‘மிஷ்கின் முன்னால் நான் எல்லாம் ஒன்றுமே இல்லை’! டெவில் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாலா !

‘மிஷ்கின் முன்னால் நான் எல்லாம் ஒன்றுமே இல்லை’! டெவில் இசை  வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாலா !

 

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”.  சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது.

இயக்குநர் பாலா பேசியதாவது,

“நான் என் படத்தின் பாடல் ஒலிப்பதிவிற்காக இளையராஜாவிடம் போயிருந்தேன். அப்பொழுது இளையராஜா மிஷ்கினைப் பற்றி சொன்ன ஒரு விசயம் எனக்கு ஞாபகம் வருகிறது. அப்பொழுதெல்லாம் எனக்கு மிஷ்கின் யார் என்றே தெரியாது. அவர் எடுத்த படத்தைப் பற்றியும் தெரியாது. ஒரு ஷார்ட்ஸ் அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஷூ மற்றும் டீ-சர்ட் போட்டுக் கொண்டு, துறுதுறுவென அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருந்தார் ஒருவர். அவர் போனதும், நான் இளையராஜாவிடம் யார் அது…? ஷார்ட்ஸ் ஷூவைப் போட்டுக் கொண்டு அங்கும் இங்கும் அலைவது என்று கேட்டேன். அதற்கு இளையராஜா, அவன் தான் மிஷ்கின், அவனை சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே அவன் மிகப்பெரிய Intellectual (இன்டெல்சுவல்) என்று கூறினார். அவர் எந்த கோணத்தில் அப்படி கூறினார் என்று தெரியாது. ஆனால் உண்மையாகவே மிஷ்கின் ஒரு இண்டெலக்ஷுவல் தான்.  அவனைப் பார்க்கும் போது ஒரு டெவில் போலத்தான் இருக்கிறான். நான் என்னுடைய போனில் அவன் நம்பரைக் கூட Wolf (வுல்ஃப்) என்று தான் பதிவு செய்து வைத்துள்ளேன். வணங்கான் படத்தில் உதவி இயக்குநராக இல்லை, இயக்குநராகவே நடித்துள்ளான். அவன் நடிக்கின்ற காட்சியை அவனையே இயக்கச் சொல்லிவிட்டேன்.

நடிகர் விதார்த் பேசியதாவது, “நான் முதலில் மிஷ்கின் சார் படத்தில் தான் நடிக்க அழைக்கிறார்கள் என்று தான் போனேன். ஆனால் அங்கு போன பிறகு தான் இயக்குநர் ஆதித்யா என்பதே தெரிந்தது. இப்படத்தில் நடித்து முடித்தப் பின்னர் தான் இப்படம் என் வாழ்நாளில் ஒரு மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது. எனவே இப்படி ஒரு அருமையான வாய்ப்பு கொடுத்த மிஷ்கின் சாருக்கு நன்றி. ஆதித்யா உண்மையாகவே அருமையான ஒரு இயக்குநர். அதைவிட மிகச்சிறந்த நடிகரும் கூட, என்னிடம் பிரமாதமாக நடித்துக் காட்டியிருக்கிறார்.  மிஷ்கின் சாரின் இயக்கத்தில் நடிக்க முடியவில்லை என்றால் கூட, அவரது இசையில் நடித்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. ” என்று பேசினார்.

இயக்குநர் ஆதித்யா பேசியதாவது, “இப்படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டு ஒரு இக்கட்டான தருணத்தில் நான் இருந்த போது, சேகர் மூலமாக தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் என்னை அணுகி இரண்டு இலட்சம் ரூபாய்கான செக்கை வழங்கினார்.  படப்பிடிப்பிற்கான பணிகளை துவங்கினோம். பிறகு தயாரிப்பு பணிகளில் ஹரி சாரும் தன்னை இணைத்துக் கொண்டார். தயாரிப்பாளர்கள் இப்படம் சிறப்பாக உருவாக எல்லா வகைகளிலும் உதவினார்கள் அவர்களுக்கு நன்றி. நான் முதலில் எழுதிய கதையை இயக்குநர் மிஷ்கினிடம் கொடுத்தேன். அவர் இந்தக் கதை நல்ல கதை தான். ஆனால் முதலில் நீ “அன்னாகரீனா”வைப் படி என்று கொடுத்தார்.  அது கிட்டத்தட்ட 600 பக்கம் இருக்கும்.  பின்னர் தேவி பாரதி எழுதிய சிறுகதையை வாசித்தேன். அது என்னை மிகவும் பாதித்தது. பின்னர் படத்திற்குள் பூர்ணா, விதார்த், அருண் என ஒவ்வொருவராக வந்தார்கள். பூர்ணா இப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.  அவருக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன். இப்பட உருவாக்கத்தில் உற்ற துணையாக இருந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு ஆதரவு அளியுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசிய இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது,

“எல்லாக் கதைகளும் ஒரே கதைகள் தான், “டெவில்” படத்தின் கதையும்  அதே தான். ஒரு அமைதியான வீட்டிற்குள் கருப்பு உள்ளே வரும். வீடு சின்னாபின்னமாகி சிதிலம் அடையும்,. மீண்டும் அது புத்துயிர் பெற்று துளிர்க்கும்.  அன்னா கரீனா தொடங்கி எல்லாவற்றிலும் கதை இதுதான்.  நான் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவன் அல்ல;  ஆனால் பைபிளை பலமுறை படித்திருக்கிறேன். இப்பொழுதும் இயேசு கிறிஸ்து என் பின்னால் நிற்பதைப் போல் உணர்கிறேன். நானும் சிலுவையில் தொங்குபவன் தான். இப்படத்தில் சில பாடல்களை முயற்சித்து இருக்கிறேன்.
நான் அடிக்கடி என் உதவி இயக்குநர்களிடம் சொல்லும் வார்த்தை, இந்த உலகில் மிக முக்கியமானதாக நான் கருதுவது, ஒரு பேனாவையும் பேப்பரையும் தான். அதனால் தான் எழுத்தாளர் ஜெயமோகனை முதலில் பேச அழைத்தேன். இன்று எனக்கு கர்நாடக இசையும், ஹிந்துஸ்தானி இசையும் கற்றுத் தரும்  ராமமூர்த்தி எனக்கு ஒரு குருநாதர் என்றால், எனக்கு இன்னொரு குருநாதரும் இருக்கிறார். அவர் இளையராஜா, அவர் கால்களில் விழுந்து வணங்குகிறேன்.
இவர்களுக்கு அடுத்ததாக என் வளர்ச்சியின்  மேல் எப்பொழுதுமே அக்கறை கொண்டு என்னை பாசத்தோடு அழைத்துக் கொள்பவர்கள் இயக்குநர் சசியும்,  தெலுங்கு படங்களை இயக்கி வரும் இயக்குநர் கருணாகரனும் அவர்களுக்கும் நன்றி.

ஒரு படம் இயக்குநரின் உழைப்பும் அறிவும் வெளிப்படையாக தெரிவது போல் இருந்தால் மட்டுமே அப்படம் ஓடும்.  இல்லை என்றால் அது எப்பேர்ப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் ஓடாது. அதை மக்கள் நிராகரித்து விடுவார்கள். படத்தை பாருங்கள். அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தூக்கிப் போடுங்கள். அவன் மீண்டும் அதைவிட நல்ல கதையோடு உங்களைத் தேடி வருவான். படம் நன்றாக இருந்தால் கொண்டாடுங்கள், ஆதரவு தாருங்கள்“ என்று பேசினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *