9 வருடமாக போராடிய என்னை இயக்குநராக்கியது ராமராஜனின் ராசியான கை தான் ! சாமானியன் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்!

எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு ‘மக்கள் நாயகன்’ ராமராஜன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். அதுமட்டுமல்ல. ராமராஜனின் திரையுலக பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்த இசைஞானி இளையராஜா, தற்போது 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கைகோர்த்துள்ளார்
தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் R.ராகேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு கதாசிரியர் கார்த்திக் குமார் கதை எழுதியுள்ளார். கதாநாயகிகளாக நக்ஸா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி நடிகின்றனர். போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ‘சாமானியன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாயகன் ராமராஜன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே.எஸ் ரவிக்குமார், ஆர்வி உதயகுமார், பேரரசு, சரவண சுப்பையா, ரோபோ சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில்
இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் பேசியதாவது,
“ரஜினி சாரே ஒருமுறை என்னிடம் ராமராஜன் பற்றி குறிப்பிடும்போது, அவருக்கு இருக்கும் அந்த மாஸ் ஓப்பனிங் கலெக்சனை பார்த்து, நமக்கு போட்டியாக முன்னாடி போய்க் கொண்டிருக்கிறார் என பயந்துவிட்டேன் என்று கூறினார். நான் பல வருடங்களாக உதவி இயக்குநராக பணியாற்றிய சமயத்தில் அந்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறாத நிலையை நான் பணியாற்றிய முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றால் அது ராமராஜன் நடித்த ‘ராஜா ராஜா தான்’ நான் அதற்கு முன் பல படங்கள் பணியாற்றி இருந்தாலும் முதன்முதலில் ஸ்டார்ட் கட் ஆக்சன் சொன்னது ராமராஜனுக்கு தான். ராஜ்கிரண் தயாரிப்பில், கஸ்தூரிராஜா கதை, வசனம் எழுதிய ‘பெத்தவ மனசு’ படத்தில் நான் இணை இயக்குனராக பணியாற்றினேன். அந்த படத்தில் ராமராஜன் ஹீரோ மற்றும் டைரக்டராக இருந்ததால் அவர் நடிக்கும் காட்சிகளை நான் தான் அவருக்கு ஸ்டார்ட் ஆக்சன் சொல்லி இயக்கினேன். அதுதான் என்னுடைய பிள்ளையார் சுழி. அதன்பிறகு ராஜ்கிரன் ஹீரோவாகிவிட்டார். கஸ்தூரிராஜா இயக்குநராகிவிட்டார். நானும் புரியாத புதிர் மூலமாக இயக்குநர் ஆகிவிட்டேன். 1981 லிருந்து 9 வருடங்கள் வரை ராசி இல்லாத சூழல் இருந்த நிலையில் ராசியான மனிதரான ராமராஜன் மூலமாக எனக்கு எல்லாமே சென்டிமென்ட் ஆக மாறியது. இதுதான் எனக்கும் அவருக்குமான பந்தம். .
நடிகை வினோதினி பேசும்போது, “11 வருடங்களுக்கு பிறகு ராமராஜன் மீண்டும் திரையில் தோன்றப் போகும் இந்த படத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது. பூந்தமல்லி அருகில் அபார்ட்மெண்ட் ஒன்றில் படப்பிடிப்பை நடத்திய போது எதிர்பாராத விதமாக அங்கே படப்பிடிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டதும் உடனடியாக அதற்கு மாற்றாக அதே போன்று ஒரு இடத்தை வளசரவாக்கத்தில் ஏற்பாடு செய்து இரவு பகலாக 72 மணி நேரம் தூங்காமல் பணியாற்றி காட்சிகளை படமாக்கினார் இயக்குநர் ராகேஷ். அவர் ஒரு தயாரிப்பாளருக்கான இயக்குனர்” என்று கூறினார்
நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது, “ஒரு விருது வழங்கும் விழாவில் நானும் ராமராஜன் அண்ணனும் ஒன்றாக கலந்து கொண்டோம். எனக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டிருந்தது யார் வழங்கப் போகிறார்கள் என்று எனக்கு தெரியாத நிலையில் அவர் கையாலேயே அந்த விருதை பெற்றேன். அன்று அவர் கலர் கலராக உடை அணிந்ததை கிண்டல் பண்ணி பேசினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை இளைஞர்கள் அந்த உடையை தான் ட்ரெண்டிங்காக அணிந்து வருகிறார்கள்” என்று பேசினார்.