கிரிக்கெட் வீரர் தோனியை சந்தித்த ராம்சரண் ! தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் !
‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண், இந்திய கிரிக்கெட்டின் நாயகனான மகேந்திர சிங் தோனியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பல்வேறு வியப்பில் ஆழ்த்தும் பின்னூட்டங்களுடன் வைரலாகி வருகின்றன.
இந்திய சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான ராம்சரண் அண்மையில் தனியார் நிறுவனத்தின் விளம்பரப் படப்பிடிப்பிற்காக மும்பைக்கு சென்றிருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனியை சந்தித்தார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ராம் சரண் பகிர்ந்திருந்தார். அதனுடன் ‘இந்தியாவின் பெருமையை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி’ என்றும் பதிவிட்டிருந்தார்.
ராம்சரனின் ரசிகர்கள் அவர் நடிப்பில் தயாராகி வரும் ‘கேம் சேஞ்சர்’ எனும் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை எதிர்பார்த்து காத்திருந்த தருணத்தில்.. ராம் சரணும், எம் எஸ் தோனியும் சந்தித்து கொண்ட தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானதால், அதனை கொண்டாடி வருகின்றனர். அந்த புகைப்படத்தில் ராம் சரண் -இந்திய ராணுவ வீரர்கள் அணியும் பச்சை வண்ண சட்டையும், மகேந்திர சிங் தோனி -நீல வண்ண சட்டையும் அணிந்து தோன்றுவது ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இதனைக் கண்ட இருவரது ரசிகர்களும் ‘ஒரே சட்டகத்தில் இரண்டு கடவுள்கள்’ என்றும், ‘இந்திய சினிமாவின் பெருமையும், இந்திய கிரிக்கெட்டின் பெருமையும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்றும், ‘வெள்ளித்திரை நாயகனும், மைதான நாயகனும் ஒருவரை ஒருவர் சந்தித்திருக்கிறார்கள்’ என்றும், ‘இந்தியாவின் இரண்டு ராசியான ஜொலிக்கும் நட்சத்திரங்கள்’ பல்வேறு பின்னூட்டங்களை பதிவிட்டு தங்களது பேரன்பை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.