ஓடிடி ஒப்பந்தங்கள் அடிப்படையில் திரைப்படங்களுக்கு நிதி!
ஓடிடி தளங்கள் அல்லது இசை நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் செய்யும் பொழுது அதற்கான தொகையை தவணை முறையில் வழங்குவது திரைத்துறையில் பின்பற்றப்பட்டு வரும் வழக்கம் ஆகும். திரைப்பட ஒளிபரப்பு உரிமையை வாங்கும் தொலைக்காட்சி நிறுவனங்களும் இப்போது இந்த முறையை பின்பற்ற ஆரம்பித்துவிட்டன. இதனால் திரைப்பட, வலைத்தொடர் (web series) மற்றும் தொலைக்காட்சி தொடர் உள்ளிட்டவற்றின் தயாரிப்பாளர்களின் அடுத்தடுத்த படங்கள் உருவாகி வெளிவருவதற்கு நிதி ரீதியாக தாமதமாகும் சூழல் ஏற்படுகிறது.
இந்த சிக்கலை தயாரிப்பாளர்கள் எதிர்கொண்டு தொடர்ந்து அவர்கள் தயாரிப்பில் ஈடுபட உதவும் வகையிலும், முறைப்படுத்தப்பட்ட கடன் வசதி போதிய அளவில் திரை உலகில் இல்லை என்பதை கருத்தில் கொண்டும் ProducerBazaar.com (முன்னதாக OracleMovies) BetterInvest.club என்கிற நிதி நிறுவனத்துடன் கை கோர்த்து ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
இந்த முயற்சியின் மூலம் ஓடிடி தளம், இசை நிறுவனம் அல்லது தொலைக்காட்சி சேனலுடன் ஒப்பந்தம் செய்துள்ள தயாரிப்பாளருக்கு 7 முதல் 10 நாட்களுக்குள் நிதி வழங்கப்படும். இந்த நிதியை பெறுவதற்கு எந்த ஒரு பிணையும் தேவை இல்லை. மேற்கண்டவற்றுடன் தயாரிப்பு நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தம் மட்டுமே போதுமானது.
தற்போது வரை 4 படங்களுக்கு இவ்வாறு நிதி உதவி செய்யப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பிற மொழி தயாரிப்பாளர்களுக்கும் நிதி வழங்கும் வசதியை ProducerBazaar.com மற்றும் BetterInvest.club துவங்கியுள்ளனர்.
இந்த முயற்சி குறித்து, BetterInvest.club நிறுவனர் பிரதீப் சோமு கூறுகையில், “மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கு முறைப்படுத்தப்பட்ட நிதியுதவி கிடைப்பதில்லை. பெட்டர்இன்வெஸ்டில், ஓடிடிகள், ஆடியோ லேபிள்கள் மற்றும் சேட்டிலைட் நெட்வொர்க்குகள் உடன் தயாரிப்பாளர்கள் செய்து கொள்ளும் ஒப்பந்தங்கள் அடிப்படையில் தயாரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் நிதி வழங்குகிறோம். திரைப்படத் துறைக்கு நிதியளிக்கப்பட்டு வந்த விதத்தை இது மாற்றி அமைப்பதோடு தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வணிகத்தின் மீது சிறந்த கட்டுப்பாட்டை வைத்திருக்க உதவுகிறது,” என்றார்.
ProducerBazaar.com நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜி கே திருநாவுக்கரசு கூறுகையில், “திரைப்படங்கள் முடிவடையும் தருவாயில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு பணத் தட்டுப்பாடு ஒரு தடையாக இருந்து வருகிறது. பல படங்களை அடுத்தடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களிடமும் இது காணப்படுகிறது. பெட்டர்இன்வெஸ்டின் இந்த திட்டம் தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களின் வணிகங்களை திட்டமிடுவதற்கு சுதந்திரத்தை வழங்குகிறது,” என்று தெரிவித்தார்.
தொழில்நுட்ப வல்லுநர் செந்தில் நாயகம் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் இணைந்து தொடங்கியுள்ள ProducerBazaar.com திரைத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.