பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியின் அறிமுக விழாவில் கலந்து கொண்டார்

பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியின் அறிமுக விழாவில் கலந்து கொண்டார்

பிரபல நடன இயக்குநர் ஷெரீஃப் மற்றும் வின்சென்ட் அடைக்கலராஜ் இணைந்து வழங்கும் ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியின் அறிமுக விழாவில் பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், நடிகர் ஜோ மல்லூரி, நடிகர் அஷ்வின் உள்ளிட்டோர் பங்கேற்பு

‘சூது கவ்வும்’ தொடங்கி பல்வேறு வெற்றி படங்களில் நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராக உள்ள ஷெரீஃப், எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடங்கியுள்ளார்.

தனது ஜூபாப் ப்ரோ ஸ்டூடியோ (JOOPOP Pro Studio) மூலமாக வின்சென்ட் அடைக்கலராஜின் முதலீட்டோடு ஷெரீஃப் உருவாக்கியுள்ள ஜூபாப் (JOOPOP) நடன செயலியை உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் துவக்கி வைத்து பாராட்டிய நிலையில் அதன் அறிமுக விழா மற்றும் செயல்முறை விளக்கம் சென்னையில் நடைபெற்றது.

பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், நடிகர் ஜோ மல்லூரி, நடிகர் அஷ்வின் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். செயலியின் அறிமுகத்திற்கு பின்னர் பேசிய பி சி ஸ்ரீராம், இந்த முன்னெடுப்பு மாபெரும் வெற்றி பெறும் என்று கூறினார். முதலீட்டாளர் வின்சென்ட் அடைக்கலராஜ் தனது நெருங்கிய நண்பர் என்றும் அவரது அழைப்பின் பேரில் இந்நிகழ்ச்சிக்கு தான் வந்ததாகவும் கூறிய பி சி ஸ்ரீராம், இங்கு வந்து நடன இயக்குநர் ஷெரீஃப்பை சந்தித்து ஜூபாப் செயலி குறித்து அறிந்து கொண்ட பின்னர் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறினார். “இந்த முயற்சி கட்டாயம் வெற்றி பெறும். ஷெரீஃப் மற்றும் வின்சென்ட் அடைக்கலராஜுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அஷ்வின், “இது ஒரு புதுமையான முயற்சி. ஜூபாப் செயலி மூலம் எளிய நடன பயிற்சிகள் வாயிலாக உடல் நலனை உறுதி செய்ய முடியும். கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் இந்த செயலியை வடிவமைத்த ஷெரீஃப், வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் அவர்களது குழுவினருக்கு எனது வாழ்த்துகள்,” என்று கூறினார்.

வின்சென்ட் அடைக்கலராஜ் பேசுகையில், இப்படி ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என்று ஷெரீஃப் தன்னிடம் கூறிய போது மிகவும் உற்சாகம் அடைந்ததாகவும், அதற்கான பணிகள் உடனே தொடங்கப்பட்டதாகவும் கூறினார். “பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் பரிசோதனை முயற்சிகளுக்கு பின்னர் ஜூபாப் செயலி முழுமையாக உருவாகி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஷெரீஃப் மற்றும் குழுவினரின் கடின உழைப்புக்கு எனது வாழ்த்துகள். இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான செயலி இது என்பதால் ஜூபாப் மாபெரும் வெற்றி பெறும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஜூபாப் செயலி குறித்து பேசிய ஷெரீஃப், “உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு எப்போதுமே முன்னுரிமை அளிப்பார். உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விரல் நுனியில் அறிந்து வைத்திருப்பார். அப்படிப்பட்ட கமல் சாரே ஜூபாப் செயலியை பாராட்டியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “உடற்பயிற்சியின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததே. ஆனால், இன்றைய உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவரவர் பணிகளில் பிசியாக இருப்பதால் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. இதை கருத்தில் கொண்டு, ஒரு நாளைக்கு வெறும் ஐந்து முதல் பத்து நிமிடங்களிலேயே எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் நலத்தை பேணுவதற்காக இந்த செயலியை உருவாக்கி உள்ளோம்,” என்று கூறினார்.

“பள்ளி குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நடனத்தை தொழிலாக மேற்கொள்ள விரும்புவோருக்கு என மூன்று விதமாக இந்த செயலி பிரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களுக்கு தேவையான பகுதியை தேர்வு செய்து கொண்டு அவர்களுக்கு உரிய நடன பயிற்சிகளை மிகவும் எளிதாக மேற்கொள்ளலாம்,” என்றார் அவர்.

பள்ளிகள் இந்த செயலியை பயன்படுத்துவது குறித்து விளக்கிய ஷெரீஃப், “சுமார் 450 பள்ளிகளில் இந்த செயலியை ஏற்கனவே வெற்றிகரமாக பரிசோதித்துள்ளோம். அந்த பள்ளிகள் அனைத்தும் ஜூபாப் நடன செயலியை பெரிதும் வரவேற்றுள்ளன. ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நடன பயிற்சிகளை வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னர் ஐந்து முதல் பத்து நிமிடம் வரை மேற்கொண்டால் மாணவர்களுக்கு உடற்பயிற்சி கிடைப்பதோடு அவர்கள் உள்ளங்களும் உற்சாகமடையும்,” என்று கூறினார்.

ஜுபாப் நடன-உடற்பயிற்சி செயலி குறித்து மேலும் விவரங்களுக்கு திரைப்பட நடன இயக்குநர் ஷெரீஃப்பை 9843261718 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *