இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள தங்கலான் படத்தின் டீசர் வெளி

இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள தங்கலான் படத்தின் டீசர் வெளி

 

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, இன்று சென்னையில் படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் பிரமிக்க வைக்கும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங்க் வீடியோ பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்குத் திரையிடப்பட்டது.

இந்நிகழ்வினில் கலந்துகொண்ட

 

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா பேசியதாவது…

சீயான் விக்ரம் சாருக்கு ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் முதல் படம், மிகவும் அன்பானவர், கடின உழைப்பாளி தன் வேலையை மிக அர்ப்பணிப்புடன் செய்பவர். நானும் பா ரஞ்சித்தும் விக்ரம் சாரை சந்திக்கச் சென்ற போது என்ன தேதிகள் வேண்டும் என்றார், அந்த தேதிகள் தள்ளிப்போனபோது கூட அதே கெட்டப்பில் தன்னை மாற்றிக்கொள்ளாமல் இந்தப்படத்துக்காக காத்திருந்து உழைத்தார். அவர் அர்ப்பணிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டோம். அவரது உழைப்பு மிகப்பெரிது. இந்தப்படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ரஞ்சித் சார் எப்படிப்பட்ட படம் வேண்டுமானாலும் செய்யலாம்,  ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ் ஆரம்பித்த போது பாலா சாரை வைத்து படம் எடுப்பதாக இருந்தது, அப்போது ஹீரோவாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற போது, சீயான் சாரை சொன்னார். விக்ரம் சாருக்கு அது தெரியாது. அவரை வைத்து முதல் படம் தயாரிக்க இந்த நிறுவனத்திற்கு சூர்யா சார் வைத்த பெயர் தான் ஸ்டூடியோ க்ரீன். சூர்யா சார் விக்ரம் சாருக்காக வைத்த பெயர் தான் இது. அப்போது அது நடக்கவில்லை, இப்போது நடப்பது மகிழ்ச்சி.

இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது…

டீசர் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன் நிறையப் பேருக்கு நன்றி சொல்ல வேண்டும் இது டீசர் வெளியீடு தான் இன்னும் பல மேடைகள் இருக்கிறது. இந்தப்படம் நாங்கள் நினைத்ததை விட பட்ஜெட் அதிகமாகி விட்டது, ஆனால் இன்று வரை அதைப்பற்றி ஒரு கேள்வி கூட ஞானவேல் சார் கேட்கவில்லை. அவருக்கு எனக்குமான உறவு 10 ஆண்டுகளுக்கு மேலானது. அட்டகத்தியில் இருந்து இப்போது வரை தொடர்கிறது. அவர் கமர்ஷியல் தயாரிப்பாளர் ஆனால் அவர் ஆர்டிஸ்டிக் படம் எடுக்கிறார் என்றால் என் கூடத்தான் செய்வார். அந்தளவு என்னை நம்புகிறார். அவர் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன் என நினைக்கிறேன் அவரைத் திருப்திப்படுத்துவது கஷ்டம், இந்த டீசருக்கு கூட நிறையக் கட் கேட்டார். கடைசியாக அவர் பிடித்திருக்கிறது என்று சொன்னவுடன் திருப்தியாக இருந்தது. விக்ரம் சார், ஒரு நடிகனாக அவருக்கு நான் மிகப்பெரிய ரசிகன், அவருடன் இணைந்து வேலைப் பார்க்க வேண்டும் என்று எனக்கே ஆசை இருந்தது. சர்பட்டாவிற்கு பிறகு அவருடன் இணைகிறோம் என்ற போது, என்ன மாதிரி இருக்க வேண்டும் என்று நிறைய யோசித்தோம். இந்தக்கதை சொன்ன போது அந்தக் கதாபாத்திரமாகவே மாறி வந்தார்.

. ஜீவியை எனக்கு ரொம்பப் பிடிக்கும் இந்தப்படத்திற்கு அவர் இசையமைக்கிறார் என்ற போது, நடிக்கப் போய்விடுவாரே என்று பயமாக இருந்தது. ஆனால் அதைத்தாண்டி ஒவ்வொரு முறையும் அவர் இசையை என்னிடம் காட்டும் போது பிரமிப்பாக இருந்தது. அவர் கையில் தான் இந்தப்படம் மொத்தமும் உள்ளது. எடிட்டர் செல்வா பார்த்து, எனக்கே பயம் விஷுவல் பார்த்து என்ன சொல்வார் என நினைப்பேன், அவர் வேலை எப்போதும் சிறப்பாக இருக்கும் இந்தப்படத்திலும் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். ஸ்டண்ட் சாம் மிரட்டியிருக்கிறார். கிஷோர் விஷுவல்கள் கண்டிப்பாகப் பேசப்படும். இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது கண்டிப்பாக இந்தப்படம் உங்களுக்கு இந்தப்படம் பிடிக்கும் நன்றி.


நடிகர் சீயான் விக்ரம் பேசியதாவது…
வரலாற்றில் நடக்கும் நல்ல விசயங்களைக் கொண்டாட வேண்டும், கெட்ட விசயங்களை மறக்கக் கூடாது என்று என் தந்தை என்னிடம் சொல்லியிருந்தார். எல்லா நாட்டிலும் அவர்கள் வரலாற்றைக் கொண்டாடுகிறார்கள் பதிவு செய்துள்ளார்கள். இந்தியாவில் அது போல் நிறைய விசயங்கள் நடந்துள்ளது ஆனால் இப்போதைய தலைமுறைக்கு அது தெரியவில்லை. டைட்டானிக் காதல் கதை என்றாலும், அதன் பின்னணி, அந்த கதை நடக்கும் இடம் கப்பல், அதன் வரலாறு அது தான் முக்கியம், அது போல் நம் வரலாற்றில் நடந்த நிகழ்வை அந்த காலகட்டத்தை அவர்கள் வாழ்க்கையைச் சொல்கிற படம் இது,எத்தனை கஷ்டப்பட்டாலும் மறுநாள் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் நான் இது மாதிரி உணர்ந்ததே இல்லை, ரஞ்சித்திற்கு நன்றி. ரஞ்சித் சார்பட்டா படத்தை விட 100 மடங்கு உழைத்திருக்கிறார். நான் முன்னமே எந்தப்படத்திலும் இல்லாத மாதிரி இருக்க வேண்டும் என முடிவு பண்ணித்தான் இந்தப்படம் செய்தேன் ரஞ்சித் மிக அற்புதமான இயக்குநர் அதை இப்படத்தில் நிரூபித்திருக்கிறார். ஜீவி இந்தப்படத்தில் அட்டகாசமாக இசையமைத்திருக்கிறார். அவர் நடிக்க வந்தபோது வேண்டாம் நடிக்காதே, இயக்குநர்கள் இசையமைப்பாளர்கள் நடித்தால் எனக்கு வாய்ப்பு வராதே என நகைச்சுவையாகச் சொன்னேன், ஜீவி நடிப்பதால் இசை நன்றாக வருமா ? என நினைத்தேன் ஆனால் நடித்துக்கொண்டே எப்படி இப்படி பிரமாதப்படுத்துகிறார் என்று தெரியவில்லை, அவர் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் பெரிய படங்களில் அசத்துகிறார். ஞானவேல் ராஜாவுடன் முன்பே படம் செய்யப் பேசினோம், இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. இது எல்லோருக்கும் மிக முக்கியமான படமாக இந்திய சினிமாவில் ஒரு நல்ல படமாக இருக்கும் நன்றி.

இதனிடையே ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *