எனக்கு ஹீரோயின் கிடைக்கவில்லை ! ’80’ஸ் பில்டப்’ பட இசை வெளியீட்டு விழாவில் சந்தானம் கலகலப்பு !
இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “80’ஸ் பில்டப்”. நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், இயக்குநர் சுந்தர்ராஜன், தங்கதுரை, சுவாமிநாதன், கும்கி அஷ்வின், சுபாஷினி கண்ணன், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில்,
இயக்குநர் கல்யாண் பேசியதாவது, “இப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு அளித்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் நாளைய இயக்குநர் சீசனில் இருந்து வெளிவந்த உடனே ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் படம் செய்ய வேண்டும் என்று நினைத்தது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் தான். அந்த கனவு இன்று நனவாகி இருக்கிறது. எல்லோருமே நான் வேகமாக படப்பிடிப்பை முடித்து விடுகிறேன் என்று பேசினார்கள். ஆனால் அது என் தனிப்பட்ட ஒருவனால் சாத்தியமான விசயம் அல்ல. என்னோடு பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவரும் ஒத்துழைத்ததால் தான் சாத்தியமானது. அவர்களுக்கு என் நன்றிகள். நான் இந்தக் கதையை சந்தானம் சாருக்காகவே தான் உருவாக்கினேன். கிட்டத்தட்ட ஒரு வருடம் அவருக்காக காத்திருந்தேன். இடையில் பல்வேறு சிக்கல்கள் வந்தது. இருப்பினும் இப்பொழுது திரைப்படம் முழுமையடைந்து வெளியாக இருக்கிறது. வாய்ப்பளித்த சந்தானம் சாருக்கு நன்றி. பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும்..” என்று பேசினார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது, “பொதுவாக காமெடிப் படங்களுக்கு இசை அமைப்பது என்பது மிகவும் கடினம். நான் அதை சில வருடங்கள் தவிர்த்து வந்தேன். த்ரில்லர், ஆக்ஷன் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து ஒரு கட்டத்தில் எனக்கு ஒருவித சைக்கோ மனநிலை வந்துவிட்டது. இனி துணிந்து ஒரு காமெடி படத்திற்கு இசை அமைக்கலாம் என்கின்ற முடிவுக்கு வந்தேன். இப்படத்திற்கு இசை அமைத்தது பெரிய அனுபவம். இயக்குநர் கல்யாண் காமெடி படத்திற்கு இசை அமைப்பதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தார். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு நன்றி. பாடலாசிரியர்கள் முத்தமிழ், என்னமங்களம் பழனிச்சாமி மற்றும் வாமனன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்” என்று பேசினார்.
படத்தின் நாயகி ராதிகா ப்ரீத்தி பேசியதாவது, ” நான் ஒரு நல்ல தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்க வேண்டும் என்று வெகுநாளாக காத்துக் கொண்டு இருந்தேன். இந்த வாய்ப்பைக் கொடுத்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சாருக்கு நன்றி. நான் கல்யாண் சாரின் மிகப்பெரிய ரசிகை. அவருடைய திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் கல்லூரி காலத்தில் இருந்தே சந்தானம் சாரின் மிகப்பெரிய ரசிகை. என் தோழிகள் என்னை பார்த்தா என்றே அழைப்பார்கள். அவருடன் சேர்ந்து அவருக்கு ஜோடியாக நடித்தது என் பாக்கியம். என்னை அழகாக காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பேசினார்.
நடிகர் சந்தானம் பேசியதாவது, “எல்லோருக்குமே வாழ்வில் ஒரு பயம் வரும். அப்படி ஒரு பயம் வரும் போதெல்லாம் என் பின்னால் இருந்து என்னை தாங்கிப் பிடிக்கும் என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த டைட்டிலை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார் தான் வைத்திருப்பாரோ என்று தோன்றுகிறது. நான் அவரை “அண்ணா” என்று அழைப்பேன். அவரும் என்னை பதிலுக்கு அண்ணா என்று அழைப்பார். கோயமுத்தூர் ஸ்லாங்கில் பேசிக் கொள்வது போல் பேசிக் கொள்வோம். நான் நாள்கணக்கில் கொஞ்சம் அதிகம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த காலத்தில் என்னை அணுகி, இடம் வாங்கி விட்டீர்களா..? என்று கேட்டார். இல்லை என்றதும் இந்த நாள் கணக்கில் சம்பளம் வாங்குவதை விட்டுவிட்டு மூன்று படங்களுக்கு மொத்தமாக சம்பளம் வாங்கிக் கொள்ளுங்கள். அதில் முதலில் ஒரு இடத்தை வாங்குங்கள்” என்று வழிகாட்டி என்னை முதன்முதலாக இடம் வாங்க வைத்த தயாரிப்பாளர் அவர் தான். தானும் வளர வேண்டும். தன்னுடன் சேர்ந்து மற்றவர்களும் வளர வேண்டும் என்கின்ற நல்லெண்ணம் அவருக்கு உண்டு. ரொம்பவே ஞானம் உள்ள புரொடியூஷர் ஞானவேல்ராஜா.
சந்தானம் படம் என்றாலே ஹீரோயின் கிடைக்கவில்லை என்கின்ற நியூஸ் வைரல் ஆகும். ஆனா இந்த படத்துல தமிழ் பேசத் தெரிஞ்ச ராதிகா அழகான ஹீரோயினா கிடைச்சிருக்காங்க… இந்தக் கதைக்குள்ள லவ்வை ரொம்ப அழகா இயக்குநர் கொண்டு வந்திருக்காரு… என் தங்கச்சி கதாபாத்திரத்துல சங்கீதா நடிச்சிருக்காங்க… அவுங்ககிட்ட நான் போடுற ஒரு சவால்ல தான் மொத்த கதையும் மூவ் ஆகும். 80 காலகட்டத்துல எடுக்க வேண்டிய படத்தை இப்ப எடுத்திருக்காங்கன்னு நினைக்காம, 80ஸ்ல நடக்குற ஒரு கதையை 80ஸ் காலகட்டத்துக்கே போயி நாம பாக்குறோம்னு நினைச்சி நீங்க பாத்தீங்கன்னா இந்தப் படம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். குடும்பத்தோடு பாக்கலாம். லாஜிக் இதெல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டுப் பாத்தீங்கன்னா இந்தப் படம் குடும் பத்தோட பாத்து குதூகலிக்கிற ஒரு படமா இருக்கும். பத்திரிக்கை நண்பர்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன். “ என்று பேசினார்.