பிக் பாஸ் வின்னர் அசீம் மீது யூடியூப்பர் ஜோ மைக்கேல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

பிக் பாஸ் வின்னர் அசீம் மீது யூடியூப்பர் ஜோ மைக்கேல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். ‘பிக்பாஸ் சீசன் 6’- ல் போட்டியாளராக பங்கேற்ற அசீம் முதலாவது இடத்தைப் பிடித்து பட்டத்தைத் தட்டிச்சென்றார்.அசீமுக்கு பட்டம் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக பல தரப்பினர் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்த நிலையில் ‘பிக் பாஸ் சீசன் 6’–ல் அசீமுக்கு பட்டம் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி யூடியூப்பர் ஜோ மைக்கேல், 24 கேள்விகள் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு அனுப்பி உள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.

 

இதன் தொடர்ச்சியாக அசீம் தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் தனக்கு மிரட்டல் விடுப்பதுடன் தன் மீது அவதூறு பரப்புவதாக யூடியூப்பர் ஜோ மைக்கேல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் இன்று அளித்துள்ளார்.இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” வழக்கமாக அனைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பொதுமக்கள் ஃபோன் கால் மூலமாக போட்டியாளர்களுக்கு வாக்கு செலுத்தி வந்தனர். ஆனால், ‘பிக் பாஸ் சீசன் 6’-ல் ஹாட்ஸ்டார் மூலமாக மட்டுமே வாக்கு செலுத்த வேண்டும் என்ற முறை கொண்டு வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. கமல்ஹாசன் பலமுறை அசீமை எச்சரித்து நிலையில் அவர் எப்படி முதலாவதாக பட்டம் பெற்றார் என்ற கேள்வி எழுகிறது.

 

எனவே, இந்த முறைகேடு தொடர்பாக இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளையில் உள்ள தகவல் அறியும் சட்டத்தில் 24 கேள்விகளுக்கு தகவல் கேட்டு மனு அனுப்பினேன். அதில் அசீம் எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளார்? ரெட்கார்டு கொடுத்த போதும் எலிமினேட் செய்யாமல் அசீம் போட்டியில் தொடர்ந்தது எப்படி? என பல்வேறு கேள்விகள் கேட்டு அனுப்பியுள்ளேன்.

 

பிக் பாஸ் பட்டம் பெற்றது தொடர்பாக நான் அனுப்பிய மனுவை உடனடியாக வாபஸ் பெறக்கோரி அசீம் மற்றும் அவரது ஆதரவாளர்களான தேசிங்க சோழன், சிங்காரவேலன் மற்றும் இமான் ஆகியோர் செல்போன் மூலமாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். அத்துடன் என்னைப் பற்றி சமூக வலைதளத்தில் அசீம் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்.

 

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பணத்தை கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு உதவி செய்யவுள்ளதாக அசீம் தெரிவித்தார், ஆனால் இதுவரை எந்த உதவியும் அவர் செய்யவில்லை.

 

எவ்வித முன்பகை காரணமாக அசீம் மீது வழக்கு தொடரவில்லை. பொது நலன் கருதி மட்டுமே இது போன்ற புகார்களைப் பதிவு செய்துள்ளேன். இதுபோல் தான் பப்ஜி மதன், லோன் ஆப் மற்றும் மீராமிதுன் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தேன். எனவே, என்னை மிரட்டிய அசீம் ,அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் அளித்துள்ளேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *