இந்தியன் 2-வில் விவேக் இருப்பது உறுதி!
திரையுலகில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய நடிகர் விவேக்கிற்கு, கமல்ஹாசன் உடன் பணியாற்றும் வாய்ப்பு மட்டும் கிடைக்காமலே இருந்து வந்தது. கமலுடன் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என விவேக் பல மேடைகளிலும் பேட்டிகளிலும் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். அவரின் ஆசை இந்தியன் 2 படம் மூலம் நிறைவேறியது. இந்த படத்தில் நடிக்க கமிட் ஆகி படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு நடித்தார் விவேக். ஆனால் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தால் அப்படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து அப்படத்தின் ஷூட்டிங் 2022-ம் ஆண்டு தான் மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்குள் நடிகர் விவேக் மரணமடைந்துவிட்டார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மரணமடைந்துவிட்டதால், இந்தியன் 2 படத்தில் அவர் நடித்த காட்சிகள் இடம்பெறாது என கூறப்பட்டது. அவருக்கு பதில் வேறு நடிகரை நடிக்க வைக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தன. இதனால் கமல் படத்தில் இடம்பெற வேண்டும் என்கிற நடிகர் விவேக்கின் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்கிற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது விவேக்கின் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அது என்னவென்றால், இந்தியன் 2 படத்தில் நடிகர் விவேக் நடித்த காட்சிகளை படத்தில் இருந்து தூக்கும் முடிவை கைவிட்டு உள்ளதாகவும், அவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் நடிகர் விவேக்கின் கடைசி படமாக இந்தியன் 2 மாறி உள்ளது. இருப்பினும் இப்படத்தில் விவேக்கிற்கு யார் டப்பிங் பேச உள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.