தனுஷ் நடிக்கும் ’கேப்டன் மில்லர்’ திரைப்பத்தின் படப்பிடிப்பு அனுமதியின்றி நடத்தப்பட்டு வருவதாக சர்ச்சை

தனுஷ் நடிக்கும் ’கேப்டன் மில்லர்’ திரைப்பத்தின் படப்பிடிப்பு அனுமதியின்றி நடத்தப்பட்டு வருவதாக சர்ச்சை

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் தயாராகி வருகிறது. சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் தனுஷ் நடிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருகே உள்ள மத்தளம்பாறை கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருகே வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அனுமதியின்றி நடத்தப்பட்டு வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்தப் படத்துக்காக மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் பிரம்மாண்டமாக கோயில் செட் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்குள்ள செங்குளம் பகுதியில் தண்ணீர் செல்லும் ஓடையின் மீது மரத்தால் பாலம் அமைக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் கடந்த ஜனவரி இறுதியில் இருந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. செங்குளம் கால்வாவாயின் அகலத்தை மண்ணால் மூடி சுருக்கியதுடன், அதன் மீது மரப்பாலம் அமைத்து இருப்பதற்கு விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக கீழப்பாவூர் ஒன்றிய கவுன்சிலரான உதயசூரியன் ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்தார். மத்தளம்பாறை உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் உள்ள 16 குளங்களுக்கு நீர் செல்லும் பாதையை மறித்து மரப்பாலம் அமைக்கப்பட்டு இருப்பதுடன், வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுக்கப்பட்டதையும் அவர் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக அவர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, வனத்துறை அதிகாரிகள் தரப்பில் அனுமதி கொடுக்கப்படவில்லை எனத் தெரிவித்து விட்டனர். அதே போல, வருவாய்த்துறையினரும் தங்களிடம் யாரும் அனுமதி கேட்கவும் இல்லை. தாங்களும் யாருக்கும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுக்கவும் இல்லை எனத் தெரிவித்து விட்டதக உதய சூரியன் தெரிவித்தார். நீர்நிலைகளைக் கண்காணிக்கும் பொதுப்பணித்துறையினரும் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை என கைவிரித்து விட்டதால், இது குறித்து கவுன்சிலர் உதயசூரியன், முதல்வரின் தனிப்பிரிவு உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பியிருந்தார்.

கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்கவில்லை என அனைத்து துறையினரும் கைவிரித்து விட்ட நிலையிலும் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதனிடையே, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து காட்சிப் படுத்தியுள்ளனர். மிகுந்த சத்தத்துடன், கரும்புகை சூழ வெடிகுண்டு வெடித்ததால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இதனிடையே, படப்பிடிப்பு நடந்தபோது குண்டுகள் வெடித்த காட்சியை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டனர். அது சமூக வலைதளங்களில் வைரலானதுடன், விவசாயிகள் மற்றும் வன விலங்குகளைப் பாதிக்கும் வகையில் அனுமதியின்றி நடக்கும் படப்பிடிப்பை தடை செய்ய வெண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இந்த நிலையில், கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். அதன்படி மத்தளம்பாறை பகுதியில் தென்காசி தாசில்தார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து ஆட்சியரிடம் அறிக்கை அளித்தனர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் அனுமதியின்றி நடந்துவரும் திரைப்பட படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இது குறித்து கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்புக் குழுவினர் கூறுகையில், “திரைப்பட ஷுட்டிங் நடத்துவதற்காக செட் அமைத்திருக்கும் இடம் தனியாருக்குச் சொந்தமானது. அதனால் ஷுட்டிங் நடப்பது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு படப்பிடிப்பு நடத்தி வந்தோம். ஆனால், வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடத்துவதாகச் சிலர் தவறான தகவலைப் பரப்பியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. முறைப்படி அனைத்து துறைகளிடமும் அனுமதி பெற்றி மீண்டும் படப்பிடிப்பைத் தொடருவோம்” என்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *