அனைவரும் விரும்பும் ஒரே முதலாளி இவர்தான்!’லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடுவில் நடிகர் வித்தார்த்!
‘யதார்த்த நாயகன்’ விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் – நடிகர் பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். படத்தின் இசையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி முருகன் வெளியிட, சிறப்பு விருந்தினர்களும், படக் குழுவினரும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார். கிரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை எம் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில்,
நாயகி ஸ்வேதா டோரத்தி பேசியதாவது, ”லாந்தர் என்பது இரவின் அடையாளம். இந்தப் படம் எனக்கு நிறைய நண்பர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதற்காகவே படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எம் சினிமாஸ் பட நிறுவனம் போல் ஒரு தயாரிப்பாளர் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி..படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் கண்ணசைவுக்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் ஞானசௌந்தர் இயங்குவார். அந்த அளவிற்கு இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் இடையே ஒரு புரிதல் இருந்தது. படத்தின் இசையமைப்பாளரான பிரவீனின் பாடல்களுக்கு நான் பெரிய ரசிகை ஆகிவிட்டேன். தூய தமிழில் பாடல்களை வழங்கியதற்காக பாடலாசிரியர்கள் தேவா மற்றும் உமாதேவிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
நாயகன் விதார்த் பேசியதாவது, ”நாயகன் போலீஸ் என்று சொன்னவுடன் மூன்று மாதம் நேரம் ஒதுக்குங்கள், உடலை முறுக்கிக் கொண்டு வருகிறேன் என்றேன். இதற்கு இயக்குநர் அந்த கதாபாத்திரம் பொதுமக்களின் பிரதிநிதி. அதனால் நீங்கள் இப்போது இருக்கும் தோற்றத்திலேயே வாருங்கள் என்றார். படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், இசையமைப்பாளர் என அனைவரும் புதுமுகங்கள். இந்த திரைப்படத்தின் மூலம் அவர்களின் திறமை வெளியே தெரியும். பாடலாசிரியர் தேவாவிற்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. நான் ஏராளமான தயாரிப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் பத்ரி போன்ற ஒரு தன்னடக்கம் மிகுந்த மனிதரை சந்தித்ததில்லை. பார்ப்பதற்கு எளிமையான மனிதராக இருந்தாலும் அவர் பெரிய ஆள். இவரிடம் ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றுகிறார்கள். அனைவரும் விரும்பும் ஒரே முதலாளி இவர்தான். சினிமா மீது இவர் வைத்திருக்கும் ஆர்வத்தின் காரணமாகவே இவர் வெற்றி பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். ஏனெனில் இவர் ‘லாந்தர்’ படத்தின் மூலம் வெற்றியை பெற்றால் தொடர்ந்து படங்களை தயாரிப்பார்,” என்றார்.