திரைப்படங்களுக்கு ‘யூ/ஏ 7+, யூ/ஏ 13+, யூ/ஏ 16+ என்பது போன்று சான்றிதழை வழங்கபட உள்ளது
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்ட முன்வரைவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக ஒரு திரைப்படம் தியேட்டர் மூலமாக மக்களை சென்றடையும் முன் அதற்கு தணிக்கை குழு ‘யு, யு/ஏ அல்லது ஏ’ என்பது போன்று சான்றிதழை வழங்கும். இதில் யு சான்றிதழ் பெற்ற படங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பார்க்கலாம். அதேபோல் யு/ஏ சான்றிதழ் படங்களை 12 வயதுக்கு குறைவானவர்கள் பெற்றோர்களின் கண்காணிப்புடன் தான் பார்க்க முடியும். இறுதியாக ஏ சான்றிதழ் பெற்ற படங்களை 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுவர்.
தற்போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட ஒளிப்பதிவு முன்வரைவு சட்டத்தின் மூலம் தணிக்கை குழு வழங்கும் மேற்கண்ட சான்றிதழ்களை வயது வாரியாக பிரித்து சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. அதாவது ‘யூ/ஏ 7+, யூ/ஏ 13+, யூ/ஏ 16+ என வழங்க இந்த புதிய சட்டம் வழிவகை செய்கிறது.
மேலும், இணையத்தில் திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் நபர்களுக்கு 3 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கவும், ரூ.3 லட்சம் முதல் தயாரிப்பு செலவில் 5 சதவீத தொகை வரை அபராதம் விதிக்கவும் இந்த திருத்தப்பட்ட ஒளிப்பதிவு முன்வரைவு சட்டம் வழிவகை செய்கிறது.
மேலும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமான CBFC வழங்கும் சான்றிதழ்களின் செல்லுபடி காலம் மற்றும் திரைப்படங்களுக்கான தணிக்கையில் மத்திய அரசு தலையிட்டு மறுபரிசீலனை செய்யும் அதிகாரத்தை நீக்குதல் போன்ற பல்வேறு திருத்தங்களும் இதில் கொண்டு வரப்பட்டு உள்ளன. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்ட முன்வரைவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன