இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையாவின் 800 பட பத்திரிகையாளர் சந்திப்பு!

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையாவின் 800 பட பத்திரிகையாளர் சந்திப்பு!

 

 

இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘800’ என்ற படம் தயாராகி வருகிறது. மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ளார். இதில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் மதுர் மிட்டல் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். புக்கர் பரிசை வென்ற ஷெஹான் கருணாதிலக்க இப்படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியுள்ளார். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (08.09.2023) சென்னையில் நடந்தது.

 

 

நடிகை மஹிமா நம்பியார், “என்னுடைய கரியரில் மிகச்சிறந்த படமாக இது இருக்கும் என நம்புகிறேன். ஹீரோவுடைய பயோபிக் எனும்போது எனக்கு குறைந்த காட்சிகளே இருக்கும். இருந்தாலும், நான் நடித்த சில காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இது முத்தையா முரளிதரனின் கதை மட்டுமல்ல. விளையாட்டு, இலங்கையின் கதையும் இது. டிரெய்லர் பார்த்த பிறகு அவரின் கதையை மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருப்பதாகப் பலரும் என்னிடம் கூறியுள்ளனர். படத்தை நானும் இன்னும் முழுதாக பார்க்கவில்லை. கிரிக்கெட்டராக முத்தையாவை தெரிந்த பலருக்கும் அதையும் தாண்டி அவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள இந்தப் படம் நிச்சயம் உதவும். மதுர் இந்தப் படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். இயக்குநர் ஸ்ரீபதி, தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், படக்குழுவுக்கு நன்றி” என்றார்.

 

நடிகர் மதுர் மிட்டல் பேசியதாவது, “என்னைப் போன்ற வளர்ந்து வரும் நடிகருக்கு முத்தையா சாரின் கதாபாத்திரம் நடிக்கக் கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயம். இயக்குநர் ஸ்ரீபதி, மஹிமா, ஆர்.டி. சார் அனைவருக்கும் நன்றி. படத்தில் பல முக்கியமான தருணங்களை நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள். படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.

கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் பேசியதாவது, “இயக்குநர் வெங்கட்பிரபு, இயக்குநர் ஸ்ரீபதி என நாங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மன்றம் அமைத்தோம். என் கஷ்டத்தின் போது உதவி செய்த என் நாட்டு மக்களுக்கு திரும்ப நல்லது செய்ய வேண்டும் என இதை ஆரம்பித்தோம். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு, ஆயிரம் மாணவர்களைப் படிக்க வைப்பது என பல விஷயங்களை செய்து வருகிறோம். நாங்கள் மலையகத் தமிழர்கள் வம்சாவளியில் வந்தோம். எங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு பல தடைகள் வந்தது. படத்திற்கும் அப்படியான தடைகள் இருந்தது. ஆனால், இலங்கையில் எடுத்த 80 நாட்களும் படத்தைப் பற்றிப் புரிந்து கொண்டு அரசு ஒத்துழைப்புக் கொடுத்தது. எல்லாம் உண்மை சம்பவங்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஸ்கிரிப்டில் அப்படியே ஸ்ரீபதி கொண்டு வந்துள்ளார். இன்னும் நான் படம் பார்க்கவில்லை. ’நீங்கள் காப்பி பண்ண வேண்டாம், எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல் நடியுங்கள்’ என்று ஹீரோ மதுரிடம் சொன்னேன். கிரிக்கெட் படமாக இல்லாமல் ‘800’ நான் சாதனை படைத்ததற்கு பின்னால் இருந்தது என்ன, என்ன பிரச்சினைகளோடு விளையாடினேன், என்னால் நாடு எந்த நிலைக்கு வந்தது என்பது குறித்து இந்தப் படத்தில் பேசியுள்ளோம். படம் உங்களுக்கும் பிடிக்கும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *