சிவகார்த்திகேயன் வழங்கும் ‘குரங்கு பெடல்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
‘மதுபானக்கடை’, ‘வட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘குரங்கு பெடல்’. இது ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை தழுவி படமாக உருவாகியுள்ளது. இதில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். படம் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
நடிகர் ஜென்சன் திவாகர், “படத்தைப் போலவே படப்பிடிப்பும் ரிலாக்ஸாக இருந்தது. இயக்குநர் கமல் அண்ணா ரொம்ப பொறுமையாக எங்களை ஹேண்டில் செய்தார். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.
தயாரிப்பாளர் சவிதா, ” இந்தப் படம் ஆரம்பித்ததில் இருந்து படத்தை வெளியிட்டு கொடுக்கும் சிவகார்த்திகேயன் சார் வரைக்கும் அனைவருக்கும் நன்றி. ‘குரங்கு பெடல்’ கதை கேட்டதும் உடனே நான் கனெக்ட் ஆகிவிட்டேன். சைக்கிள் நம்முடைய முன்னேற்றத்தில் முக்கியமானது. குறிப்பாக, பெண்களுக்கு பல சுதந்திரம் கொடுத்தது”.
தயாரிப்பாளர் சஞ்சய், “எங்கள் எஸ்.ஆர்.ஜே. புரொடக்ஷன்ஸின் முதல் படம். படத்தை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி!”.
எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் கலை, ” இந்தப் படம் பார்த்ததும் எங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது. இண்டர்நெட், மொபைல் இல்லாத காலக்கட்டத்தில் வாழ்க்கை எப்படி நிதானமாக இருந்தது என்பதை இதில் பார்க்கலாம். இந்தப் படத்தின் முக்கிய ஸ்ட்ரென்த் இயக்குநர் கமலக்கண்ணன், தயாரிப்பாளர் சவிதா. நிச்சயம் பலருக்கும் நினைவுகளைத் தூண்டி விடும்”.
நடிகர் காளி வெங்கட், “இந்தப் படம் எனக்கு மிக முக்கியமானது. என் வாழ்க்கையின் பல முக்கிய தருணங்களை இந்தப் படம் நினைவுப்படுத்தி இருக்கிறது. ‘குரங்கு பாடல்’ கோவா ஃபிலிம் பெஸ்டிவல் ஒன்றில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்றது. எங்க அப்பா எனக்கு சைக்கிள் ரெடி பண்ணி கொடுத்த நியாபகங்கள் எல்லாம் எனக்கு இந்தப் படத்தில் வந்தது. உங்களுக்கும் பிடிக்கும்”.
இசையமைப்பாளர் ஜிப்ரான், ” இந்தப் படம் பார்த்ததும் எனக்கு கனெக்ட் ஆகிவிட்டது. நமக்கு மீசை முளைப்பதற்கு முன்னால், நாம் பெரிய பையனாகி விட்டோம் எனச் சொல்வது சைக்கிள்தான். ‘வாகை சூடவா’ படத்திற்குப் பிறகு கிராம சூழலில் இசை செய்ய இந்தப் படம் வாய்ப்புக் கொடுத்தது. படத்தை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி”.