சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான் ஐமா ‘ திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு!
‘ஐமா ‘ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு, இயக்குநர் கேபிள் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த ‘ஐமா ‘திரைப்படத்தில் யூனஸ் ,எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன் , ஷாஜி, ஷீரா, மேகா மாலு மனோகரன், படத்தைத் தயாரித்துள்ள சண்முகம் ராமசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.அறிமுக இயக்குநர் ராகுல் ஆர் .கிருஷ்ணா இயக்கி உள்ளார்.ஒளிப்பதிவு விஷ்ணு கண்ணன், எடிட்டிங் அருண் ராகவ், இசை கே .ஆர். ராகுல்.பாடல்கள் அருண் மணியன். தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films )நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி
விழாவில் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி பேசும்போது,
‘நான் ஐடி துறையில் இருந்தவன்.எனக்கு சினிமாவின் மீது ஆர்வமுண்டு. நடிப்பின் மீது மோகம் இருந்தது. ஒரு நடிகராக நான் யாரிடமும் போய் வாய்ப்பு கேட்க முடியாது.அது எப்படி என்று எனக்குத் தெரியாது. எனவே நானே ஒரு படத்தைத் தயாரித்து அதில் நடிப்பதாக முடிவு எடுத்தேன். அப்படித்தான் இந்த ‘ஐமா’ படம் உருவானது. இதில் இயக்குநர் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்ததால் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்கள் பணிகளைச் சிறப்பாக செய்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.இந்தப் படத்தைத் தயாரித்ததன் மூலம் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். இன்று திரைப்படம் எடுப்பதை விட வெளியிடுவது சிரமமாக உள்ளது. படத்தைப் போட்டுக் காட்ட அழைத்தால்கூட யாரும் படம் பார்க்க வருவதில்லை.
இப்படிப்பட்ட இந்த நிலைமை சீரடைய வேண்டும் .ஊடகங்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது,
”இந்த ஐமா படத்தில் பத்து பாடல்கள் என்ற போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது .அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதைப் படத்தில் சரிவர வைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான்.தெருவில் கழைக் கூத்தாடி செய்யும் ரிஸ்கைக் கூட சினிமாவில் பெரிய கதாநாயகர்கள் கூட செய்வதில்லை.அதற்கு அவசியமும் இல்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு வசதிகள் வந்து விட்டன. மெதுவாக நடந்து வருவதைக் கூட ஓடி வருவது போல் எடுக்க முடியும்.
தமிழ்த் திரைப்படங்கள் பெரிய பெரிய கதாநாயகன் நடிக்கும் படங்கள் கூட செட் போட்டு வெளி மாநிலங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன.அந்தந்த மாநிலத்தில் உள்ள தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். நம் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்கு அதில் பங்கேற்க வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. எங்கள் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களையும் கொஞ்சம் கவனியுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம்.இது பற்றி இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தனது ஆதங்கத்தை வெளியிட்ட போது அதைத் திரித்து திசை திருப்பி விட்டார்கள். இதைத் தவறாகச் சிலர் புரிந்து கொள்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.