ராதிகாவை நான் வாடி போடி என்றுதான் கூப்பிடுவேன்! தி ப்ரூஃப் திரைப்படத்தின் இசை வெளியீடு விழாவில் இயக்குனர் மிஷ்கின்!
‘Golden studios’ சார்பில் தயாரிப்பாளர் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. மாறுபட்ட களத்தில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, திரைப்பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குநர் ஆர் வி உதயகுமார், யூகி சேது பாடலாசிரியர் சினேகன், ரோபோ சங்கர், நடிகர் சந்தோஷ் பிரதாப் உட்பட பல திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
இந்த நிகழ்வில்,
இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது…
ராதிகாவை நான் வாடி போடி என்றுதான் கூப்பிடுவேன். அவள் எனக்கு அந்தளவு நெருங்கிய தோழி. நானும் அவளும் சினிமாவில் அஸிஸ்டெண்டாக இருந்த காலத்தில் இருந்து தெரியும். நான் படம் செய்ய ஆரம்பித்த போது, அவளைத்தான் முதலில் கூப்பிட்டேன் ஆனால் வர மாட்டேன் என்றாள், முதல் மூணு படத்திற்கும் கூப்பிட்டேன் வரவில்லை ஆனால் அவளே ஒரு நாள் கூப்பிட்டு நான் ரெடி சார் எனச் சொன்னாள். அவளுக்கு நம்பிக்கை வந்த பிறகு என்னிடம் வந்து மாஸ்டராக பணியாற்றினாள். சினிமாவில் பல காலம் ஒரு சிலர் மட்டுமே நண்பர்களாக இருப்பார்கள், நான் 300 பேருக்கு மேல் அறிமுகப்படுத்தியுள்ளேன். ஆனால் என் பிறந்த நாளுக்கு முதல் ஆளாக ராதிகா தான் போன் செய்வாள். அத்தனை சிறந்த நட்பு, அவள் படமெடுத்திருக்கிறேன் என்று சொன்ன போது நம்பவில்லை, படத்தில் ஜெயிச்சிட்டியா என கேட்கும்போது, முயற்சிக்கொண்டிருப்பேன் என வசனம் வருகிறது. அது தான் முக்கியம் முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டும் அது தான் சினிமா. அதே மாதிரி நீயும் சினிமாவில் இரு. நான் சினிமா பற்றி கருத்து சொல்ல மாட்டேன். படமெடுத்து விட்டாய் இனி பத்திரிக்கையாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். ராதிகா 30 மார்க் எடுத்திருந்தால் 50 மார்க் கொடுங்கள் அதை மட்டும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். தீபக் இசையமைப்பாளர் சின்ன பையன், பாடல் சூப்பர் என்று சொல்ல மாட்டேன் நன்றாக வந்துள்ளது வாழ்த்துகள். சாய் தன்ஷிகா மிகச்சிறந்த நடிகை அவரை என் படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன், வருங்காலத்தில் அவருக்காகக் கதை எழுதுவேன். சினிமா என்பது என்னைப்பொறுத்தவரை கடவுள் மாதிரி அதை நாம் வணங்குவோம். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
இசையமைப்பாளர் தீபக் பேசியதாவது…
இது எனக்கு முதல் வாய்ப்பு, தயாரிப்பாளர் கோமதி மேடத்திற்கு நன்றி. மிஷ்கின் சார் உங்கள் அறிவுரையைக் கண்டிப்பாகப் பின்பற்றுவேன். தன்ஷிகா மேடத்திற்கு நன்றி. இப்படத்தில் என் உடன் பணிபுரிந்த குழுவினருக்கு நன்றி. இசை சொல்லித் தந்த என் அப்பாவிற்கு நன்றி.
இயக்குநர் ராதிகா பேசியதாவது…
என்னை இன்று வரை தோழியாக மதித்து, எனக்கு வாய்ப்பளித்த மிஷ்கின் சாருக்கு என் நன்றிகள். நான் இங்கு நிற்கக் காரணம் அவர் தான். எனக்கே என் திறமையைச் சுட்டிக்காட்டியவர் அவர் தான். அவருக்கு நன்றி. ராஜன் அப்பா என் அப்பாவின் தோழர் இன்று வரை என்னை மகளாகத்தான் பார்த்துக் கொள்கிறார். இப்படத்திற்காக என்னுடன் துணை நின்ற ஜேசன் மற்றும் எடிட்டர் கமலக்கண்ணனுக்கு நன்றிகள். என் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. சாய் தன்ஷிகா ஆக்டிங் பத்தி எல்லோருக்கும் தெரியும் ஆனால் இந்தப்படத்தில் அவர் மனசாட்சிக்கு எவ்வளவு பயப்படுகிறார் அடுத்தவருக்காக எத்தனை இறங்கி வருவார் எனப் பார்த்தேன். மிகச்சிறந்த மனித நேயம் கொண்டவர். படத்தில் அடிபட்டு ரத்தம் வந்த போது கூட பதறாமல் இருந்தார், நாங்கள் தான் பதறினோம். அவரை வைத்து இன்னும் 100 படம் என்றாலும் செய்வேன். என் மகன் இசையமைப்பாளர் அவன் பிள்ளையாகக் கிடைத்தது எனக்குத் தான் பெருமை. எங்களை வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.