பொதுநலனை மையமாகக் கொண்டு தங்கர் பச்சான் உருவாக்கிய “கருமேகங்கள் கலைகின்றன” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!
இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.இந்த படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குனர்கள் கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், யோகிபாபு, அதிதி பாலன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு, லெனின் படத்தொகுப்பு, மைக்கேல் கலை வடிவமைப்பு செய்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். செப்டம்பர் 1ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது,
இந்த நிகழ்வில்
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பேசியதாவது,
“நான் என்னை இன்னும் ஒரு நடிகராக பார்க்கவில்லை. இந்த கதை எனக்கு பிடித்திருந்தது. அது மட்டுமல்ல பாரதிராஜாவின் மகனாக நடிக்க வேண்டும் என்று சொன்னதுமே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். எடிட்டர் லெனினின் வெட்டு, பாரதிராஜா என் மீது விட்ட குத்து என இந்த படத்திலும் வெட்டு, குத்து இருக்கிறது.. படத்தில் பாரதிராஜா என்னை ஒரு காட்சியில் அடிக்க வேண்டும்.. பலமுறை அடிப்பதற்கு தயங்கி நின்றார். அப்போது அவரிடம் எப்போதாவது நான் உங்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி இருப்பதாக நினைத்துக்கொண்டு என்னை அடியுங்கள் என்று கூறினேன். நிஜமாகவே அடித்துவிட்டார்.. அடுத்து தங்கர் பச்சான் என்ன கதை சொன்னாலும் நான் கேட்பேன்.. அவர் படத்தில் நடிப்பேன்” என்று கூறினார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசியதாவது, “தங்கர் பச்சான் ஒரு நல்ல எழுத்தாளர். 25 வருடங்களுக்கு முன் தங்கர் எழுதிய குருஞ்நாவலான “கருமேகங்கள் ஏன் கலைகின்றன” புத்தகத்தை நான் தான் வெளியிட்டேன். தங்கர் பச்சான் இந்த கதையை சொன்ன விதம், இதில் என்னை வடிவமைத்த விதம் அற்புதமாக இருந்தது. இது ஒரு அரிதான சந்தர்ப்பம். நான் பெரும்பாலும் பெண்களின் கண்களைத் தான் ரசித்து அவர்களுக்கு குளோசப் காட்சிகள் வைப்பேன். அதை தாண்டி தான் ரசித்தது என்றால் கவுதம் மேனனின் கண்களைத்தான். அவரது கண்கள் மட்டும் தான் பேசும்.. ஒரு காட்சியில் அதிதியின் காலில் விழ வேண்டும். நடிப்பு என வந்துவிட்டால் எதையும் பார்க்க கூடாது.
எந்த விழாவிலும் இத்தனை வருடங்களில் எடிட்டர் லெனினை பார்த்ததில்லை.. இன்று பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.. இது குழந்தை சாரலின் நடிப்பு மிக அற்புதம். அவளது கண்களே பேசும். யோகிபாபு இந்த படத்தை ஆக்கிரமித்து விட்டார். அவர் ஏற்றுள்ள அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துவிட்டார். திரைப்பட வரலாற்றில் சில படங்கள் தான் வருடக்கணக்காக பேசப்பட்டு வரும் .நாகரிகமாக எடுக்கப்பட்ட சினிமா. குடும்ப உறவுகளுடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று கூறினார்.
இயக்குநர் தங்கர்பச்சான் பேசியதாவது,
ம்“இது துணிச்சல் மிக்க காரியம். என் எதிரில் ஆயுதங்களுடன் பலர் நிற்கிறார்கள்.. நான் மட்டும் நிராயுத பாணியாக நிற்கிறேன். ஒவ்வொரு படத்திலும் இதை செய்யவேண்டி இருக்கிறது. படத்தை எடுக்க, விற்க, மக்களை படம் பார்க்க வரவழைக்க என மிகுந்த சிரமப்பட வேண்டி இருக்கிறது. ஒரு படத்தில் கமர்சியல் நடிகை நடிக்கிறார் என போடும் செய்திக்கான முக்கியத்துவத்தை கூட ஒரு நல்ல படத்திற்கு இங்கே ஊடகங்கள் கொடுப்பது இல்லை. மக்களிடம் நல்ல சினிமாவை கொண்டு போவதற்கு பல தடைகள் இங்கே இருக்கின்றன.
