நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையாவின் ‘800’ திரைப்படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது!
அனைத்து வயதினரையும் திரையரங்குகளுக்கு வர வைப்பது ஒரு கலை. இதுபோன்ற திரைப்படங்கள் மதிப்புமிக்க பொழுதுபோக்கை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படியான ஒரு திரைப்படமாக ‘800’ உருவாகியுள்ளது. உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸின் ‘800′ திரைப்படம் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தணிக்கைக் குழு அதிகாரிகளிடமிருந்து ‘யு’ சான்றிதழுடன் பாராட்டையும் பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முத்தையா முரளிதரன் கடல்களையும் நாட்டின் எல்லைகளையும் தாண்டி கிரிக்கெட் பிரியர்களின் மனதை வென்றவர். ‘மன உறுதியும், ஒழுக்கமும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒருவரின் கனவுகளை எதுவும் சிதைக்க முடியாது’ என்பதை நிரூபித்து பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக அவர் உள்ளார்.
‘800’ திரைப்படம் அந்த அனுபவத்தை மீண்டும் திரையில் பார்வையாளர்களுக்குக் கொடுக்கும். எம்.எஸ்.ஸ்ரீபதி இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் ஷெஹான் கருணாதிலகாவுடன் இணைந்து ஸ்ரீபதி திரைக்கதை எழுதியுள்ளார். முரளிதரனாக மதுர் மிட்டல் நடிக்கிறார். இந்த படத்தில் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். விதேஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், பூர்த்தி பிரவின்-விபின் பிஆர் இருவரும் ஆடை வடிவமைப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.
மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் & விவேக் ரங்காச்சாரி தயாரித்து, ஸ்ரீதேவி மூவிஸ் வழங்கும் ‘800’ திரைப்படம் அக்டோபர் 6, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.