அனித்ரா நாயருடன் இணையும் அமலா பாலின் சகோதரர் அபிஜித் பால்
திருநங்கைகளின் காதலை சொல்லும் ‘தாதா 87’, பெண்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை மையமாக கொண்ட ‘பவுடர்’, பள்ளி பருவத்திலிருந்து மாணவர்களுக்கு சட்டத்தை கற்பிக்க வேண்டும் என்கிற கருத்தோடு வெள்ளி விழா நாயகன் மோகன் நடிப்பில் உருவாகும் ‘ஹரா’ போன்ற படங்களின் மூலம் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வரும் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, தசை சிதைவு நோயின் மருந்தை இந்தியா தயாரிக்க வேண்டும் என்கிற கருத்தை முன்னிறுத்தி புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
இந்த படத்தை வி ஆர் இன்டர்நேஷனல் மூவிஸ் ரவி ராயன் தயாரிக்கிறார்.
சமீபத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த குழந்தைக்கு தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத மனிதர் ஒருவர் ரூ 11 கோடி நன்கொடையாக கொடுத்துள்ளார் என்பதை நாம் அனைவரும் செய்தியில் படித்திருப்போம், பார்த்திருப்போம்.
இந்த தசை சிதைவு நோயயை குணப்படுத்தும் ஊசியின் விலை ரூ 17.5 கோடியாகும்.
தமிழகத்திலும் இதே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு சமீபத்தில் பலர் உதவி செய்தனர்.
தசை சிதைவுநோய் பற்றியும் அதன் சிகிச்சைக்கு ஏன் இவ்வளவு செலவு ஆகிறது என்பதையும் மையமாக வைத்து ‘தாதா 87’, ‘பவுடர்’ மற்றும் ‘ஹரா’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்று இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி கூறியுள்ளார்.
தசை பிடிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தாய் படும் கஷ்டங்களை குறித்து இந்த படம் பேசும் என்று இயக்குநர் மேலும் தெரிவித்தார்.
“இந்தியா போன்ற அதிக ஜனத்தொகை கொண்ட நாட்டில் இதற்கான ஊசி கிடைப்பதில்லை. இதை அதிக விலை கொடுத்து அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். சூரியன் மற்றும் சந்திரனுக்கு செல்வது எந்த அளவிற்கு முக்கியமோ அதே போல இந்தியா வல்லரசு நாடாக முன்னேற இது போன்ற உயிர் காக்கும் மருந்துகளை குறைந்த செலவில் உள்நாட்டிலியே தயாரிக்க வேண்டியதும் அவசியம் என்பது தான் இந்த படத்தின் மையக்கரு,” என்று விஜய் ஸ்ரீ கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாக அனித்ரா நாயர் இப்படத்தில் நடிக்கிறார். அவரது மகளாக பேபி வேதாஷ்யா நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் அமலா பாலின் சகோதரர் அபிஜித் பால், அர்ஜுன் ராஜ், அனித்ரா தந்தையாக ரயில் ரவி, விஜய் டிவி தீபா, சில்மிஷம் சிவா, வில்லனாக ரவி ராயன், பவுடர் ராமராஜன், கே.ஆர்.அர்ஜூன், பேங்க் ராஜேஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
படத்தின் கருத்தை அழுத்தமாகவும் அனைவரையும் சென்று சேரும் வகையிலும் சொல்வதற்கு வழக்கறிஞராக ஒரு முன்னணி நடிகர் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.
ரஷாந்த் ஆர்வின் இசையமைக்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் மேற்கொள்கிறார்.
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில், வி ஆர் இன்டர்நேஷனல் மூவிஸ் ரவி ராயன் தயாரிப்பில் தசை சிதைவு நோயை மையமாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகவுள்ளது.