பள்ளிகால முதல் காதல் வாழ்க்கைதான் இந்தப்படம் ! சபா நாயகன் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் அசோக் செல்வன்!
அறிமுக இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். கிளியர் வாட்டர் பிக்சர்ஸ் சார்பாக அரவிந்த் ஜெயபாலன், ஐ சினிமா சார்பாக அய்யப்பன் ஞானவேல் மற்றும் கேப்டன் மெகா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கேப்டன் மேகவாணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில்,
இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் பேசியதாவது,
” சபாநாயகன் திரைப்படம் நம் பள்ளிகால மற்றும் கல்லூரி கால மலரும் நினைவுகளை மீள் உருவாக்கம் செய்யும் ஒருவித நாஸ்டால்ஜியா வகை திரைப்படம் ஆகும். நம் எல்லோருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் ஏதோவொரு பெண்ணின் மீது ஒருவித க்ரஸ் இருந்திருக்கும். இப்படி பள்ளி கால வாழ்க்கை, கல்லூரி கால வாழ்க்கை, திருமண வாழ்க்கை என்று வாழ்க்கையின் மூன்றுவித காலகட்டங்களைப் பற்றி இப்படத்தில் பேசி இருக்கிறோம். இப்படம் அனைத்து ரசிகர்களும் குடும்பத்தோடு வந்து பார்த்து ரசிக்கும்படியான திரைப்படம். என் மீது நம்பிக்கை வைத்து முதல்படம் இயக்குவதற்கு வாய்ப்பளித்த ஐ சினிமாஸ் அய்யப்பன் ஞானவேல் மற்றும் பிற தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. வாய்ப்பளித்த நடிகர் அசோக் செல்வனுக்கும் நன்றி” என்றார்
நாயகி கார்த்திகா முரளிதரன் பேசியதாவது,
”தமிழில் பேசுவது கடினம், அதனால் ஆங்கிலத்தில் பேசுகிறேன். தவறாக நினைக்க வேண்டாம். இது தமிழில் என் முதல் படம். தமிழ் இந்த இண்டெஸ்ட்ரியில் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது, மதன் சார், அய்யப்பன் சார் என என் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. அசோக்செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நிறையவே சப்போர்ட்டிவ்வாக இருந்தார். எனக்கு ஆடிஷன் பாலசுப்ரமணியன் சார் கேமராவில் தான் நடந்தது. அதை நான் பெருமையாக கருதுகிறேன். பிரபு சார் என்னை மிகவும் அழகாக காட்டி இருக்கிறார். அவருக்கு நன்றி. இது ஒருவகை நாஸ்டால்ஜியா ப்லிம், எல்லாவித வயதினருக்குமான காட்சிகள் படத்தில் இருக்கும். பள்ளி கால, கல்லூரி கால, மணவாழ்க்கை கால கட்டங்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. குடும்பத்தோடு பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே நீங்கள் இப்படத்தை ரசிக்கலாம். ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் என எல்லோருமே இந்தக் கதையில் மிகுந்த நம்பிக்கை கொண்டு இருக்கிறோம். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்றார்.
நாயகன் அசோக் செல்வன் பேசியதாவது,
”எல்லோருக்கும் வணக்கம். எப்பொழுதுமே பத்திரிக்கையாளர்களை சந்திப்பது என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியான தருணம். என்னுடைய எல்லாப் படங்களையுமே மக்களிடம் கொண்டு சேர்த்து நான் இந்த இடத்தில் இன்று இருப்பதற்கு நீங்கள் தான் முழுமுதற்காரணம். சபாநாயகன் ஜாலியான க்ளீனான எண்டர்டெயினர் திரைப்படம். நடனம் மற்றும் நகைச்சுவைக்காக இப்படத்தில் நான் நிறையவே மெனக்கெட்டிருக்கிறேன். இந்த இரண்டுமே எனக்கு இப்படத்தில் புதியதாக இருந்தது. இயக்குநர்கள் இது போன்ற புதிய வாய்ப்பை கொண்டு வரும் போது தான் என்னைப் போன்ற நடிகர்கள் அதை பயன்படுத்திக் கொள்கிறோம். நான் இவ்வளவு ஹியூமர் செய்வேனா என்று மதன் சார் என்னிடம் ஆச்சரியப்பட்டார். முதல் காதல், பள்ளிகால வாழ்க்கை, போன்ற மறக்கமுடியாத நினைவுகள் நம் மனங்களில் அழியாமல் எப்போதும் இருக்கிறது. அவைகளை கிளறிவிடும் திரைப்படமாக சபாநாயகன் இருக்கும். மேலும் உங்களின் மனச்சோர்வுகளுக்கும் மன அழுத்தத்திற்கும் அரும் மருந்தாக சபாநாயகன் திரைப்படம் இருப்பதோடு, ஏற்கனவே சொன்னது போல் ஒரு நாஸ்டால்ஜியா பயணம் சென்றுவந்த உணர்வைக் கொடுக்கும். பத்திரிக்கை நண்பர்கள் என் பிற படங்களுக்குக் கொடுத்த அதே ஆதரவை இப்படத்திற்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.