நல்ல படம் எடுப்பதற்கு என்னை விட்டால் வேறு இயக்குனர் யார் இருக்கிறார்! ‘அழகி’ பட ரீரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் பார்த்திபன்!
கடந்த தலைமுறையினர் பார்த்து ரசித்த பல நல்ல தரமான படைப்புகள் தற்போது டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.. அப்படி இன்றைய இளைஞர்கள் பார்க்கவேண்டிய அன்றைய நல்ல படங்களின் பட்டியலில் ‘அழகி’ படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு.. கடந்த 2022ல் வெளியாகி இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரின் மனதையும் கரைய வைத்த ‘அழகி’ இப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு இன்று (மார்ச்-29) திரையரங்குகளில் ரீ ரிலீஸாகியுள்ளது..
இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அழகி படத்தின் தயாரிப்பாளர் D.உதயகுமார், நாயகன் பார்த்திபன், நாயகி தேவயானி, இளம் வயது பார்த்திபனாக நடித்த சதீஷ் ஸ்டீபன், ராமு சரவணன், கட்டையன், கட்டச்சி கதாபாத்திரங்களில் நடித்த செல்வம், சரஸ்வதி, அழகி படத்தை ரீ ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தர் K.M.சுந்தரம் பிக்சர்ஸ் மீனாட்சி சுந்தரம், பாடலாசிரியர் கருணாநிதி, இணை இயக்குநரும், சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் தளபதிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில்,
நடிகை தேவயானி பேசியதாவது,
“22 வருடம் கழித்து மீண்டும் எங்கள் படம் ரிலீஸாவது ஒரு மகிழ்ச்சியான தருணம். 22 வருடங்களுக்கு முன்பு இந்த படத்தில் நடிக்கும் போது இப்படி மீண்டும் ஒருமுறை ரீலீஸ் ஆகும் என அப்போது நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவே இல்லை. உண்மையிலேயே இது நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மிராக்கிள். அப்போதும் நடந்தது.. இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.. இது நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய ஒரு சந்தோஷ தருணம். ஒரு திரைப்படம் தயாரிப்பது பிரசவம் போல தான்.. 22 வருடத்திற்கு முன்பு ஒரு படத்தை சிரமப்பட்டு தயாரித்து அதை வெளியிட்டு வெற்றி பெற்ற பின்னர், இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் அந்த படத்தை மறுபடியும் ரிலீஸ் செய்கிறார் என்றால் நிச்சயமாக தயாரிப்பாளருக்கு ஒரு ஹேட்ஸ் ஆப். இது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. இத்தனை வருடம் கழித்து நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோமே, இதுவே சந்தோசமான விஷயம். இதில் நடித்த குட்டிக்குழந்தைகள் எல்லோரும் வளர்ந்து விட்டார்கள். இதுபோன்ற அழகான படங்களை ரீ ரிலீஸ் செய்து இப்போது இருக்கிற இந்த தலைமுறையினருக்கு இதைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். அவர்கள் இதிலிருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள முடியும்.
என் திருமணம் முடிந்த சமயத்தில் இந்த படத்தில் நடிக்கும்படி தங்கர் பச்சான் கேட்டார். என்னதான் காதல் இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் ஒரு மனைவி தனது கணவனை விட்டுக்கொடுக்க மாட்டாள் என்கிற அந்த கதாபாத்திர வடிவமைப்பு எனக்கு ரொம்பவே பிடித்தது. அந்த உணர்வு எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஒரு உண்மையான கதாபாத்திரம் தான் வளர்மதி. அதனால் உடனடியாக ஒப்புக்கொண்டேன். அந்த அளவிற்கு அவர் படைப்பின் மீது நம்பிக்கை இருந்தது. இந்த படத்தை என்னுடைய மகள்களுடன் சேர்ந்து திரையரங்கில் சென்று பார்க்கப் போகிறேன். இது எல்லோருக்கும் கிடைக்காத ஒன்று எனக்கு கிடைத்திருக்கிறது. நான் ரொம்பவே கொடுத்து வைத்தவள் என்று நினைக்கிறேன். பார்த்திபன் சாருடன் இணைந்து பல நல்ல வெற்றி படங்களில் நடித்துள்ளேன். அதில் அழகியும் ஒன்று..
நடிகர் பார்த்திபன் பேசியதாவது,
“தங்கர் பச்சான் ஒரு அற்புதமான கதாசிரியர். அவரைத்தவிர இந்த படத்தை வேறு யாராலும் இந்த அளவிற்கு வெற்றி அடைய வைத்திருக்க முடியாது. என்னிடம் வந்து ஒரு நல்ல படம் எடுப்பதற்கு என்னை விட்டால் வேறு இயக்குனர் யார் இருக்கிறார் சார் என்று என்னிடமே கேட்பார். நானே ஒரு டைரக்டர்.. என்னிடமே அப்படி கேட்பார். இப்போது அவர் தேர்தல் பிரச்சாரத்திலும்.. என்னை விட்டால் உங்களுக்கு நல்லது செய்ய வேறு யாராவது இருக்கிறார்கள் என்று அதையேதான் பேசிக் கொண்டிருப்பார். அதனால் நிச்சயம் அவர்தான் அந்த தொகுதியின் நாளைய எம்பி. அவருக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்.
அழகி ரீ ரிலீஸில் இந்த படம் வெற்றி அடைந்து அழகி-2வாக இந்த படம் மாற வேண்டும் என்பது. தங்கர்பச்சானின் நீண்ட நாள் ஆசை.. நந்திதா தாஸ் என்னிடம் பேசும்போது கூட அழகி-2க்காக நான் காத்திருக்கிறேன் என்று கூறினார். நானும் காத்திருக்கிறேன் என தயாரிப்பாளர் உதயகுமாரிடம் இங்கே சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறினார்.