அயலி தெய்வத்தின் கட்டுபாடுகளை உடைத்தது சரியா?
8ஆம் வகுப்பு படிக்கும் தமிழ்செல்வி எனும் பெண்ணின் மருத்துவராக வேண்டும் என்ற கனவு தான் அயலி. மருத்துவராவதில் என்ன சிக்கல் என்றூ யோசிக்கும் போது, அவளுக்கு முன்னால் தடையாக இருப்பது கடவுளும், கலாசாரமும் தான். வீரப்பன்னை கிராமத்தில் நிலவும் பழக்கவழக்கங்கள், பருவமடைந்த உடனே சிறுமி என்று கூட யோசிக்காமல் பெண்களுக்கு உடனே திருமணம் செய்து வைக்கும் நடைமுறையை வைத்து இருக்கும் கிராமத்தை பற்றிய கதையை இடுஹ் பேசுகிறது. இந்த மரபை கடைபிடிக்காவிட்டால் அயலி தேவி கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. பழங்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களை உடைத்து, இளம் பெண் மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக போராடுகிறாள். இருப்பினும், வீரப்பன்னை கிராமத்தில் உள்ள மற்ற பெண்களை வழி நடத்தும் மாற்றத்தை அவர் கொண்டு வருவாளா? இல்லையா என்பதை நேர்த்தியான திரைக்கதை மூலமாக ஒரு விறுவிறுப்பான தொடரை கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.
சமூக நீதி பேசும் படங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தாலும், இந்த அயலி ஒரு வலுவான காரணத்தையும், பேசு பொருளையும் சமூகத்தில் முன் வைக்கிறது. பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம், பெண்கள் தன்னை சுற்றி நடக்கும் அவலங்களை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய அவசியம் என அனைத்தையும் பேசுகிறது இந்த தொடர்.
ஒரு கிராமத்திற்கு கூட்டி சென்று, அங்கு ஒரு கதையை சொல்லி, அதற்குள் நம்மை நுழைய வைத்து, அந்த தமிழ் எனும் பெண்ணின் கனவு நிறைவேற வேண்டும் என்று நம்மையும் யோசிக்க வைக்கிறார் இயக்குனர். நாம் தொடரோடு ஒன்றிப்போக காரணம், திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு, அழுத்தம் திருத்தமான வசனங்கள், இந்த மூன்றும் தான் நம்மை இந்த தொடரை ரசிக்க வைக்கிறது.
தமிழ்செல்வி எனும் பள்ளி மாணவியாக நடித்து இருக்கும் அபி தான், இந்த தொடர் முழுக்க நமது கண்களுக்கு தெரிகிறாள், ஆனால் அவர் அபி எனும் நடிகையாக தெரியவில்லை, தமிழ் எனும் மாணவியாக தான் தெரிகிறாள். முழு கிராமத்தையும் எதிர்த்து, கடவுள் நம்பிக்கையை எதிர்த்து, கலாச்சாரத்தை எதிர்த்து தன்னை மட்டும் அல்லாமல் தன் கிராமத்தில் இருக்கும் அனைவரையும் முன்னேற்ற வேண்டும் என்ற மிகப்பெரிய பாரத்தை ஒரு பள்ளி மாணவி கதாபத்திரத்தின் மேல் வைத்த எழுத்தாளரை பாராட்டியே ஆக வேண்டும். அந்த கனமான கதாபத்திரத்தை தாங்கிய அபி நட்சத்திராவையும் நாம் பாராட்ட வேண்டும்.
அனுமோல், அருவி மாதவன் என இருவரும் அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு குழந்தையின் பெற்றோர்களை போல கனகச்சிதமாக கதாபத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். TSR ஸ்ரீனிவாசன், லவ்லின், தாரா, காயத்ரி என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிக்காட்டுவதன் மூலம் கதையை மேம்படுத்தியுள்ளனர். கதை கருவின் மைய ஓட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பல கிளை கதைகளை வைத்து, அதில் அந்த கிராமத்து பெண்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை கூறி, அதன் மூலம் மையக்கதையை ஆழமாக புரிய வைக்க முயற்சித்து இருக்கிறார்கள் எழுத்தாளரும், இயக்குனரும். அந்த கிளைக்கதையின் கதாநாயகர்களாக வரும் நடிகர்களும் அதை சிறப்பாகவே செய்து இருக்கின்றனர். இது வீரப்பண்ணை கிராமத்தின் கதை அல்ல, இந்தியாவின் பல கிராமத்தின் கதைகள் என்று இந்த தொடர் தெளிவாக புரிய வைக்கிறது.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு தொடர் தான் அயலி
அயலி என்ற தொடரை Estrella stories சார்பில் தயாரிப்பாளர் S. குஷ்மாவதி தயாரிக்க, இயக்குநர் முத்துக்குமார் இயக்கி இருக்கிறார். இது எட்டு தொடர்களாக வெளியாக உள்ளது. இதில் அபி நட்சத்திரா , அனுமோல், அருவி மாதவன் , லிங்கா மற்றும் சிங்கம்புலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்,