எல்லா நடிகர்களும் இரண்டு வருடங்களுக்கு ஒரு நல்ல படத்திலாவது நடிக்க வேண்டும். 500 கோடி வசூல் என்பதில் என்ன பெருமை ? நல்ல படங்கள் நிறைய வந்தால் சமூகம் மேலே வரும். எங்கே கலப்படம் எங்கே.. நல்ல சப்பாடு.. நல்ல பெட்ரோல் என்பதை மட்டும் சரியாக கண்டுபிடித்து அதை தேடி செல்கிறீர்களே.. அதேபோல நல்ல சினிமா எது என்பது உங்களுக்கு தெரியாதா ? பெரிய நடிகர் படம் என்கிற பெயருக்காகவே படம் பார்க்க தயாராக இருக்கிறார்கள். வெட்டு, குத்து காட்சிகளை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்துகிறார்கள். அதுபோன்ற படங்களின் தயாரிப்பாளர்களுக்கு, அதில் நடிக்கும் நடிகர்களுக்கு பொறுப்பு இருக்காதா?
நல்ல படம் பாருங்கள் என்று கெஞ்சிக்கிட்டே இருக்கணுமா ?
இயற்கை விவசாயம் செய்வதை போல நல்ல படங்களை கொடுத்து வருகிறேன். ஆனால் எங்களுக்கு தண்டனை தான் கொடுத்து வருகிறீர்கள்.. எம்ஜிஆர் படம் பார்த்து வளர்ந்தவன் நான். அப்போதைய கமர்சியல் படம் என்றாலும் அதில் மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற விஷயங்களுக்கு எதிராக கருத்துக்கள் சொல்லப்பட்டன. ஆனால் இன்று மது விற்பனை தொகையை அறிவிப்பதை போலத்தான் சினிமா பட வசூல் விளம்பரமும் இருக்கிறது. இரண்டுக்கும் வித்தியாசம் என்ன இருக்கிறது ?
ஜி வி பிரகாஷ் அற்புதமான கலைஞன்.. யோகி பாபு இந்த மண்ணின் மைந்தன்.. சிறந்த கலைஞன். ஆனால் அவரை கிச்சுகிச்சு மூட்டத்தான் பயன்படுத்தி வருகிறோம். அதித்தி பாலன் நடித்த அருவி படத்தை தாமதமாகத்தான் பார்த்தேன்.. அதை பார்த்தபின்பு இவ்வளவு தாமதமாக பார்க்கிறோமே என அவமானமாக இருந்தது.
இப்படத்தில் நடித்துள்ள விபின் லால் இந்திய சினிமாவில் ஒரு பெரிய இடத்தை இவர் பிடிப்பார். இவர் தேசிய நாடகப்பள்ளி (NSD) மாணவர்.. வரும் காலத்தில் பஹத் பாசில் மாதிரி வருவார். இன்றைய இளம் இயக்குநர்கள், அடுத்து வரப்போகும் இயக்குநர்கள் இவரை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது அவர்களது படைப்புகளுக்கு பலம் சேர்ப்பதாக இருக்கும்.
‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தை திரும்பத் திரும்ப பார்க்கும் போதும் ஒவ்வொரு முறையும் புதிதாக ஒன்று தோன்றும். மனதுக்கு மிக நிறைவான படைப்பாக கொடுத்துள்ளேன். உடலை, மனதை கெடுக்காத படைப்பு இது. உலகத் தமிழர்கள் இந்த படத்தை பார்த்தால் அடுத்த விமானத்தை பிடித்து இங்கே கிளம்பி வந்து விடுவார்கள்.. அப்படி ஒரு உணர்வுபூர்வமான படம்” என்று கூறினார்