ரசிகர்களிடையே மாபெரும் வரவெற்பை பெற்று வரும் தோனி எண்டர்டெய்ன்மென்ட்டின் ‘எல் ஜி எம்’ பட டீசர்
தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எல் ஜி எம்’ படத்தின் டீசரை, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான எம். எஸ். தோனி, அவருடைய முகநூலில் வெளியிட்டார். வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இப்படத்தின் டீசருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.
தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பு ‘எல் ஜி எம்’. ( லெட்ஸ் கெட் மேரீட்). இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதற்கு பேராதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில், ” நகைச்சுவையையும், குடும்பத்தையும் ஒன்றாக இணைத்து குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக ‘எல் ஜி எம்’ தயாராகி இருக்கிறது. இந்தத் திரைப்படம், உங்கள் ஆத்மாவை தொட்டு சிரிக்க வைக்கும் இதயபூர்வமான பயணம். இப்படத்தின் டீசரை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இந்த டீசருக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி” என்றார்.
‘எல் ஜி எம்’ படத்தின் டீசருக்கு கிடைத்த உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தின் வெளியிட்டு தேதியையும், படத்தின் வெளியீட்டு தேதியையும் தயாரிப்பாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள்.
‘எல் ஜி எம்’ என்பது சாக்ஷி தோனியின் தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், இசையமைப்பாளரான ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவான ஒரு பீல் குட் எண்டர்டெய்னர்.
இந்த திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பிரியன்ஷூ சோப்ராவும், தயாரிப்பாளராக விகாஸ் ஹசிஜாவும் பணியாற்றியிருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது.