ஸ்டார் செந்தில், விநியோகஸ்தர் சிதம்பரம், இயக்குநர் துரை. செந்தில்குமார், இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநரும், நடிகருமான சசிகுமார், கதையின் நாயகனான சூரி, ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ. வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில்
நடிகர் சூரி பேசுகையில்,
” ஒரு படத்திற்கு கதையை தயார் செய்து யார் வேண்டுமானாலும் படப்பிடிப்புக்கு சென்று விடலாம். படப்பிடிப்பை நிறைவு செய்து விடலாம். படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளையும் நிறைவு செய்யலாம். கஷ்டப்பட்டு படத்தை வெளியிடவும் செய்யலாம். படம் வெளியான பிறகு இதுபோன்றதொரு மேடை கிடைப்பது கடினம். அந்த வகையில் நான் கதையின் நாயகனாக நடித்த இரண்டு படத்திற்கும் இத்தகைய மேடைக்கு வந்து விட்டேன். இதற்காக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில்,
” கருடன் திரைப்படத்தை வெற்றி படமாக்கிய தமிழ் ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி. இன்றைய காலகட்டத்தில ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தர மறுக்கிறார்கள். டிஜிட்டல் தளங்களை நம்பித்தான் திரைப்பட வணிகம் இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இதைத்தான் நாம் மாடலாக வடிவமைத்து வருகிறோம். டிஜிட்டல் தளங்கள், தொலைக்காட்சி உரிமை ஆகியவற்றிலிருந்து படத்திற்கான முதலீடு கிடைக்கும். திரையரங்க வெளியீடு என்பது கூடுதல் போனஸ். இதை இந்த வருடம் மாற்றிய சில படங்களில் கருடனும் ஒன்று. இரண்டாவது படம் என்றும் சொல்லலாம். திரைப்படத்தில் முதலீடு செய்த பணத்தை திரையரங்கத்தில் இருந்தும்… திரையரங்கத்தின் வசூலில் இருந்தும் மீட்க முடியும் என்பதை நிரூபித்த படம் கருடன். டிஜிட்டல் தளம் மற்றும் தொலைக்காட்சி உரிமை விற்பனையை போனசாக வைத்துக் கொள்ளலாம் என்று உறுதிப்படுத்திய படம் கருடன்.
நடிகர் சசிகுமார் பேசுகையில்,
தயாரிப்பாளர் குமார் முதலில் சக்சஸ் மீட் என்று சொன்னார். உடனே அவரிடம் சக்சஸ் மீட் என்று வேண்டாம். தேங்க்ஸ் கிவிங் மீட் என்று சொல்லுங்கள். அதனால் தற்போது நன்றி என்று மாற்றிவிட்டார்கள். இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஏனெனில் தற்போதெல்லாம் ஓடாத திரைப்படங்களுக்கு தான் சக்சஸ் மீட் வைக்கிறார்கள் என்று ஒரு பேச்சு இருக்கிறது.அது ஏன்? என்றால் தோல்வி என்றாலே அனைவருக்கும் பயம். தோல்வியை யாரும் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த திரைப்படத்தில் வெற்றி பெற முடியும். அதனால் ஒரு திரைப்படம் தோல்வி அடைந்தால்… அது தோல்வி அடைந்திருக்கிறது என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.தோல்விக்கு நாம் ஒரு காரணத்தை தான் சொல்வோம். ஆனால் வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு. இதனால் ஓடியது இவர்கள் நடித்ததால் தான் வெற்றி பெற்றது என்பார்கள். அதேபோல் கருடன் படத்தின் வெற்றிக்கு பல காரணங்களை சொன்னார்கள். சூரியினால்… சசிகுமாரால்… வில்லனால்.. இயக்குநரால்… என பல பல விசயங்களை குறிப்பிட்டார்கள். ஆனால் இந்தப் படத்தின் வெற்றிக்கு என்னை பொறுத்தவரை ஒரே ஒருத்தர் தான் காரணம். அது தயாரிப்பாளர் குமார் தான்.
ஏனெனில் இந்த திரைப்படத்தை வடிவமைத்ததே அவர் தான். என்னுடைய கதாபாத்திரத்திற்கும் நான் தான் பொருத்தமாக இருப்பேன் என்று தீர்மானித்தவரும் அவர்தான். இந்த கதாபாத்திரத்தை என்னிடம் விவரிக்கும் போது எனக்கு தெரியவில்லை. இந்தப் படத்தின் கதையைக் கேட்டதிலிருந்து. வெளியாகும் வரை இந்த படம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் இருந்தவர் தயாரிப்பாளர் குமார் மட்டும் தான். மற்ற அனைவரும் நான் உட்பட படம் வெளியான பிறகு தான் தெரியும் என்று இருந்தோம்.பட வெளியீட்டிற்கு முன்னரே இந்த திரைப்படத்தை டிஜிட்டல் தளங்களில் விற்பனை செய்ய முடியவில்லை என்ற நிலை இருந்தது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பியவர் தயாரிப்பாளர் தான். ஓ டி டி விற்பனை ஆகவில்லை என்றாலும் ரிஸ்க் எடுத்து படத்தை வெளியிட்டார். ஒரு திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையை இந்த ‘கருடன்’ ஏற்படுத்தி இருக்கிறது. கருடன் படம் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருகை தருகிறார்கள். எனக்கு இது மகிழ்ச்சியை தருகிறது.