ஸ்டார் திரை விமர்சனம்!
இயக்கம் – இளன்
நடிகர்கள் – கவின் , அதிதி பொஹங்கர், லால்
இசை – யுவன் சங்கர் ராஜா,
தயாரிப்பு – ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெ்ன்
சிறு வயதிலிருந்தே ஒரு நடிகராக சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறான் ஒருவன், அதற்கு அவரது தந்தை பக்க பலமாக இருக்கிறார் ஆனால் அவரது தாய் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கல்லூரியில் பொறியியல் படிக்கும் கட்டாயம் ஏற்படுகிறது , எனினும் தன் முயற்சியில் பின்வாங்காமல் பெரிய நடிகராக ஆக முயற்சி செய்கிறான் , இதன் அவன் நடிப்பில் சாதித்தானா..? இல்லை அவனது கனவு பொய்த்து போனதா ..?என்பதே இப்படத்தின் மீதிக்கதை,..!!
கவினுக்கு இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது , அதற்கு காரணம் முந்தைய வெற்றிப்படமாக அமைந்த டாடா, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது, இந்நிலையில் இந்த படத்திற்கு நடிகர் தேர்வு முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைத்தும் எதிர்பார்ப்பை விடவும் அதிகமாவே கிடைத்தது, யுவன் இசை பாலிவுட் நடிகை என ஒரு பெரிய ஸ்டாருக்கு கிடைக்கும் அந்தஸ்து இந்தப் படத்தில் கவினுக்கு கிடைத்தது , உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கவின் ஒரு சிறந்த நடிகர் , அவர் நடிக்கும் கதாபாத்திரத்தில் உயிர் இருக்கும். இந்தப் படத்திலும் அதை நியாயப்படுதியுள்ளார்,
ஒட்டு மொத்த படத்தையும் கவின் தோளில் சுமத்திருக்கிரார் இயக்குனர்.. அவரது நடிப்பிற்கு இந்தப் படம் ஒரு நல்ல தீனி என்றுதான் சொல்ல வேண்டும், அவர் மட்டுமல்ல நடிகர்கள் குழு அனைவருமே தங்களது சிறப்பான நடிப்பை இந்தப் படத்திற்கு கொடுத்துள்ளனர் , கதாநாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் ஆதித்தி பொஹங்கர் இருவருக்கும் திரைக்கதையில் சமமான வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இருவரும் கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி திரையில் தங்களது இருப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.
கவினின் தந்தையாக நடித்திருக்கும் லால் இயல்பான நடிப்பு மூலம் கவர்ந்தாலும், வசன உச்சரிப்பில் சற்று தடுமாறுகிறார். அதிலும், அவர் பேசும் தமிழ் வார்த்தைகள் சில சரியாக புரியாதபடி இருக்கிறது. கவினின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம் சில இடங்களில் அதீத நடிப்பை வெளிப்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.
மாறன், காதல் சுகுமார், நிவேதிதா ராஜப்பன், தீப்ஸ், ராஜா ராணி பாண்டியன், சஞ்சய் ஸ்வரூப், தீரஜ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதைக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் நன்றாகவே வந்துள்ளது, அதிலும், 80-ஸ் காலத்து ஸ்டைலில் போடப்பட்ட பாடல்கள் செம. பின்னணி இசை சில இடங்களில் தடுமாறினாலும், படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்கு உயிர்நாடியாக பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் எழில் அரசு.கே-வின் கேமரா, கவின் என்ற நடிகரின் பல பரிணாம நடிப்பை மிக நேர்த்தியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். 80-களின் இறுதியில் தொடங்கும் கதையை படிபடியாக தற்போதைய காலக்கட்டத்திற்கு நகர்த்தி வரும் ஒளிப்பதிவாளர் எழில் அரசின் கோணங்களும், வண்ணங்களும்
திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் படம் சொல்ல வருவது கனவுகளை சிதைத்து விடாதீர்கள்..அதற்கான உழைப்பு முக்கியம்.. ஒவ்வொரு மகனும் பெற்றவர்களுக்கு ஸ்டார் தான்….!!!
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.2/5